2021 ஆம் ஆண்டு ராஜபக்‌ஷக்களுக்கே அதிகளவு நிதி ஒதுக்கீடு

கோத்தபாய ராஜபக்ச அரசின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்காக 267804 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இத்தொகையில் 78227 கோடியே 8091000 ரூபா ராஜபக்சக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதமரும் நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்சவினால் இன்று 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.40 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள கோத்தபாய ராஜபக்ச அரசின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திலேயே இத் தொகை ராஜபக்சக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச வின் ஜனாதிபதி செலவி னங்களுக்காக 934 கோடியே 5660000 ரூபாவும் அவரே பாதுகாப்பது அமைச்சராக இருப்பதனால் பாதுகாப்பு அமைச்சுக்கென 35515 கோடியே 9250000 ரூபாவும் என மொத்தமாக 36450 கோடியே 4910000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக சமல் ராஜபக்சவின் நீர்ப்பாசன அமைச்சுக்காக 4658 கோடியே 7700000 ரூபாவும் உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சுக்காக 15246 கோடியே 5042000ரூபாவுமென 19905 கோடியே 2742000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் நிதி அமைச்சுக்காக 15760 கோடியே 3715000 ரூபாவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்காக 2352 கோடியே 1199000 ரூபாவும் புத்த சாசன சமய மற்றும் கலாசார அமைச்சுக்காக 694 கோடியே 6000000 ரூபாவும் பிரதமரின் செலவினத்துக்கென 105 கோடியே 1750000 ரூபாவுமென 18912 கோடியே 2664000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

சமல் ராஜபக்சவின் மகனான ஷசீந்திர ராஜபக்சவின் நெல் மற்றும் தானியவகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழ வகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாட்டு, விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சுக்கு 1867கோடியே 0160000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மகனான நாமல் ராஜபக்சவின் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு 1092 கோடியே 7615000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையிலேயே எதிர்வரும் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 267804 கோடி ரூபா நிதியில் ராஜபக்சக்களுக்கு 78227 கோடியே 8091000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.