ஆஸ்திரேலிய அரசு தொடர்ந்து ஆஸ்திரேலிய குடிமக்களுக்கும் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கும் முன்னுரிமை வழங்கும் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ள நிலையில், இது வெளிநாட்டு மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு திரும்புவதில் மேலும் தாமதத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்பட்டுள்ளது.
அதே சமயம், ஆஸ்திரேலியாவின் வடக்கு பிரதேசத்திலும் தெற்கு ஆஸ்திரேலியாவிலும் சோதனை முயற்சியாக மாணவர்கள் அனுமதிக்கப்படுவதை இத்தாமதம் பாதிப்பை ஏற்படுத்தாது என பிரதமர் ஸ்காட் மாரிசன் கூறியிருக்கிறார்.
கொரோனா சூழலுக்கு பிறகான 7 மாதக் காலத்தில் வெறும் 300 வெளிநாட்டு மாணவர்கள் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்குள் வந்திருக்கின்றனர். கொரோனா கட்டுப்பாடுகளினால் ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்களில் சேர்ந்த 135,000 வெளிநாட்டு மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாத நிலை நிலவுகிறது.
ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி கற்பதன் மூலம் 2018- 19 நிதியாண்டில் 37.5 பில்லியன் டாலர்களை அந்நாடு ஈட்டியிருக்கிறது.
வெளிநாட்டு மாணவர்களின் பொருளாதாரப் பங்களிப்பைக் கணக்கில் கொண்டுள்ளதாகக் கூறியிருக்கும் பிரதமர் மாரிசன், தாமதப்படுத்தும் முடிவு ஆஸ்திரேலியாவிலிருக்கும் தனிமைப்படுத்தல் இட வசதியின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்திருக்கிறார்.
“தற்போதைய நிலையில், வெளிநாட்டு மாணவர்கள் அனுமதிப்பது குறித்த உறுதியை மாநிலங்களுக்கு வழங்க இயலாது. ஆனால், அடுத்த சில வாரங்களில் இது குறித்து மீண்டும் ஆராயப்படும்,” என மாரிசன் குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் எல்லைக் கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடைமுறையில் இருந்தால், அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஆஸ்திரேலியாவுக்குள் வருவதற்காக காத்திருக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 3 லட்சமாக உயரும் என Mitchell நிறுவனம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது ஏற்கனவே நிதி சிக்கல்களை எதிர்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கல்வித்துறையை கடுமையாகப் பாதிக்கும் எனக் கருதப்படுகின்றது.
Eelamurasu Australia Online News Portal