மரணமடைந்த ஒருவரின் அஸ்தியை, நீர்நிலைகளில் கரைப்பது உலக வழக்கம்.
ஆனால் சிலர், மனித அஸ்தியை ஆபரணமாக்கி, அழகு பார்க்க விரும்புகின்றனர்.
காரணம் என்ன? அழகழகாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் வைரக் கற்கள்.
இவை மண்ணில் விளைந்தவை அல்ல.
மனித அஸ்தியைக் கொண்டு தட்டித் தட்டிச் செய்யப்பட்ட வைரக் கற்கள்.மண்ணில் புதையுண்ட கரி வைரமாக மாற பல்லாயிரம் ஆண்டுகள் ஆகலாம்.
ஆனால் மனித அஸ்தி வைரமாக உருமாற்ற சில வாரங்கள் போதும்.முதலில் மனித அஸ்தியிலிருந்து கரி கவனமாகப் பிரித்தெடுக்கப்படும்.
பிறகு அது இந்த மின்னுலையில் வைக்கப்படும்.
1400 டிகிரி செல்சியஸ் வெப்பம்.
1600 டன் அழுத்தம்.
சற்று நேரத்தில் கரி வைரமாக புத்துருவம் பெறும்.
மனித அஸ்தியின் சராசரி எடை இரண்டரை கிலோ.
வைரம் செய்ய அரைக் கிலோ அஸ்தி போதும்.
சுவிட்சர்லந்து மலையில் அமைந்துள்ளது வைரம் தயாரிக்கும் நிறுவனம்.
வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப வைரத்தை வடிவமைத்துக் கொடுக்கிறது அந்த நிறுவனம்.
அஸ்தியிலிருந்து பெறப்பட்ட வைரத்தின் பெயர் Algordanza.
தொன்மையான சுவிட்சர்லந்து மொழியில் அதற்கு “நினைவு” என்று பொருள்.
மனித அஸ்தியை ஆபரணமாக மாற்றுவதை “சமயங்கள்” சில தடை செய்துள்ளன.
ஆனால், ‘காலஞ்சென்ற’ தம் அன்புக்குரியோர் ‘காலம் முழுவதும்’ தம்மோடு இருக்க வேண்டுமென விரும்புகின்றனர் சிலர்.
வைரமாவதை விட மண்ணுக்கு உரமாவதே சிறப்பு என்போரும் உள்ளனர்.
ஓர் Algordanza வைரத்தின் விலை சுமார் ஐயாயிரம் சுவிஸ் ஃபிரான்க்.
தேவையான வடிவத்தைப் பொறுத்து விலை மாறுபடலாம். கரி வைரமாக மாற்றப்பட்ட பிறகு நிபுணர் ஒருவர் அதைப் பரிசோதித்துப் பார்த்துச் சான்று வழங்குவார்.
வைரத்தின் எடை, வண்ணம், வடிவம் ஆகியவற்றுக்கு அதுவே தரமுத்திரை. “மீள முடியாத நித்திரைக்கு இப்படியொரு ஒரு முத்திரை”.