ஊஞ்சல் கயிறு கழுத்தில் சிக்கி இறுகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் காவல் துறை தெரிவித்துள்ளனர்.
கோயில் வீதி, யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த உஜிதன் சாதுரியா (7 வயது) எனும் யாழ். பொஸ்கோ வித்தியாலயத்தில் தரம் 2இல் கற்கும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த மூன்றாம் திகதி இந்தச் சிறுமி ஊஞ்சலாடுவதற்காக மரத்திலிருந்த ஊஞ்சல் கயிற்றை கதிரையில் ஏறி எடுக்க முற்பட்டுள்ளார். இதன்போது கயிறு தவறுதலாக சிறுமியின் கழுத்தில் சிக்கிய நிலையில் அவர் ஏறி நின்ற கதிரையும் சரிந்துள்ளது. இதனால் சிறுமி நிலை தடுமாறி விழுந்ததில் கயிறு கழுத்தை இறுக்கியுள்ளது.
இந்நிலையில் சத்தம் கேட்டு வீட்டிலிருந்து வெளியில் வந்த தாய், மகள் கயிற்றில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிறுமி உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணையை வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்ட நிலையில் உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal