இலங்கையிலிருந்து வந்து ஆஸ்திரேலியாவில் குடியேறிய குடும்பமொன்றின் பிரதான விண்ணப்பதாரி மரணமடைந்ததையடுத்து அக்குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்கள் நாடுகடத்தப்படும் நிலையை எதிர்கொண்டுள்ளனர்.
ராஜ் உடவத்த, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் Kempsey பகுதியில் தற்காலிக வேலை விசா ஒன்றின்கீழ், தனது மனைவி மற்றும் 4 பிள்ளைகளுடன் குடியேறியிருந்தார்.
எனினும் 2018ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ராஜ் சிகிச்சை பலனின்றி கடந்த செப்டம்பர் மாதம் மரணமடைந்தார்.
புற்றுநோய் பாதிப்பிற்குள்ளானதால் தொடர்ந்தும் வேலை செய்யமுடியாத நிலைக்குத்தள்ளப்பட்ட ராஜ், வேலை விசாவிற்கான முக்கிய நிபந்தனையை பூர்த்திசெய்ய முடியாத நிலைக்குள்ளானார்.
இதையடுத்து நாடுகடத்தப்பட்டுவிடுவோமா என்ற அச்சத்தில், மாணவர் விசாவிலுள்ள மூத்த மகளைத் தவிர, ஏனையவர்கள் தஞ்சக்கோரிக்கை விண்ணப்பத்தை தாக்கல் செய்திருந்தனர்.
ஆனால் ராஜ் மரணமடைந்த ஒரு மாதத்தில், இக்குடும்பத்தின் தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டதாக குடிவரவு அமைச்சு அறிவித்துள்ளது.
இத்தீர்மானத்திற்கெதிராக மேன்முறையீடு செய்யலாம் அல்லது ஒருமாதத்திற்குள் நாட்டைவிட்டு வெளியேறலாம் என்ற தெரிவையும் குடிவரவு அமைச்சு வழங்கியுள்ளது.
கல்வி கற்றுக்கொண்டிருக்கும் பிள்ளைகளுடன் கணவனையும் இழந்து நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தனக்கு ஆஸ்திரேலிய அரசு கருணைகாட்ட வேண்டுமெனவும், தொடர்ந்தும் Kempsey பகுதியிலேயே தங்கியிருக்க அனுமதிக்க வேண்டுமெனவும் திருமதி உடவத்த கோரிக்கை விடுத்துள்ளார்.