இலங்கைக்கான புதிய அரசியல் யாப்பின் மூலம் மலையக மக்களுடைய அரசியல் அபிலாஷைகள்¸ அடிப்படை உரிமைகள்¸ இனத்துவ இருப்பு மற்றும் தனித்துவ அடையாளங்கள் என்பனவற்றைப் பாதுகாக்கக்கூடிய சரத்துகளை இணைத்துக் கொள்வதற்கான முன்மொழிவுகளை முன்வைக்கவுள்ளதாக போராதனை பல்கலைகழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் எஸ்.விஜேசந்திரன் கூறுகின்றார்.

இலங்கையில் புதிய அரசியல் யாப்பொன்றை உருவாக்குவதற்கு நிபுணர்கள் உள்ளடங்கிய குழுவொன்றை இன்றைய அரசு நியமித்துள்ளது. அக்குழு இலங்கை மக்களிடமிருந்து முன்மொழிவுகளை இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன் கோரியுள்ளது.
இந்நிலையில்¸ புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு மலையக மக்கள் தொடர்பான முன்மொழிவுகளை முன் வைப்பதற்கு மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் பேராசிரியர் எஸ்.விஜேசந்திரன் மற்றும் மலையக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் ஏ. லோரன்ஸ் உட்பட ஒரு குழுவை மலையக மக்கள் முன்னணியின் மத்தியகுழு நியமித்துள்ளதாகவும்¸ அக்குழு மலையகத்திலுள்ள பல்வேறு சமூக அமைப்புகள்¸ அரசியல் இயக்கங்கள்¸ அரசியல் நிபுணர்கள் குழு என்பனவற்றுடன் கலந்தாலோசித்து¸ அவர்களின் கருத்துகளையும் உள்ளடக்கி புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கான நிபுணர்கள் குழுவிற்கு சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் பேராசிரியர் கருத்து தெரிவிக்கையில்,
“நான் ஏற்கனவே இயங்கிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பான 2006ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை சர்வகட்சி பிரதிநிதி குழுவிலும் 2015-2016 ஆண்டு காலப்பகுதியில் நியமிக்கப்பட்ட அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கான பொதுமக்கள் கருத்தறியும் குழுவிலும்¸ அதற்குப் பிறகு ஏற்படுத்தப்பட்ட மாகாண சபைக்கான தேர்தல் தொகுதிகளை நிர்ணயிப்பதற்கான எல்லை நிர்ணயக் குழுவிலும் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான எல்லை நிர்ணயக் குழுவிலும் அங்கத்தவராகவும் மலையக மக்களின் பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டிருந்தேன்.
இக்குழுக்களின் அறிக்கைகளில் மலையக மக்களின் அரசியல் அபிலாஷைகளையும் கோரிக்கைகளையும் கருத்திற்கொண்ட பல்வேறு சரத்துகளை உள்ளடக்கியிருந்தோம். எமது இம்முயற்சிக்கூடாக இலங்கையில் 14 மாவட்டங்களில் வாழும் மலையக மக்களுடைய சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகள் மற்றும் அதற்கான நிரந்தர தீர்வுகளை உள்வாங்கக்கூடிய அரசியல மைப்பை கட்டியெழுப்புவதற்கான சீர்த்திருத்தங்களை மேற்கொள்ளவும் மற்றும் அடிப்படை உரிமைகளில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கும் ஏற்ற வகையிலான சிபாரிசுகளை மேற்கொள்வதும் தங்களுடைய இலக்காக இருப்பதாகவும் பேராசிரியர் விஜேசந்தின் குறிப்பிட்டார்.
எனவே¸ இந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு மலையக மக்களுடைய அரசியல் அபிலாஷைகளையும் பிரதிநிதித்துவங்களைப் பாதுகாக்கும் வகையில்¸ இலங்கையில் புதிய அதிகார பரவலாக்கம் நடக்கின்ற போது மலையக மக்களை உள்வாங்கிக் கொள்வதற்கான சரத்துகளையும் மலையக மக்களுடைய மொழிப் பயன்பாடு¸ மொழி உரிமையைப் பாதுகாக்கக்கூடிய விடயங்கள், மலையக மக்களின் ஜீவனோபாயத்திற்கான காணி உரிமைகள் மற்றும் அவர்களுடைய தனித்துவ கலாசாரங்களைப் பேணக்கூடிய விடயங்களையும் மலையக மக்கள் வாழும் பிரதேசங்களை அதிகாரப் பரவலாக்களுக்கும் மற்றும் நிர்வாக பன்முகப்படுத்தல் செயல் முறைக்குள் உள்வாங்கக் கூடியவாறான விடயங்களைக் கருத்திற் கொண்டதான முன்மொழிவுகளை அரசியல் யாப்பு சீர்திருத்திற்கான நிபுணர்கள் குழுவுக்கு வழங்கவுள்ளோம்.
மேலும் புதிய பிரதேச செயலகப் பிரிவுளை உருவாக்குதல்¸ மலையக மக்கள் பிரதானமாக வாழும் தோட்டப் பிரதேசங்களில் பொதுநிர்வாக கட்டமைப்புகள் உள்வாங்குதல்¸ மலையக மக்கள் வாழும் தோட்டப் பிரிவுகளை கிராமங்களாக அங்கீகரித்து கிராமிய நிர்வாக செயற்பாடுகளுக்குள் கொண்டுவரல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் முன்மொழிவுகள் முன்வைக்கப்படவுள்ளன. அதற்கு மேலாக மலையக இளைஞர்களை தேசிய அபிவிருத்தி நீரோட்டத்துக்குள் ஒன்றிணைக்கும் வகையில் ஒரு மலையக சமூக கட்டமைப்பை கட்டியெழுப்பக் கூடிய விடயங்களும் கவனத்திற்கொள்ளப்படும்.
இலங்கையிலே நிலவும் இனப் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தக்கூடிய வகையில் சிறுபான்மை மக்களான மலையகத் தமிழர்கள், வடகிழக்குத் தமிழர்கள், முஸ்லிம் மக்கள் ஆகிய அனைவரதும் அரசியல் அபிலாஷைகளையும் அரசியல் கோரிக்கைகளையும் உள்ளடக்கக்கூடிய வகையில் அதிகாரப் பரவலாக்கமொன்று மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் மற்றும் அதற்கான அரசியல் கட்டமைப்பு போன்ற பல்வேறுப்பட்ட விடயங்கள் ஆராயப்பட்டு சிபார்சுகளை முன்வைப்பதோடு¸ இலங்கையில் ஜனநாயகத்தை மீளக் கட்டியெழுப்புதல்¸ நீதித்துவத்தையும் பேணுதல்¸ நீதியின் ஆட்சியை நிலைநாட்டுதல் திறன்மிக்க பொதுநிர்வாகத்தைக் கட்டயெழுப்புதல்¸ நல்லாட்சி முறையை உருவாக்குதல் போன்ற தேசிய விடயங்கள் ஆராயப்பட்டு அது தொடர்பான சிபார்சுகளும் வழங்கப்படவுள்ளன” என்றார்.
நன்றி = தினக்குரல்
Eelamurasu Australia Online News Portal