தமிழ்த் தேசியத்தின் திரிசங்கு நிலை

2020பொதுத்தேர்தலின் பின்னரான சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசுக்கட்சிக்குள் ஏற்பட்டிருந்த சேனாதிராஜா சுமந்திரன் அணி  முரண்பாடுகளும், அதனால் அக்கட்சியின் தலைவராக இருக்கும் மாவை.சோ.சேனாதிராஜாவுக்கும், சுமந்திரன், சிறிதரன் போன்றவர்களுக்கும் ; இருந்த அரசியல் உறவில் ஏற்பட்ட வெடிப்புக்களும் ; பகிரங்கமானவை.

சேனாதிராஜா தேர்தலில் பின்னடைவுகளைச் சந்தித்திருந்த சொற்பகாலத்திலேயே தமிழரசுக்கட்சியின் தலைவர் பாத்திரத்திலிருந்தும் அதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய அரசியலில் இருந்தும் அகற்றப்படவுள்ளரா? என்ற சூழல் ஏற்பட்டிருந்தது. இத்தருணத்தில் ;வீழ்வேன் என்று நினைத்தாயோ ; என்று பதிலுரைத்து அவர் வீறு கொண்டு எழுவதற்கு, திலீபனின் நினைவேந்தல் அடித்தளமிட்டது.

திலீபனின் நினைவேந்தலுக்கு அரசதரப்பால் ஏற்படுத்தப்பட்ட திட்டமிட்ட தடைகளுக்கு எதிராக தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து உண்ணாவிரதப் போராட்ட தளத்திற்கு கொண்டுவருவதற்கு சேனாதிராஜா என்ற தனி மனிதனின் அரசியல் முதிர்ச்சியைக் கடந்த கீழிறங்கிச் செல்லும் மனோநிலையே வித்திட்டது.

இது, ஒருவேளை அவருடைய அரசியல் எதிர்காலத்திற்கான காய்நகர்த்தலாக இருக்குமோ என்ற ஐயப்பாடு வலுத்திருந்த நிலையில், திலீபனின் நினைவேந்தலைத் தொடர்ந்தும் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள கட்சிகள் ஒன்றிணைந்து பயணிப்பதற்குரிய ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அது காலத்தின் தேவையும் தான்.

சேனாதிராஜாவின், விருப்பிற்கு சி.வி.கே.சிவஞானம் செயல்வடிவமளிக்க தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள தமிழரசுக்கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் கூட்டணி, ஈழமக்கள் புரட்சிகர முன்னணி, ரெலோ, புளொட், தமிழ்த் தேசியக் கட்சி, ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகம், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஆகியவற்றுக்கு நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் ஒருங்கிணைவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டது.

அழைக்கப்பட்ட தரப்புக்களின் ஒன்றான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி திலீபனின் நினைவேந்தலுக்கான ஒட்டுபட்ட செயற்பாடுகளின் பின்னர் ஒருங்கிணையும் தளத்தில் பிரசன்னமாகுவதற்கு விரும்பவில்லை. ;கொள்கை முரண்பாட்டை வலுவான காரணமாக முன்வைத்தது.

அதுமட்டுமன்றி, முன்னதாக ;தாம் மாற்றுத் தலைமையாக வந்துவிடக்கூடாது என்பதற்காகவே கடந்த தேர்தலில் கூட்டமைப்பில் பிளவடைந்த தரப்புக்கள் ஒருங்கிணைந்து போட்டியிடுகின்றன. தேர்தல் நிறைவடைந்ததும் அவை மீண்டும் ஒன்றிணைந்து விடும். சம்பந்தன் அணிக்கும் விக்கி அணிக்கும் வேறுபாடுகளே இல்லை ; என்று பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர் கஜேந்திரகுமார்.

தற்போதைய சூழலில் தான் முன்பே கூறிய விடயங்கள் செயல்வடிவம் பெற ஆரம்பித்திருக்கின்றன. கூட்டமைப்பிலிருந்து வெளியே வந்த அனைத்து தமிழ்க் தரப்புக்களும் மீண்டும் ஒன்றுபடுகின்றன. இந்த தரப்புக்கள் அனைத்துமே ;கொள்கை ; விடயத்தில் ;மோகமும் கொழுக்கட்டையும் ; தான். அந்தவகையில் ஒருங்கிணைந்த கட்சிகளுடன் தாமும் இணைவது சாத்தியமல்லாத விடயமென்றும் தடலாடியாக கூறிவிட்டார் கஜேந்திரகுமார்.

கஜேந்திரகுமாரின் இத்தகைய பிரதிபலிப்பால் அவர் தரப்பு தவிர்ந்த ஏனைய தமிழ்த் தேசியக் தரப்பினரின் பிரசன்னத்துடன் அடுத்தடுத்த கூட்டங்கள் நடைபெற்றன ;இதேநேரம், பொதுத்தேர்தல் பிரசாரத்தின்போதும், தேசியப்பட்டியல் விடயத்திலும் சேனாதிராஜாவுக்கும், சுமந்திரனுக்கும் ஏற்பட்ட ;மோதல் ; சேனாதிராஜாவுக்கு தமிழரசுக்கட்சிக்குள்ளும், வெளியிலும் ஆதரவுக்கரங்கள் நீளுவதற்கு வழிவகுத்திருந்தது.

குறிப்பாக, சேனாதிராஜா, சுமந்திரன் மோதலே தமிழரசுக்கட்சியின் வவுனியா மத்திய குழுக் கூட்டத்தில் சேனாதிராஜாவுக்கு ஆதரவாக குரல்கள் ஒலிக்கவும், செயலாளரை பதவி துறக்கும் முடிவெடுப்பதற்கான அழுத்தங்களையும் ஏற்படுத்தியிருந்தது. சுமந்திரனுடனான மோதலே தனக்கு பலமான தளமொன்றை அமைத்;திருகின்றது என்பதை தமிழ் இளைஞர் பேரவையின் ஊடாக பிரவேசித்து தற்போது வரையில் விடுதலை அரசியல் செயற்பாட்டிலிருக்கும் சேனாதிராஜா உணராதவர் அல்ல.

எனினும் சேனாதிராஜா, சுமந்திரனின் சிறுப்பிட்டி விருந்துபசார நிகழ்வில் பங்கேற்றார். ஒற்றுமைக்காகவே கசப்புக்களை கடந்து சென்றதாக கூறினார். சி.வி.கே.சிவஞானம், குலநாயகம், பரஞ்சோதி, கே.வி.தவிராசா, சரவணபவன், உட்பட பல கிழக்கு உறுப்பினர்கள் என்று சேனாதிராஜாவின் அணியில் இருந்த அனைவரும் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்தனர். அமைதி காத்தனர். செய்வதறியாது கையைப் பிசைந்து கொண்டு நின்றனர்.

தமிழரசுக்கட்சிக்குள் இவ்விதமான நிலைமை இருக்கையில் ஒருங்கிணைந்த தமிழ்க் கட்சிகளுக்கும் சேனாதிராஜாவின் மீதான நம்பிக்கை குறித்து தர்மசங்கடமொன்று ஏற்பட்டது. அதுமட்டுமன்றி இறுதியாக இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசிய கட்சிகளின் ஒருங்கிணைவுக் கூட்டத்தில் தமிழரசுக்கட்சியின் வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரசன்னமாகினர்

குறிப்பாக சுமந்திரன், ஸ்ரீதரன் பிரசன்னமாகினார்கள். இதில் சுமந்திரன் விசேட அதிரடிப்படை பாதுகாப்புடன் பிரசன்னமாகியதால் ஏற்பட்ட ;ஒவ்வாமை காரணமாக கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பே அனந்தி சசிதரன் திடீரென வெளியேறினார். ஏனைய தரப்பினர் அதிர்ச்சியில் உறைந்திருந்தனர்.

கட்சித்தலைவர்கள், செயலாளர்கள் பங்கேற்கும் கூட்டத்திற்கு சுமந்திரன், சிறிதரன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏன் அழைக்கப்பட்டார்கள் என்ற தர்க்கம் அனந்தியால் முன்வைக்கப்பட்டது. ஏனைய தரப்புக்களும் சேனாதிராஜாவிடம் விளக்கம் கோர முஸ்தீபு செய்தன.

அதேநேரம், சிறிகாந்தாவும், சுமந்திரனும் முன்பின்னாக மண்டபத்திற்குள் பிரவேசித்தமை கூட சந்தேகத்துடன் நோக்கப்பட்டது. தனது முயற்சியில் ஒருங்கிணைந்துள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளின் தளத்தில் இந்த அளவிற்கு சுமந்திரன் வெறுப்பு ; மனோநிலை இருக்கின்றது என்பதை சேனாதிராஜா அப்போதாவது உணர்ந்திருப்பாரோ தெரியவில்லை.

கிழக்கு மாகாணத்தினையும் உள்ளீர்ப்பதற்காகவே பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டார்கள் என்று கேள்விக்கணைகளுக்கு முன்னதாகவே சேனாதிராஜா தன்னிலை விளக்கம் அளித்துவிட்டார். அதேநேரம், அந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் வெறும்  பார்வையாளர்களாகவே  பங்கேற்று சென்றிருந்தார்கள்.

இவ்வாறான நிலைமைகளையெல்லாம் கடந்து ஒருவாறு ஒருங்கிணைந்துள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள் நிறுவன ரீதியாக கட்டமைப்பொன்றை ஸ்தாபிப்பதற்கு குழுவொன்றை நியமிப்பதென தீர்மானித்தன. அந்தக்குழு கூடி கட்டமைப்பு உள்ளிட்ட இதர செயற்றிட்டங்களை வெளிப்படுத்துவது தான் அடுத்த கட்டச் செயற்பாடாக இருக்கின்றது.

நிலைமைகள் சுமூகமடைந்தன என்று நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள் அடுத்து நடைபெற்ற நிகழ்வுகள் மீண்டும் தமிழ்த் தேசிய பரப்பில் குட்டையை குழப்பியிருக்கின்றன. அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்களான சேனாதிராஜா, சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் சந்திப்பொன்றை நடத்தியிருக்கின்றனர்.

இதன்போது, கூட்டமைப்புக்கு வெளியே உருவாகிவரும் தமிழ் கட்சிகளின் ஒருங்கிணைவு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களை மீண்டும் கூட்டமைப்பிற்குள் உள்ளீர்ப்பதே பொருத்தமானது. அதுவே கூட்டமைப்பினையும் வலுப்படுத்தும் என்று சேனாதிராஜாவுக்கு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அறிவுரை வழங்கியதாக தகவல்.

அதுமட்டுமன்றி அவர்கள் ; மக்களால் நிராகரிக்கப்பட்டு இருக்கின்றார்கள் என்பதையும் கூட்டமைப்பின் தலைவர் சேனாதிராஜாவுக்கு சுட்டிக்காட்டியிருக்கின்றார். இருந்தபோதும், ;ஒருங்கிணைந்த கட்சிகளை மையப்படுத்தி கூட்டொன்றை அமைக்கும் செயற்பாட்டை கைவிடப்போவதில்லை ; என்று சேனாதிராஜா திடமாக பதிலளித்திருக்கின்றார் என்றும் கூறப்படுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனைப் பொறுத்தவரையில், தமிழர் தரப்பு ஒற்றுமையை அவர் விரும்பினாலும், அந்த ஒற்றுமை என்பது கூட்டமைப்பு என்ற வட்டத்திற்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும் என்பதையே அதிகமாக விரும்புகிறார்.

ஆகவே தனது ;தலைமைக்கு சமாந்தரமாக கூட்டமைப்பிற்கு வெளியில் ;தலைமையொன்று உருவாகுவதை அவர் நிச்சயமாக விரும்பமாட்டார் என்பதை உய்த்தறிந்து கொள்ளலாம். ; ஆகவே கூட்டமைப்பிற்கு வெளியில், பிறிதொரு அரசியல் கூட்டும் தலைமையும் உருவாகமல் தடுப்பதற்குரிய வழிவகைகளை மேற்கொள்ளாது அமைதியாக இருப்பார் என்று எதிர்பார்க்க முடியாது

ஆர்.ராம்