மெல்போர்னில் ஏழை எளிய மக்களுக்கு தினமும் இலவசமாக உணவு வழங்கும் சமையல் கலைஞர்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஒருவர், அவுஸ்திரேலியாவில் வறுமையில் வாடும் மக்களுக்கு இலவசமாக உணவு கொடுத்து வருவது, பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் கொரோனா நெருக்கடி காலத்தில் ஆதரவற்றோருக்கு தமான் ஸ்ரீவஸ்தவ் என்ற 54 வயது நபர் செய்துவரும் உதவி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்திய வம்சாவளி சமையல் கலைஞரான இவர், ஏழை எளிய மக்களுக்கு தினமும் இலவசமாக உணவு வினியோகித்து வருகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், வீடற்ற மக்களுக்கு உணவு வழங்குவது இது புதிதல்ல. ஈராக்கில் வளைகுடா போரின்போதும் இதே பணியை செய்தேன்.

போரின்போது ஏற்பட்ட சூழலும் இப்போது ஏற்பட்டுள்ள சூழலும் ஒரே மாதிரிதான். ஏராளமான மக்கள் வேலைகளை இழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோருக்கு வாழ்வாதாரம் பறிபோயுள்ளது.

உணவு அனைவரின் உரிமை. நானும் வறுமையில் வாடியுள்ளேன். அவுஸ்திரேலியாவுக்கு வந்த துவக்கத்தில் எனக்கும் தங்க வீடு இல்லை. அப்போது எனக்கு ஏற்பட்ட உணர்வு தான். என்னை இந்த பணியை செய்ய வைத்துள்ளது.

தினமும் என் மனைவி மற்றும் மகளுடன் இணைந்து 150 உணவு பொட்டலங்களை தயார் செய்வேன். பின் ஆதரவற்றோருக்கு அவற்றை காரில் சென்று வினியோகிப்பேன். எனக்கு பலரிடம் இருந்து உதவிகள் கிடைக்கின்றன. கடந்த நான்கு வாரங்களில் 6.8 லட்சம் ரூபாய் நிதி திரட்டியுள்ளேன். இந்த கொரோனா தொற்று காலம் முடிவுக்கு வந்தாலும் இந்த தொண்டு சேவையை தொடர்ந்து செய்வேன் என்று கூறியுள்ளார்.