கொழும்பு நகரத்துக்கு வருகை தருவதை முடிந்த வரை குறைத்துக்கொள்ளுமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்தியாவசியத் தேவைகளைத் தவிர ஏனைய விடயங் களுக்காகக் கொழும்பு நகரத்துக்கு வருகை தருவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இன்று அதிகாலை 5 மணிக்குத் தளர்த்தப்பட்ட போதிலும் மாவட்டங்களுக்கு இடையிலான பயணங்களைத் தொடர்ந்து தவிர்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை மீறி நடந்தால் கொரோனா தொற்றாளர்களைத் தவிர்க்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மிகவும் ஆபத்தான பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் ஏனைய பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் இல்லை என்பது அதன் அர்த்தம் அல்ல. எனவே நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளைக் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும்.
நாட்டை மூடிவிட்டால் மக்களின் அன்றாட நடவடிக்கையில் பாதிப்பு ஏற்படும்.
ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பது கடினம். எனவே இதனைக் கருத்திற்கொண்டு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அத்துடன், கொழும்பு வருகை தருவதை இயன்ற வரை தவிர்க்கவும். இந்தச் சந்தர்ப்பத்தில் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal