நாட்டிற்குள் திரும்பும் குடிமக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா இவ்வாண்டு இறுதிக்குள் தாயகம் திரும்ப மேலும் அதிகமானோருக்கு அனுமதி வழங்கவிருக்கிறது.

COVID-19 நோய்த்தொற்று காரணமாகக் கடந்த ஜுலை மாதம் முதல் ஆஸ்திரேலியா அதன் குடிமக்களும் நிரந்தரவாசிகளும் நாட்டிற்குள் வருவதைக் கட்டுப்படுத்தியது.

வாரத்திற்கு 6,315 பேர் மட்டும் தான் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது மேலும் 450 பேர் தாயகம் திரும்பலாம்.

புதிதாக நோய்ப்பரவல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக வெளிநாட்டிலிருந்து ஆஸ்திரேலியா திரும்பும் குடிமக்களின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்துள்ளதாகப் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்தார்.

இருப்பினும் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் வெளிநாடுகளில் தவிப்பதால் அந்த எண்ணிக்கை சற்றே உயர்த்தப்படுகிறது என்றார் அவர்.

தனிமைப்படுத்தப்படும் வசதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுத்துவருவதாகத் திரு மோரிசன் கூறினார்.

வெளிநாடுகளிலிருந்து ஆஸ்திரேலியா திரும்பியவர்களால் விக்டோரியா மாநிலத்தில் நோய்ப்பரவல் அதிகரித்தது.

அதனால் அம்மாநிலத்தில் முடக்கநிலை, இரவுநேர ஊரடங்கு எனப் பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

தற்போது நிலைமை கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுக்குள் வந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுமார் 27,600 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 907 பேர் மாண்டனர்.