முஸ்லிம்களின் ஜனாஸாக்களைப் புதைக்க மறுக்கும் ஒரு நாட்டில் வைரசுக்குக் கழிப்புக் கழித்த அமைச்சர்

டந்த பௌர்ணமி தினத்தன்று யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு ஓர் ஆசிரியர் தனது மகளோடு பயணம் செய்து கொண்டிருந்தார். தென்மராட்சியில் ராணுவ தளங்களுக்கு முன்னே பௌத்த மதக் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன. அதைப் பார்த்துவிட்டு மகள் தகப்பனிடம் கேட்டாள் “இந்த ராணுவத்தில் வேறு மதத்தவர்கள் இல்லையா?” என்று. “இருக்கிறார்கள் இப்போது உள்ள தளபதி ஒரு கத்தோலிக்கர் தான்” என்று அவர் கூறினார். “அப்படி என்றால் ஏனைய மதத்தவர்களின் புனித நாட்களின் போது அவர்களுடைய கொடிகளையும் சின்னங்களையும் முகாம்களின் முன் கட்டுவார்களா?” என்று மகள் கேட்டாள் “ இல்லை அப்படி நான் பார்த்ததில்லை” என்று தகப்பன் சொன்னார். “அப்படி என்றால் ராணுவத்தில் வேலை செய்யும் பௌத்தர்கள் அல்லாதவர்கள் இதைப்பற்றி கேள்வி கேட்க மாட்டார்களா?” என்று மகள் கேட்டாள். இது ஒரு பத்தாம் ஆண்டு மாணவியின் கேள்வி.

இலங்கை தீவில் பௌத்த மதச் சின்னங்களும் கொடிகளும் குறியீடுகளும் மதப் பல்வகைமையின் செழிப்பான அடையாளங்களாக முன்னிறுத்தப்படுவதில்லை. மாறாக மத மேலாண்மையின் சின்னங்களாகவும் கொடிகளாகவும் அவை மாறிவிட்டன. அவை பல்லினத் தன்மைக்கும் பல்சமய பண்புக்கும் எதிரான கொடிகளும் சின்னங்களும்தான். ரவூப் ஹக்கீம் முன்பொருமுறை சொன்னார்…”புத்தர் சிலைகளை எல்லைக் கற்களாக நடுகிறார்கள்” என்று.கன்னியா வென் நீரூற்றில் நீராவிப்பிட்டியில் இதுதான் நடக்கிறது.

ஆனால், இவ்வாறு முகாம் வாசல்களிலும் விகாரைகளும் தொங்க விடப்படும் கொடிகளில் பெரும்பாலானவை உள்நாட்டில் தயாரிக்கப்படுவதில்லை. அவை வெளிநாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன.

“நாட்டின் தேசியக் கொடி மற்றும் பௌத்த கொடி ஆகியவற்றின் தேவையினை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது பூர்த்தி செய்வதற்கு தனது அமைச்சு தயாராக உள்ளதாக பத்திக், கைத்தறி மற்றும் உள்நாட்டு சுதேச ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேககர என்னிடம் உறுதியளித்தார். தேசிய கொடி மற்றும் பௌத்த கொடிகளை வெளி நாடுகளில் உற்பத்தி செய்து இறக்குமதி செய்வதற்காக வருடாந்தம் பெருந்தொகை அந்நியச் செலாவணி செலவிடப்படுகின்றுது. அடுத்த வருடம் முதல், தேவையான கொடிகளை உயர் தரத்துடன் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு பத்திக் மற்றும் கைத்தறித் துறையில் உள்ள உற்பத்தியாளர்கள் தயாராக உள்ளனர் என்பதனை அமைச்சர் எனக்கு அறியத் தந்தார்”. இவ்வாறு கோட்டாபய ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். பௌத்த கொடிகள் மட்டுமல்ல இலங்கைத் தீவின் தேசியக் கொடியும் அவ்வாறு வெளிநாடுகளில்தான் தயாரிக்கப்படுகிறது. அதை நிறுத்தி உள்நாட்டிலேயே தேசியக் கொடியையும் பௌத்தமத கொடிகளையும் தயாரிக்க வேண்டும் என்று அவர் தனது அமைச்சருக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

அவருடைய மற்றொரு அமைச்சரான பவித்ரா வன்னியாராச்சி அண்மையில் ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு காரியத்தைச் செய்தார். கோவிட்-19ஐ அகற்றுவதற்காக பிரித் ஓதி சேகரிக்கப்பட்ட நீரை அவர் ஆறுகளில் கரைத்தார். அவரோடு வேறு சில அமைச்சர்களும் இவ்வாறு வைரசுக்கு கழிப்புக் கழித்தார்கள். இது சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பரவலாக விமர்சிக்கப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு கோவிட்-19 முதலாவது தொற்று அலையின் போதும் இவ்வாறு பிரித் ஓதப்பட்ட மந்திர நீர் போத்தல்களில் சேகரிக்கப்பட்டு ஹெலிகாப்டர்கள் மூலம் நாடு முழுவதும் தெளிக்கபட்டதாக தகவல்கள் வெளிவந்தன. அது தொடர்பான காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன. கடந்த மார்ச் மாதம் சாமர சம்பத் என்ற ஓர் அரசியல்வாதி தம்பணவில் உள்ள வேடர்களின் கிராமத்தில் “கிரி கொரஹா” என்று அழைக்கப்படும் ஒரு சடங்கை ஒழுங்கு படுத்தியிருந்தார். அது கொரோனா வைரசிடமிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு என்று கூறபட்டது. அதில் தனி ஆள் இடைவெளி பேணப்படவில்லை என்று டுவிட்டரில் விமர்சிக்கப்பட்டது.

அண்மையில் இரண்டாவது தொற்று அலை பரவத் தொடங்கிய போது எல்லா மதப் பிரிவுகளையும் சேர்ந்த தலைவர்கள் கொரோனா வைரசின் தாக்கத்திலிருந்து நாட்டைக் காக்கும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டார்கள்.கடந்த புதன் கிழமை கிளிநோச்ச்சியில் ஒரு கோவிலில் வைரஸ் தொற்றிலிருந்து விடுபடுவதற்காக விசேட யாகம் ஒன்று ஒழுங்கு செய்யபட்டது. இவ்வாறு ஆலயங்களில் யாகங்களையும் விசேட பிரார்த்தனைகளையும் ஏற்பாடு செய்யுமாறு நாட்டின் பிரதமர் மகிந்த கோரிக்கை விடுத்திருக்கிறார். அயல் நாடாகிய இந்தியாவில் பிரதமர் மோடி வைரசை வெற்றி கொள்ள வீடுகளில் ஒளி ஏற்றும்படியும் மக்களை ஒலி எழுப்பும்படியும் கேட்டுக் கொண்டார். அதாவது கோவிட்- 19க்குப் பின்னரும் உலகில் கடவுள் நம்பிக்கையும் மதங்களுக்கான தேவையும் குறையவில்லை.முதலாவது தொற்று அலையின் போது மதங்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. யாழ்பாணத்தில் ஒரு சுவிஸ் போதகர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.ஆனால் இரண்டாவது தொற்று அலையின் போது வைரசிடமிருந்து பாதுகாப்பைத் தேடி மதங்களை நோக்கிப் போகிறதா சமூகம்?

இவ்வாறு வைரசுக்கு எதிராக- அதாவது வெல்லக் கடினமான ஒரு எதிரிக்கு எதிராக – கடவுளைச் சரண் அடைவது அல்லது மந்திர தந்திரங்களைச் சரணடைவது என்பது இலங்கைத் தீவில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒன்றுதான். யுத்த காலங்களில் மரண பயம் காரணமாக அரசாங்கத்தின் பிரதானிகளும் சாதாரண சிப்பாய்களும் இவ்வாறு பிரித் ஓதி நூல்களைக் கட்டுவதும் மந்திரத் தாயத்துகளை இடுப்பிலும் கைகளிலும் அணிந்து கொள்வதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ராஜபக்ச குடும்பத்தவர்கள் வெளிப்படையாகவே தங்கள் கைகளில் மந்திரித்த கயிறுகளை அணிந்திருக்கக் காணலாம். குறிப்பாக பிரதமர் மகிந்த ராஜபக்ச பொது வைபவங்களில் தமது கை ஒன்றில் ஏதோ ஒன்றை விரல்களால் இறுக்கிப் பிடித்திருக்க காணலாம். 2009 இற்குப் பின் யாழ் தேவி தொடரூந்தை முதன் முதலாக யாழ்பாணத்திற்கு ஓட விட்ட வைபவத்தில் அவர் அவ்வாறு எதோ ஒரு பொருளைக் கையில் வைத்திருந்ததைப் படங்களில் காண முடிந்தது. சோதிடத்தில் அமானுஷ்ய சக்திகளில் மந்திர தந்திரங்களில் அந்தக் குடும்பத்துக்கு அதிகம் நம்பிக்கை உண்டு என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜபக்சக்களின் முதலாவது ஆட்சிக் காலத்தில் கிரீஸ் மனிதன் தமிழ்ப் பகுதிகளை அச்சுறுத்திய ஒரு கால கட்டத்தில் கொழும்பு டெலிகிராப் என்ற இணையத்தளத்தில் ஒரு கட்டுரை வெளி வந்தது. அதில் கிரீஸ் மனிதனை அரசினால் ஸ்பொன்சர் செய்யப்பட்ட மாந்திரீகம் என்று ஒரு விமர்சகர் வர்ணித்திருந்தார்.

இவ்வாறானதொரு அரசியல் பாரம்பரியத்தின் பின்னணியில்தான் பவித்ரா வன்னியாராச்சி மந்திரித்த நீரை ஆற்றில் கொட்டியிருக்கிறார். பவித்திரா தேவியும் வேறு சில அமைச்சர்களும் அவ்வாறு செய்தது அவர்களுடைய நம்பிக்கையின் பாற்பட்டது. ஆனால் அதை வீடியோ எடுத்து பகிரங்கபடுத்த வேண்டிய தேவை என்ன? ஒரு சுகாதார அமைச்சரே அதைச் செய்வது நாட்டு மக்களுக்கு எப்படிப்பட்ட செய்திகளைக் கொடுக்கும்? வைரசுக்கு எதிரான நடவடிக்ககளை அதிகம் படை மயப்படுத்திய பின்னும் நாடு திணறுகிறது என்பதையா?

இதன் மூலம் “மூடநம்பிக்கைகளின் பக்கம் மக்களைத் திருப்பாதீர்கள்” என்று கலாநிதி ஓமல்பே சோபித தேரர் விமர்சித்திருக்கிறார்.

“மாய மந்திரங்கள் தெய்வ சக்திகள் உட்பட வேறு வழிபாடுகள் மூலம் கொரோனா வைரஸை அழிக்க முடியும் என்ற நம்பிக்கையை பௌத்த தர்மம் ஏற்றுக் கொள்ளாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார். “பௌத்த தர்மம் அப்படியானவற்றை செய்யுமாறு மக்களைத் தூண்டாது. இவை மூடநம்பிக்கைகள். வணங்குதல் ; பூஜைகளைச் செய்தல் ; ஊர்வலங்களை நடத்துதல் என்பவை பௌத்த தர்மத்தில் உள்ளவை அல்ல” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உண்மைதான் இலங்கைதீவில் ஒற்றையாட்சி கட்டமைப்பை பாதுகாக்கும் பௌத்த மதக் சிந்தனை எனப்படுவது பல்லினத்தன்மைக்கும் பல்சமய பண்புக்கும் எதிரானது மட்டுமல்ல அது புத்தருடைய அடிப்படைத் தத்துவங்ககளோடு முரண்படுவது. பௌத்தத்தை ஒரு மதமாக ; வெற்றுச் சடங்காகச் சுருக்குவது.

இப்படித்தான் இறைச்சிக்காக மாட்டை வெட்டும் விடயத்திலும் புத்தரை முன் நிறுத்தினார்கள். அதன் மூலம் மாட்டிறச்சியை அதிகம் நுகரும் மதப் பிரிவினரின் பண்பாட்டு உரிமைகளை புண்படுத்த முயற்சிக்கிறார்கள். ஆனால் புத்த பகவான் எங்கேயும் புலால் உண்ணாமையை வலியுறுத்தவில்லை.

அதுபோலவே கொரோனாத் தொற்றினால் இறந்த முஸ்லிம்களின் ஜனாசாக்களை புதைக்கக் கூடாது எரிக்கத்தான் வேண்டும் என்று அரசாங்கம் கண்டிப்பாகக் கூறுகிறது. இது விடயத்தில் சுகாதாரக் காரனங்களுக்காக முஸ்லிம்களின் மத உணர்வுகளை பண்பாட்டு உணர்வுகளை மதிக்காத ஒரு அரசாங்கத்தின் ஒரு அமைச்சரே இப்படித் தனது மத நம்பிக்கைகளின்படி கழிப்புக் கழிப்பதை எப்படிப் பார்ப்பது?

அண்மையில் பாணந்துறை கடற்கரையில் திமிங்கலங்கள் கரை ஒதுங்கின.அவற்றை உள்ளூர் மக்கள் காப்பாற்றி கடலில் விட்டனர். அதைப் பாராடிய ஜனாதிபதி இலங்கை மக்களிடத்தில் வேரூன்றியுள்ள அஹிம்சையின் நற் பண்புகளை உலகிற்கு நிரூபிக்கும் மற்றொரு சிறந்த வாய்ப்பாக இது அமைந்துள்ளது என்று கூறியுள்ளார். ஆனால் அரசியல் கைதிகளின் விடயத்திலும் காணாமல் ஆக்கபட்டவர்களின் விடயத்திலும் கடைசிக் கட்டப் போரின் போதும் அந்த அஹிம்சையின் நற் பண்புகள் ஏன் நிரூபிக்கப்படவில்லை?

பௌத்த மதத்தையும் அதன் சின்னங்களையும் கொடிகளையும் குறியீடுகளையும் ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குக் கவசமாகப் பயன்படுத்தும் சிங்கள அரசியல்வாதிகள் ; பொத்த தேவாலயங்களில் பதவிகளைப் பொறுப்பேற்கும் சிங்கள அரசியல்வாதிகள் புத்தர் போதித்த அகிம்சைக் கோட்பாட்டையோ அல்லது அறநெறிகளையோ பின்பற்றுவதில்லை. மாறாக புத்தருடைய போதனைகளை கழிப்புக் கழிக்கும் ஒரு சுகாதார செய்முறையாகக் குறுக்கி விடுகிறார்கள்.

முஸ்லிம்களின் ஜனாஸாவைப் புதைக்க மறுக்கும் ஒரு நாடு மந்திரித்த நீரை ஆற்றில் விடுகிறது. இது தொடர்பான சர்ச்சைகளின் போது அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி கூறினார் கொரோனா தோற்று ஒழியுமென்றால் தானும் கடலில் குதிப்பதற்குத் தயார் என்று. அவர் கடலில் எல்லாம் குதிக்கத் தேவையில்லை. புத்த பகவான் கூறியற்றை அப்படியே பின்பற்றினாலே போதும்.

  • நிலாந்தன்