சமூகப்பொறுப்புள்ள இயக்குநர் பவன்குமார்

கிரௌட் பண்டிங் என்ற புதிய முயற்சியில் பலரிடம் பணம் வசூலித்து கன்னடத்தில் லூசியா என் படத்தை இயக்கியவர் கன்னட இயக்குநர் பவன்குமார். இந்திய அளவில் சினிமாத்துறையில் புரட்சியை ஏற்படுத்திய இந்தப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

சித்தார்த் நடிக்க எனக்குள் ஒருவன் என்ற பெயரில் இப்படம் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. லூசியா படத்தை அடுத்து பவன்குமார் இயக்கிய யு டர்ன் என்ற படமும் வெற்றியைப் பெற்றது.

விமர்சகர்கள் மத்தியிலும் பெரிய பாராட்டுக்களைப் பெற்றது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் ரைட்ஸையும் முன்னணி தயாரிப்பாளர் வாங்கி வைத்திருக்கிறார். தொடர்ந்து இரண்டு வெற்றிப்படம் கொடுத்த பவன்குமாரின் அடுத்த படம் எப்போது வரும் என திரையுலகினரே ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், இயக்குனர் பவன்குமாரின் குறும்படப் போட்டி ஒன்றை அறிவித்திருக்கிறார் பவன்குமார். பெங்களூருவில் ஸ்டீல் பாலம் ஒன்றைக் கட்டுவதற்காக 800 மரங்களை வெட்ட உள்ளனர்.

இதனை எதிர்க்கும் விதமாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தியும் எங்களுக்கு ஏன் வேண்டாம் ஸ்டீல்பாலம் என்ற பெயரில் ஒரு நிமிட குறும்படத்தை எடுத்து தனக்கு அனுப்புமாறு அறிவித்துள்ளார் பவன்குமார். அவர் தேர்வு செய்யும் மூன்று குறும்படங்களின் இயக்குனர்களுக்கு, தன் அடுத்த படத்தில் தன் உதவியாளராக பணிபுரியும் வாய்ப்பை வழங்க உள்ளாராம்.