அவுஸ்ரேலிய உணவு கலை நிபுணரின் கேக்கை அச்சிடும் 3டி இயந்திரம்!

ஸ்டார் டிரெக்’ என்ற அறிவியல் புனை கதைத் தொடரில், விரும்பிய உணவு வகைகளை வார்த்தெடுக்கும் இயந்திரம் அடிக்கடி வரும். அதே போல, ஒரு இயந்திரத்தை அவுஸ்ரேலியாவை சேர்ந்த, உணவு கலை நிபுணர் ரேனால்ட் பொயர்னோமோ உருவாக்கியிருக்கிறார்.

முப்பரிமாண அச்சியந்திர வகையை சேர்ந்த இந்த இயந்திரம், பிரான்ஸ் நாட்டு திருமணங்கள் மற்றும் விழாக்களில் பரிமாறப்படும், ‘குரோக்வெம்போச்’ என்ற உணவு வகையை மட்டுமே அச்சு அசலாக அச்சிட்டுத் தருகிறது.

அடுமனையில் தயாராகும் குரோக்வெம்போச், குட்டி, குட்டி பன்களை ஒன்றின் மேல் ஒன்றாக கூம்பு வடிவில் அடுக்கியது போல் இருக்கும். ஏற்கனவே, பிட்சா, கேக், மிட்டாய்கள் போன்ற வகை உணவுகளை தயாரிக்கும் முப்பரிமாண அச்சியந்திரங்கள் வந்திருக்கின்றன.
ஆனால், அவை முழுக்க முழுக்க முப்பரிமாண அச்சியந்திரத்திலேயே தயாரிக்கப்படுபவை அல்ல. ஆனால், அவுஸ்ரேலியர் உருவாக்கிய இந்த இயந்திரம், அடுமனையில் சுடுவது, இனிப்பை சேர்ப்பது உட்பட, முழுமையாக குரோக்வெம்போச்சினை முப்பரிமாண அச்சியந்திரத்திலேயே அச்சிட்டு தருவதுதான் சிறப்பு. இதன் வீடியோவை, ‘யூ டியூபி’ல் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்துள்ளனர்.

அவுஸ்ரேலிய சமையல் போட்டி நிகழ்ச்சியான, ‘மாஸ்டர் செப்’ போட்டியில் பங்கேற்றவரான ரேனால்ட், முப்பரிமாண உணவு அச்சியந்திரங்களால் ஈர்க்கப்பட்டதால், சிக்கலான பிரான் வகை அடுமனை உணவை தயாரிக்க முடியுமா என்று நீண்ட பரிசோதனையில் ஈடுபட்டார்.

கடைசியில் வெற்றி கிடைத்தது. இன்று அதிசயமானதாகவும், செயற்கையானதாகவும் கருதப்படும் முப்பரிமாண உணவு அச்சியந்திரங்கள், இன்னும் 10 ஆண்டுகளில் பரவலாகிவிடும் என்று வல்லுனர்கள் கணிக்கின்றனர். ரேனால்ட்சின் கண்டுபிடிப்பு அதை உறுதி செய்துள்ளது.