அதிபர் தேர்தலுக்கு முன் வாக்களித்த 9.5 கோடி அமெரிக்கர்கள்

அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் 9.5 கோடி பேர் முன்பே வாக்களித்து விட்டனர்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது.  இதில், குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.  இதற்கான தீவிர பிரசாரத்திலும் இருவரும் ஈடுபட்டனர்.

உலக அளவில் கொரோனா பாதித்த நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.  அமெரிக்காவில் தேர்தல் தேதிக்கு முன்பே வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதி உள்ளது. அதன்படி ஒவ்வொரு தேர்தலின் போதும் கோடிக்கணக்கான மக்கள் தேர்தல் நாளுக்கு முன்பே வாக்களித்து விடுவது வழக்கம். கொரோனா பரவல் மற்றும் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதை தவிர்க்கும் பொருட்டு, தேர்தலுக்கு முன்னதாகவே அஞ்சல் மூலமாகவும் மற்றும் வாக்குச்சாவடிக்கு சென்றும் பொதுமக்கள் வாக்களித்து வந்தனர்.
அந்த வகையில், 9 கோடியே 50 லட்சத்து 27 ஆயிரத்து 832 அமெரிக்கர்கள் தேர்தலுக்கு முன்பே வாக்களித்து உள்ளனர்.
இவற்றில் நேரில் சென்று வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 45 லட்சத்து 76 ஆயிரத்து 166 ஆகவும், மெயில் வழியே வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 6 கோடியே 4 லட்சத்து 51 ஆயிரத்து 666 ஆகவும் உள்ளது.  அமெரிக்காவில் மக்கள் நேரில் சென்று வாக்களித்த எண்ணிக்கையை விட மெயில் வழியே வாக்களித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உள்ளது.
கொரோனா பாதிப்பு தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ள சூழலில் அதில் இருந்து தப்பிக்க அமெரிக்கர்கள் அதிக அளவில் முன்பே வாக்களித்து உள்ளனர்.