இங்கிலாந்து இளவரசர் சார்லசின் மூத்த மகன் வில்லியம் தனக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பினை ரகசியமாக மறைத்துள்ளார்.
உலகம் முழுவதும் அச்சுறுத்தலாக உள்ள கொரோனா வைரசின் பாதிப்புகளுக்கு உலக நாடுகளை கட்டியாண்ட இங்கிலாந்து நாடும் தப்பவில்லை. இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சனுக்கு கடந்த மார்ச் இறுதியில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பின்னர் அதில் இருந்து அவர் மீண்டு வந்துள்ளார்.
இதேபோன்று, இங்கிலாந்து அரச குடும்பமும் இதற்கு விதிவிலக்கில்லை. இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தின் மூத்த மகன் மற்றும் இங்கிலாந்து இளவரசரான சார்லஸ், கடந்த மார்ச் இறுதியில் கொரோனா பாதிப்புகளுக்கு ஆட்பட்டு பின்னர் தனது மனைவி கமிலாவுடன் ஸ்காட்லாந்தில் தனிமைப்படுத்தி கொண்டார்.
அதன்பின்பு ஒரு வார சிகிச்சை முடிந்து அதில் இருந்து அவர் மீண்டு வந்துள்ளார். இதேபோன்று பக்கிங்ஹாம் அரண்மனையில் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சூழலில், ராணி எலிசபெத் பாதுகாப்பிற்காக லண்டனில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த நிலையில், இங்கிலாந்து இளவரசர் சார்லசின் மூத்த மகன் வில்லியம் தனக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பினை ரகசியமாக மறைத்துள்ளார் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட அதே காலகட்டத்தில் கடந்த ஏப்ரலில் வில்லியமுக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என கென்சிங்டன் அரண்மனை வட்டார தகவலை அடிப்படையாக கொண்டு இங்கிலாந்து நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவர் தனக்கு தொற்று ஏற்பட்டு இருப்பது பற்றி நாட்டிலுள்ளோருக்கு தெரிவிக்க விரும்பவில்லை. அதனால் தனது சிகிச்சை முறை உள்ளிட்ட விஷயங்களில் ரகசியம் காத்துள்ளார் என்று செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.