ஆஸ்திரேலியாவுக்கு மேலும் அதிகமான மக்கள் தேவையில்லை என 72 சதவீதமான பேர் கூறியுள்ளதாக தேசிய கருத்துக்கணிப்பின் முடிவு ஒன்று குறிப்பிட்டுள்ளது. அதில் 50 சதவதீம் பேர் வெளிநாட்டினர் குடிவரவை குறைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
கொரோனாவுக்கு முந்தைய காலக்கட்டமான அக்டோபர் மற்றும் நவம்பர் 2019ல் ஆஸ்திரேலிய மக்கள் தொகை ஆய்வு நிறுவனத்தால் நடத்தப்பட்ட இக்கருத்துக்கணிப்பு மூலம். அந்நாட்டில் பலர் மக்கள் தொகை பெருக்கத்தை விரும்பவில்லை எனச் சொல்லப்படுகின்றது.
எங்கள் கருத்துக்கணிப்புகள் மூலமும் பிற கருத்துக்கணிப்புகள் மூலமும் நாங்கள் உறுதியாக சொல்கிறோம், வெளிநாட்டிலிருந்து வந்து ஆஸ்திரேலியாவில் குடியேறுபவர்கள் குறைக்கப்பட வேண்டும் என்பது 50 சதவீத வாக்காளர்களின் எண்ணமாக இருக்கின்றது என இந்த நிறுவனத்தின் ஆய்வாளர்கள் கேத்ரின் மற்றும் பாப் பிர்ரேல் ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டினரின் அதீத வருகையால் ஆஸ்திரேலிய பெரு நகரங்களில் வாழ்க்கைத்தரம் குறைவதாக பெரும்பாலான வாக்காளர்கள் எண்ணுவதாக இக்கருத்துக்கணிப்பின் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர.
அதே சமயம், உயர்கல்வி பெற்ற ஆஸ்திரேலியர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு செல்லாத ஆஸ்திரேலியர்கள் இடையே கருத்து மாறுபாடு உள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதாவது, உயர்கல்வி பெற்றவர்களில் குறிப்பிட்ட சாரார் வெளிநாட்டினர் குடியேற்றம் அதிகரிக்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டவர்களாக உள்ளதாகக் கூறப்படுகின்றது.
2020ம் ஆண்டு கணக்குப்படி, ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை சுமார் 2.6 கோடியாக உள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டை விட 70 சதவீதம் குறைவான மக்கள் தொகைக் கொண்ட ஆஸ்திரேலியாவில் பெரும்பாலான வாக்காளர்கள் வெளிநாட்டினர் நிரந்தரமாக குடியேறுவதை விரும்பாதவர்களாக உள்ளதாக இந்த கருத்துக்கணிப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன.