கொரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதைத் போல ஆஸ்திரேலியாவின் சில மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இவ்வாறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது முடங்கிக் கிடந்த ஆஸ்திரேலிய மக்களிடையே மகிழ்வை ஏற்படுத்தி வருகின்றது. அதே வேளை, இந்த காலக்கட்டத்தில் ஆஸ்திரேலிய அரசு எடுத்துள்ள மற்றொரு முடிவு ஆஸ்திரேலியாவின் சமூகத் தடுப்பில் உள்ள அகதிகளை நிர்கதி நிலைக்குத் தள்ளியிருக்கின்றது.
இந்த பெருந்தொற்று சூழலில் சொந்த நாட்டு மக்களே அல்லாடி வரும் நிலையில், ஆஸ்திரேலியாவின் சமூகத் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான அகதிகள் அங்கிருந்து மூன்று வாரக் காலத்திற்குள் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த மூன்று வாரக் காலத்திற்குள்ளாக அகதிகள் தங்களுக்கான வேலையையும் தங்குமிடத்தையும் தேடிக்கொள்ள வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அகதிகள் கவுன்சில் தோராயமாக கணக்கிட்டுள்ளதன் அடிப்படையில், மேற்கு ஆஸ்திரேலியா, தெற்கு ஆஸ்திரேலிய, நியூ சவுத் வேல்ஸ், குவின்ஸ்லாந்த் ஆகிய பகுதிகளில் சமூகத் தடுப்பில் வைக்கப்பட்டிருந்த சுமார் 515 அகதிகள் இந்த சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்த அகதிகளை Final Departure Bridging விசாவுக்கு ஆஸ்திரேலிய அரசு மாற்றியுள்ளதாக அகதிகள் கவுன்சில் குறிப்பிடுகின்றது.
இறுதிப் புறப்பாடு இணைப்பு விசா (Final Departure Bridging Visa) என்றால் என்ன?
*ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்கள் செயல்பட்ட நாடுகளிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டு மீண்டும் கடல் கடந்த தடுப்புக்கு திரும்பாத அகதிகளுக்கு இந்த விசா வழங்கப்படுகின்றது. இவ்வாறான தடுப்பு முகாம்கள் பப்பு நியூ கினியா மற்றும் நவுரு ஆகிய தீவு நாடுகளில் செயல்படுகின்றன. இந்த முகாமில் வைக்கப்பட்ட/வைக்கப்பட்டுள்ள அகதிகள் ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
*ஆஸ்திரேலியாவில் ஓர் அகதிக்கு இந்த விசா வழங்கப்படுவதன் மூலம், அவர் அரசின் தங்குமிட வசதி மற்றும் நிதியுதவியைப் பெற அவர் தகுதியற்றவராகிறார்.
*அதே சமயம், இந்த விசாவில் உள்ள அகதிகளுக்கு வேலைச் செய்வதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்த வேலையை அவருக்கான தேவைகளை சம்பந்தப்பட்ட அகதியே பார்த்துக் கொள்ள வேண்டும். கடல் கடந்த தடுப்பு முகாம் செயல்படும் நாட்டுக்கு அல்லது வசிப்பதற்கான உரிமைப் பெற்ற நாட்டுக்கு திரும்ப இந்த விசா பெற்ற அகதிகள் தயாராக வேண்டும்.
*இந்த விசாவின் மூலம் ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிப்பதற்கான உரிமையைப் பெற முடியாது. அதே போல், தற்காலிக பாதுகாப்பு விசாவுக்கோ (Temporary Protection Visa) அல்லது Safe Haven Enterprise விசாவுக்கோ விண்ணப்பிக்க இறுதிப் புறப்பாடு இணைப்பு விசா கொண்ட அகதிகள் தகுதியுடைவர்களாக கருதப்பட மாட்டார்கள்.
ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பிலும் இன்னும் பிற ஆஸ்திரேலிய தடுப்பிலும் சுமார் 7 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த அகதிகள் நிரந்தர தீர்வை எதிர்ப்பார்த்துள்ள நிலையில், அகதிகள் விவகாரத்தில் இறுதிப் புறப்பாடு இணைப்பு விசா முறை மீண்டும் புதியதொரு சிக்கலை உருவாக்கியிருப்பதாக அகதிகள் நல ஆர்வலர்கள் கருதுகின்றனர்.