நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் இருவருக்குப் புகழ்மிக்க “அனைத்துலக நீர்வள ஆய்வுப் பரிசு” வழங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரர்கள் அந்தப் பரிசைப் பெறுவது இதுவே முதன்முறை. நீர்வளத்துக்கான இளவரசர் சுல்தான் பின் அப்துல் அஸிஸ் அனைத்துலகப் பரிசின் கீழ் வழங்கப்படும் ஐந்து விருதுகளில் அதுவும் ஒன்று.
ஈராண்டுக்கு ஒரு முறை சவுதி அரேபியா அதனை வழங்குகிறது. தண்ணீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்கும் புத்தாக்க வழிகள் குறித்த ஆய்வுகளை அங்கீகரிப்பது அதன் நோக்கம்.
மாற்று நீர்வளம் குறித்த ஆய்வுக்காக, நன்யாங் பல்கலைப் பேராசிரியர்கள் வாங் ரொங், அந்தொனி ஃபேம் இருவருக்கும் அந்தப் பரிசு வழங்கப்பட்டது.
டாக்டர் வாங்கின் தலைமையிலான ஆய்வுக்குக்குழு, தண்ணீர் மறுபயனீட்டுச் செயல்முறையில் எரிசக்தித் தேவையைக் குறைக்க உதவும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியது.