20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு விட்டது. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் இனியும் ராஜபக்சக்கள் தங்களுடைய வெற்றி தனிச் சிங்கள வாக்குகளால் பெற்ற வெற்றி என்று மார்தட்டிக் கொண்டிருக்க முடியாது. அது முன்னரும் தனிச் சிங்கள வாக்குகளால் பெற்ற வெற்றி அல்ல. ஜனாதிபதி தேர்தலின் போதும் கோட்டாபய ராஜபக்ச தமிழ் மக்களின் வாக்குகளையும் சேர்த்தே வெற்றி பெற்றார். நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர்களுடைய தமிழ் முகவர்கள் இல்லையென்றால் 150 ஆசனங்கள் கிடைத்திருக்காது. எனவே இருபதாவது திருத்தத்துக்கு முன்னரும் அவர்கள் பெற்ற மூன்றிலிரண்டு பெரும்பான்மை தனிச்சிங்கள வாக்குகளால் பெற்ற ஒன்று அல்ல.
இப்பொழுதும் முஸ்லிம்கள் மற்றும் மலையகத் தமிழர்களின் பிரதிநிதிகளின் ஆதரவோடுதான் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. எனவே இது ராஜபக்சக்கள் கூறுவதுபோல தனிச் சிங்கள வாக்குகளால் பெற்ற வெற்றி அல்ல. ஆனால் இதிலுள்ள அகமுரண் என்னவென்றால் தனிச்சிங்கள மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்காக சிறிய தேசிய இனங்களை அச்சுறுத்தும் அரசியலை அவர்கள் முன்னெடுத்தார்கள். ரிசாத் பதியுதீனை கொரோனா உடுப்போடு நாடாளுமன்றத்துக்கு கொண்டு வந்ததே ஓர் அச்சுறுத்தல்தான்.
20ஆவது திருத்தம் தனிச்சிங்கள பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டது அல்ல. அது தனிச் சிங்கள பெரும்பான்மையை அடித்தளமாகக் கொண்ட ஆனால் மூவினத்தன்மை மிக்க ஒரு மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலமே நிறைவேற்றப்பட்டது. இதில் கொடுமை என்னவென்றால் அது எந்த சிறிய தேசிய இனங்களுக்கு எதிரானதோ அதே சிறிய தேசிய இனங்களின் பிரதிநிதிகள் அதற்கு ஆதரவாக வாக்களித்தார்கள் என்பதுதான். அதன் மூலம் தமக்கு வாக்களித்த மக்களை அவர்கள் காட்டிக் கொடுத்து விட்டார்கள். பல்லினச் சூழலுக்கும் பல்சமயச் சூழலுக்கும் எதிரான சக்திகள் சிறிய தேசிய இனங்களின் மக்கள் பிரதிநிதிகளை பொம்மைகள் போல உருட்டி விளையாடித் தமக்கு வேண்டிய பெரும்பான்மையை பெற்று விட்டார்கள்.
இனி 20ஆவது திருத்தத்துக்கு பின்னரான நாடு எப்படி இருக்கும்? குறிப்பாக சிறிய தேசிய இனங்களின் நிலை எப்படி இருக்கும்? 2015க்கு முன்னிருந்த அதே நிலைமை வருமா?அல்லது அதைவிட மாறுதலான ஒரு நிலைமை வருமா?
முதலில் 20 ஆவது திருத்தத்தை அவர்கள் ஏன் கொண்டு வந்தார்கள் என்று பார்க்க வேண்டும். ஏனெனில் யுத்த வெற்றியின் மீது கட்டியெழுப்பப்பட்ட தமது வம்ச ஆட்சியை பாதுகாப்பதற்கு நிறைவேற்று அதிகாரங்கள் அதிகம் தேவை என்று அவர்கள் நம்புகிறார்கள். யுத்த வெற்றி வாதம் எனப்படுவது 2009 க்கு பின்னரான சிங்கள பௌத்த பெருந் தேசியவாதத்தின் பிந்திய வளர்ச்சிதான். அது வம்ச ஆட்சியோடு பிரிக்க இயலாதபடி பிணைக்கப்பட்டிருக்கிறது. எனவே ராஜபக்ஷ வம்சத்தின் ஆட்சியை அதாவது மேலும் சரியான வார்த்தைகளில் சொன்னால் மன்னராட்சியை தொடர்ந்து நடத்துவதற்கு அவர்களுக்கு 20ஆவது திருத்தம் அவசியம். சுப்ரீம் கோர்ட் அது விடயத்தில் சில தடைகளைப் போட்டிருந்தாலும் அவர்கள் அதை சுதாகரித்துக் கொண்டு விட்டார்கள்.
அதைவிட முக்கியமாக யாப்பில் என்ன இருக்கிறது என்பதை விடவும் அரசியல் நடைமுறை எவ்வாறு இருக்கும் என்பதே இங்கு முக்கியம். ஏனென்றால் இலங்கைத்தீவில் யாப்பில் இருப்பதெல்லாம் நடைமுறையில் இருப்பதில்லை. யாப்புக்கு வெளியே யாப்பை மீறும் மிகப் பலமான ஒரு பாரம்பரியம் இலங்கைத்தீவில் உண்டு. இப்போது இருக்கும் யாப்புக்கு 42 வயது. ஆனால் அது 20 திருத்தங்களை கண்டுவிட்டது. ஆனால் உலகின் முன்னுதாரணம் மிக்க யாப்புக்களில் ஒன்றாக கருதப்படும் அமெரிக்க யாப்புக்கு 233 வயது . ஆனால் அதில் 27 திருத்தங்களே உண்டு. ஏனென்றால் ஜனநாயகம் ஒரு பண்பாடாகச் செழிப்புற்றிருக்கும் அரசியற் பரப்பில் யாப்பைத் திருத்த வேண்டிய நிலைமைகள் அடிக்கடி ஏற்படாது.
இலங்கைதீவில் யாப்பு எதுவாகவும் இருக்கலாம்.ஆனால் யாப்பை மீறும் மிகப் பலமான ஒரு பாரம்பரியம் உண்டு.உதாரணமாக 13ஆவது திருத்தம். அதில் காணி பொலிஸ் அதிகாரம் மாகாண சபைகளுக்கு உண்டு. ஆனால் கடந்த 33 ஆண்டுகளாக அந்த அதிகாரங்களை எந்த ஒரு ஜனாதிபதியும் மாகாண சபைகளுக்கு வழங்கவில்லை. அதுமட்டுமல்ல முதலில் வழங்கப்பட்ட அதிகாரங்களையும் அவர்கள் தொடர்ச்சியாகப் பிடுங்கி வந்திருக்கிறார்கள். எனவே யாப்பில் என்ன இருக்கிறது என்பது இங்கு முக்கியமல்ல. பிரயோகத்தில் என்ன இருக்கிறது என்பதே இங்கு முக்கியம். 19ஆவது திருத்தம் அமுலில் இருக்கும் பொழுதே கோத்தாபய ராஜபக்ச மறைமுகமாக பாதுகாப்பு மந்திரியாகவும் செயற்பட்டார். 19 ஆவது திருத்தத்தின் படி அவர் அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியாது. ஆனால் தனக்கு விசுவாசமான ஒரு முன்னாள் படைத் தளபதியை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமித்து விட்டு அவர் மறைமுகமாக அந்த அமைச்சை நிர்வகித்தார். எனவே யாப்பில் என்ன இருக்கிறது என்பதல்ல பிரச்சினை. யாப்பை மீறிவிட்டு அதை எப்படி வியாக்கியானப்படுகிறார்கள் என்பதே இங்கு பிரச்சினை. எனவே 20ஆவது திருத்தம் வந்தால் என்ன வராவிட்டால் என்ன தமிழ் தமிழ் மக்களின் வாழ்வில் நிர்ணயகரமான மாற்றங்கள் ஏற்படாது?
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குப் போனால் கண்டி வீதியில் ஆனையிறவில் வாகனங்கள் மறிக்கப்படுவதில்லை. ஆனால் கண்டி வீதியில் இருந்து விலகி வன்னியின் உட் பகுதிகளுக்குள் இறங்கினால் ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் உண்டு. அங்கெல்லாம் இறங்கி வாகன இலக்கத்தை சாரதி அனுமதிப் பத்திரத்தை பயணம் செய்யும் ஆட்களின் தொகையை எல்லாவற்றையும் பதிவு செய்ய வேண்டும். ஏன் என்று கேட்டால் கோவிட்-19ஐக் கட்டுப்படுத்த என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த நடைமுறை முன்னரும் ஈஸ்டர் குண்டு வெடிப்பையடுத்து அமுலில் இருந்தது. பின்னர் தளர்த்தப்பட்டது. இப்பொழுது மறுபடியும் பதிவுகள் தொடங்கிவிட்டன. கோவிட்-19ஐ கட்டுப்படுத்துவது என்று சொன்னால் அதை அவர்கள் முதலில் செய்ய வேண்டியது தென்னிலங்கையில்தான். அங்கேதான் வைரஸ் தொற்று அதிகமாக இருக்கிறது. வன்னியில் தனிமைப்படுத்தல் நிலையங்கள்தான் உண்டு. எனவே தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் இல்லாத சோதனைகளை வன்னியில் மட்டும் ஏன் செய்ய வேண்டும்?
கிளிநொச்சியில் வட்டக்கச்சிக்குச் செல்லும் பாதை; பூநகரிக்குச் செல்லும் பாதை பரந்தன் வீதியில் தர்மபுரத்தில் அதற்கும் அப்பால் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆங்காங்கே இவ்வாறு வாகனங்களை நிறுத்தி பதிவு செய்கிறார்கள். இது வைரஸை தடுப்பதற்கா? அல்லது தமிழ் மக்களை தொடர்ந்தும் சோதிக்கப்படும் ஒரு மக்கள் கூட்டமாக வைத்திருப்பதற்கா?
தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல முஸ்லிம்களுக்கும் நிலைமை அப்படித்தான். அண்மையில் கேகாலை பொது வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் கடமையாற்றும் ஒரு முஸ்லிம் பெண் மருத்துவர் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பின்வருமாறு தனது நண்பர்களோடு பகிர்ந்து கொண்டார்…..அவருக்கும் அவருடைய கணவனுக்கும் மகனுக்கும் கோவிட்-19 பொசிட்டிவ் என்று அறிய வந்தபின் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறு அனுமதிக்கப்பட்ட பின் தனக்கு கோவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் தரப்புக்களிடம் இருந்து ஆயிரக்கணக்கான கைபேசி அழைப்புகள் வந்ததாக அவர் குறிப்பிடுகிறார். ராணுவம் ; சிறப்புச் செயலணி ; புலனாய்வுப் பிரிவு; காவல்துறை முதற்கொண்டு சம்பந்தப்பட்ட ஏனைய எல்லாத் தரப்புக்களும் தன்னைக் கைபேசியில் அழைத்ததாக அவர் குறிப்பிடுகிறார். தனக்கு வந்த தொலைபேசி அழைப்புகளை வைத்து பார்க்கும் பொழுது தனக்கு ஒரு விடயம் தெளிவாக தெரிகிறது என்றும் அவர் கூறுகிறார். அதாவது கோவிட்-19ஐ எதிர்கொள்வதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் சீர்மையான தொடர்பாடல் இல்லை என்பதே அது.
அதோடு சாதாரண தர உயர்தர பரீட்சை எழுதும் தனது மகளை படைத்தரப்பு எவ்வாறு கையாண்டது என்பதையும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். வீட்டுக்குச் சென்ற படைத்தரப்பு தமது பெண் பிள்ளைகளை அவகாசம் வழங்காது உடனடியாக வீட்டை விட்டு அகற்றி தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு கூட்டிச் சென்றதாகவும் அவர் கூறுகிறார். அடுத்த நாள் காலை பரீட்சை எழுத வேண்டிய அந்தப் பெண் பிள்ளை இரவு ஒரு மணியிலிருந்து கிட்டத்தட்ட ஆறு மணித்தியாலங்கள் பயணம் செய்ததாகவும் தான் ஒருவாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்துமாறு கேட்டுக் கொண்டதாகவும் முடிவில் காலை 7 மணிக்கு அவர்கள் மறுபடியும் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார். அந்தப் பெண்பிள்ளை அன்று பிற்பகல் ஒரு மணிக்கு அவருடைய க.பொ.த. உயர்தர உயிரியல் பரீட்சையை எழுதியிருக்கிறார். அரச மருத்துவமனையில் நல்ல பொறுப்பில் இருக்கும் ஒரு முஸ்லீம் மருத்துவரின் அனுபவம் இது.
20ஆவதை ஆதரித்து வாக்களித்த முஸ்லிம் பிரதிநிதிகளால் இந்த நிலைமையை மாற்ற முடியுமா? அல்லது அதை ஆதரித்த தமிழ் பிரதிநிதிகளால் சோதனைச் சாவடிகளை நீக்க முடியுமா? அல்லது காணி அபகரிப்பை நிறுத்த முடியுமா?
முடியாது. ஏனெனில் அவர்கள் பலப்படுத்தி இருப்பது யுத்த வெற்றி வாதத்தின் 2020க்குரிய வடிவத்தை. ஜே.ஆர்.ஜெயவர்த்தன அளவுக்கு நிறைவேற்று அதிகாரம் கோட்டாபயவுக்கு கிடைக்கவில்லை. என்றாலும் யாப்பை மீறும் நடைமுறைக் கூடாக ராஜபக்சக்கள் தமது வம்ச ஆட்சியை பாதுகாப்பதற்கு வேண்டிய எல்லாவற்றையும் செய்வார்கள். ஜெயவர்த்தன கோத்தபாயவை விடவும் அதிக நிறைவேற்று அதிகாரத்தோடு காணப்பட்டார். ஒரு ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்ற முடியாதே தவிர மற்ற எல்லாவற்றையும் என்னால் செய்ய முடியும் என்று இறுமாப்போடு மார்தட்டிக் கொண்டார். ஆனால் அவர் பிரேமதாசாவிடம் கையளித்த நாடு ஒரு நெருப்புக் குழம்பு. ஒரு தோற்கடிக்கப்பட்ட தலைவராகவே அவர் இறந்தார். இப்பொழுது கோத்தபாயவின் முறை.
கார்ல் மாக்ஸ் கூறுவதுபோல வரலாற்றில் சில சம்பவங்கள் இரு முறை நிகழ்கின்றன. முதலில் அது அவலச்சுவை நாடகமாக முடியும். இரண்டாவது முறை அது நகைச்சுவை நாடகமாக முடியும். இலங்கைத்தீவில் ராஜபக்சக்களின் இரண்டாவது ஆட்சி எப்படி முடியப் போகிறது?