டயானாவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.

அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எதிராக வாக்களித்திருந்த நிலையில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே ஆதரவாக வாக்களித்திருந்தார்.

இந்நிலையிலேயே அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்துரைத்த ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார,  20 ஆவது திருத்தச்சட்டமூலம் சர்வாதிகாரத்தின் தொடக்கம் என்றும் தற்போதைய அரசாங்கத்தின் முடிவின் ஆரம்பம் என்றும் தெரிவித்தார்.

‘குடும்ப ஆட்சிக்கும் அமெரிக்க குடிமகனைக் கொண்டுவருவதற்குமான மசோதாவாகவே நாங்கள் இதனைப் பார்க்கிறோம். மகாநாயக்க தேரர்கள் இதனை எதிர்த்த போதும் பௌத்த அரசாங்கம், முஸ்லிகம்களை இணைத்துக்கொண்டு 20ஐ நிறைவேற்றியுள்ளது.

‘நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் ஆகியோர் எமது பக்கம் இருந்தபோதும் ஏனையவர்கள் அரசாங்கத்தின் பக்கம் சாய்ந்துவிட்டனர்.

‘நாட்டில் சிறுபான்மையினர் வேண்டாம் எனக் கூறி சிங்கள பௌத்த அரசாங்கத்தை அமைத்தவர்கள், மகாநாயக்கத் தேரர்களின் எதிர்ப்பையும் மீறி சிறுபான்மையினரை இணைத்துக்கொண்டு 20ஐ நிறைவேற்றியுள்ளனர்.

’20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் ஆதரவாக வாக்களித்துள்ளார். இது எமது கட்சியின் தீர்மானத்துக்கு எதிரானது. அத்துடன் எமது கட்சிக்கு வாக்களித்த 28 இலட்சம் பேரையும் அவமதித்ததுக்குச் சமனாகும்.

‘இந்த நாடாளுமன்ற உறுப்பினரை பெண்களின் பிரதிநிதியாகவே நாங்கள் பார்க்கிறோம். அவர் 20க்கு ஆதரவாக வாக்களித்தனூடாக நூறாயிரம் பெண்களை அவமதித்துள்ளார். எனவே, கட்சியின் உயர்மட்டத்துடன் கலந்துரையாடி அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.