ஜெனிவா மனித உரிமைகள் சபையின் 46 வது கூட்டத்தொடர் தமிழ் மக்களுக்கு சாதகமாக அமையுமா?

நியூயோர்க்கில்உள்ள ஐ.நா. பொதுச்சபையில், கடந்த 13ம் திகதி, ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 2021ஆம் ஆண்டு முதல் மூன்று வருடங்களிற்கு அங்கத்துவத்திற்கான பதினைந்து வெற்றிடங்களுக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது. இதன் அடிப்படையில் மனித உரிமைகளை மோசமாக மீறும் நாடுகள் சிலவும் வெற்றி பெற்றுள்ளன.

இவ்விடயத்திற்கு விபரமாக செல்லும் முன், ஐ.நா. மனித உரிமை சபையின் நாற்பத்தேழு நாடுகளிற்கான அங்கத்துவம் எப்படியாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வடிப்படையில் –

ஆசிய – பசுபிக்குக்கு (13) பதின்மூன்று நாடுகளும், ஆபிரிக்காவிற்கு (13) பதின்மூன்று நாடுகளும், லத்தின் அல்லது தென் அமெரிக்க கரிபியாவிற்கு (8) எட்டு நாடுகளும், மேற்கு ஐரோப்பிய மற்றவற்றிற்கு (7) ஏழு நாடுகளும், கிழக்கு ஐரோப்பாவுக்கு (6) ஆறு நாடுகளும் என்ற அடிப்படையில் அங்கத்துவம் பிரிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தற்பொழுது, அதாவது 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை ஐ.நா. மனித உரிமை சபையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதில் – ஆசிய பசுபிக் நாடுகளாவன (13) : ஆப்கானிஸ்தான் (2020) கட்டார் (2020) நேபலாம் (2020) பாகிஸ்தான் (2020) பாரேன் (2021) பாங்களாதேஸ் (2021) பிஜீ (2021) இந்தியா (2021) பிலிப்பைன்ஸ் (2021) இந்தோனேசியா (2022) ஜப்பான் (2022) மாசல் தீவுகள் (2022) கொரிய குடியரசு – தென்கொரியா (2022).

ஆபிரிக்க நாடுகளாவன (13) : அங்கோலா (2020) கொங்கோ ஜனநாயகக் குடியரசு (2020) நைஜீரியா (2020) செனகல் (2020) புர்கினோபாசோ (2021) கமரூன் (2021) எரித்திரியா (2021) சோமாலியா (2021) ரோகோ (2021) லிபியா (2022) மொறிற்ரானியா (2022) நமீபியா (2022) சூடான் (2022).

மேற்கு ஐரோப்பிய மற்றைய நாடுகளாவன (7) : அவுஸ்திரேலியா (2020) ஸ்பெயின் (2020) ஒஸ்ரியா (2021 டென்மார்க் (2021) இத்தாலி (2021) ஜெர்மனி (2022) நெதர்லாந்து (2022)

கிழக்கு ஐரோப்பிய நாடுகளாவன (6) : சுலோவாக் (2020) உக்ரேன் 2020) பல்கேரியா (2021) செக் குடியரசு (2021) ஆர்மேனியா (2022) போலாந்து (2022).

பதினைந்து புதிய அங்கத்தவர்கள்

இதன் அடிப்படையில், ஆசிய நாடுகளில் நான்கு நாடுகளும், ஆபிரிக்கா நாடுகளில் நான்கு நாடுகளும், லத்தின் அல்லது தென் அமெரிக்ககரிபியா நாடுகளில் மூன்று நாடுகளும், மேற்கு ஐரோப்பிய மற்றைய நாடுகளில் இரு நாடுகளும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இரு நாடுகளும் 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் தமது அங்கத்துவத்தை இழக்கின்றனர்.

ஆனால் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும்ஒரு நாடு விரும்பினால், மீண்டும் ஒரு மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக இரண்டாவது தடவை மட்டுமே அங்கத்துவம் வகிக்க முடியும். இதற்கு அவர்கள் ஐ.நா. பொதுச் சபையின் தேர்தலில் பங்கு கொண்டு வெற்றி கொள்ளவேண்டும்.

தற்பொழுது கடந்த 13ஆம் திகதி, ஐ.நா. பொதுச் சபையினால், ஐ.நா.மனித உரிமை சபையில் 2021 ஆம் ஆண்டு முதல் மூன்று வருடங்களுக்கு அங்கத்துவத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பதினைந்து அங்கத்தவர்கள் யார் யாரென பார்வையிடுவோம்.

ஆசியா – பசுபிக் நாடுகள் என்ற அடிப்படையில் : பாகிஸ்தான், நேபாளம், சீனா, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில்; பாகிஸ்தான், நேபாளம்ஆகிய இரு நாடுகளும் தமது இரண்டாவது தடவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

ஆபிரிக்க நாடுகள் என்ற அடிப்படையில் : செனகல், கொட்துவார் – ஐவரிகோஸ்ட்; காபோன், மலாவி ஆகிய நாடுகளில்; செனகல் தனது இரண்டாவது தடவைக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளது.

லத்தீன் அல்லது தென் அமெரிக்க கரிபியா நாடுகள் என்ற அடிப்படையில் : மெக்சிக்கோ, பொலீவியா, கியூபா ஆகிய நாடுகளில்; மெக்சிக்கோ மீண்டும் தனது இரண்டாவது தடவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஐரோப்பிய மற்றைய நாடுகள் என்ற அடிப்படையில் : பிரான்சும், பிரித்தானியாவும் தேர்தல் இன்றித் தெரிவாகியுள்ளன.

கிழக்கு ஐரோப்பிய என்றஅடிப்படையில் : உக்ரேன், ரஷ்யா ஆகிய நாடுகளில்; உக்ரேன் மீண்டும் தனது இரண்டாவது தடவைக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இத் தடவை தெரிவாகியுள்ள பதினைந்து நாடுகளில், பல நாடுகள் மனித உரிமையை கடுமையாக மீறும் நாடுகளென, பல சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளினால் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதுஉண்மை. ஆனால் இப்படியான நாடுகள் மனித உரிமை சபைக்கு தெரிவாகியிருப்பது இது முதற் தடவையாக அல்ல. இங்குதான் ஐ.நா. பொதுச் சபை ஓர் அரசியல் கலப்பு கொண்டது என்பது நிரூபணமாகிறது.

இரு வருட கால அவகாசம் முடிவடைகிறது

நிற்க, அடுத்து நாங்கள் ஆராய வேண்டிய விடயமாவது, 2021ம் ஆண்டு மார்ச் மாதம், அதாவது அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐ.நா.மனித உரிமை சபையின் 46வது கூட்டத்தொடருடன், இலங்கை அரசிற்கு மனித உரிமை சபையினால் கொடுக்கப்பட்ட  இரு வருட கால அவகாசம் முடிவடையவுள்ளது.

இந்நிலையில், இலங்கை விடயத்தில் மனித உரிமை சபையின் அங்கத்துவ நாடுகள் எவ்வாறாக நிலைமையைக் கையாளுவார்கள் என்பதே இப்பொழுது பலரிடம் எழும் கேள்வி.

இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள் என்னவெனில், முதலாவதாக இலங்கை தனது இணை அனுசரணையில் விலகியுள்ளதுடன், இலங்கையில், கடந்த ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல்களுடன், அங்கு ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைப்பதற்கான வழிவகைகள் கையாளப்படுவதை சர்வதேச சமுதாயம் கவனத்தில் கொள்கிறது. அத்துடன் சீனா, கியூபா, ஈரான், பாகிஸ்தான் போன்ற உலகில் மிக மோசமான மனித உரிமை மீறல்களைக் கொண்ட நாடுகளுடன் இலங்கை வெளிப்படையாக கைகோர்த்து நிற்கிறது.

இலங்கையின் இந்த நிலைப்பாட்டை, சர்வதேச சமுதாயம் எப்படிக் கண்கொண்டு பார்க்கும் என்பதுடன், எப்படியான நிலைப்பாட்டைக் கொள்ளும் என்பதை நாம் ஆராய வேண்டும். காரணம், 2015ம் ஆண்டு வரை மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் நிலவிய நிலைமைகளுக்கு பலமடங்கு மேலாக, தற்போதைய கோத்தபாயவின் ஒரு வருடகால ஆட்சி, ஜனநாயக வழிமுறைகளிற்கு படிப்படியாக சாவுமணி அடித்து வருவதை சர்வதேச சமுதாயம் என்றும் கவனத்தில் கொள்கிறது. அத்துடன், வடக்கு – கிழக்கு வாழ் மக்களின் அரசியல், பொருளாதார, சமூக வாழ்க்கையின் பின்னடைவுகளையும் சர்வதேச சமுதாயம் கவனத்தில் கொள்ளத் தவறவில்லை.

இந்நிலையில், எதிர்வரும் மனித உரிமை சபை கூட்டத்தொடரில், ஒரு கடுமையான தீர்மானம் இலங்கை மீது முன்வைப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவுள்ளது. இதில் என்னென்ன விடயங்கள் உள்ளடக்கப்படலாம் என்பது ஒரு பக்கம் இருக்க, இந்தத் தீர்மானத்திற்கு அங்கத்துவ நாடுகளின் ஆதரவு எப்படியாக இருக்கும் என்பதில், ஐ.நா. நிலைமைகளை ஆழமாக, சரியாகப் புரியாத பலர் பீதி கொள்வதில் எந்தத் தவறுமில்லை.

சிலர் – சீனா, ரஷ்யா, கியூபா, பாகிஸ்தான் என்பன மனித உரிமை சபையில் அங்கத்துவ நாடுகளாக உள்ளதை எண்ணி கலக்கம் கொள்கிறார்கள். இவர்கள் புரியாத உண்மை என்னவெனில், இந்நாடுகள் மனித உரிமை சபையில் அங்கம் வகிக்கும் வேளையிலேயே, இலங்கை மீது அடுத்தடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்பதை நாம் மறக்கக் கூடாது.

இதேவேளை இத்தீர்மானங்களை அமெரிக்கவே முன்னெடுத்து வெற்றி கண்டுள்ளது என்பது யாதார்த்தம். ஆனால் அமெரிக்கா தற்பொழுது மனித உரிமை சபையில்அங்கம் வகிக்கவில்லை என்பது சிலரது விவாதமாகவுள்ளது. என்னைப் பொறுத்த வரையில் இவர்கள் ஐ.நா.வின் உள்வீட்டு விடயங்கள் புரியாதவர்களென்றே கூறுவேன்.

இலங்கை விடயத்தில் அமெரிக்கா அக்கறை

காரணம், அமெரிக்கா மனித உரிமை சபையில் அங்கத்துவம் வகித்தார்களோ இல்லையோ, அவர்கள் நிச்சயம் இலங்கை விவகாரங்களில், விசேடமாக மனித உரிமை விடயங்களில் நல்ல கரிசனையாகவுள்ளனர். இதற்கு பற்பல உதாரணங்கள் இருந்த போதிலும், சுருக்கமாகக் கூறுவதானால், இலங்கைக்கு இரு வருட அவகாசம் கொடுக்கும் வேளையில், அமெரிக்காவின் பின்ணனியிலேயே யாவும் நகர்த்தப்பட்டது என்பதை எத்தனை பேர் அறிவார்கள்?

அடுத்து அமெரிக்காவின் மனித உரிமை சபையின் பிரசன்னம் என்பது – குடியரசு கட்சியை சார்ந்தவர் ஜனாதிபதியாகத் திகழும் வேளையில் மனித உரிமை சபையிலிருந்து விலகுவதும், ஜனாதிபதி கட்சியின் ஜனாதிபதி காலத்தில் மனித உரிமை சபையில் வெளிப்படையாக அங்கத்துவம் பெறுவதுமே அமெரிக்காவின் போக்காகவுள்ளது. இவ்வடிப்படையில், அடுத்த நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், ஜனநாயக கட்சியைச் சார்ந்தவர் வெற்றி பெற்றால், அமெரிக்கா நிச்சயம் மனித உரிமை சபையில் தனது செயற்பாடுகளை வெளிப்படையாக நகர்த்தும்.

எதிர்காலத்தில் இலங்கை மீது ஐ.நா. மனித உரிமை சபையில் சமர்ப்பிக்கப்படும் தீர்மானத்திற்கு, குறைந்தது இருப்பத்து ஐந்து முதல்இருபத்து ஏழு நாடுகளின் வாக்குகளால் (25-27) நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இது பற்றி ஆய்வுசெய்ய விரும்பியவர்கள் யாவரும் – முன்னைய தீர்மானங்கள் மீதான வாக்களிப்புகள், தற்போதைய 47 நாடுகளின் அங்கத்துவம், இலங்கையின் தற்போதைய நிலைப்பாடு போன்ற பல விடயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அடுத்து, இலங்கையை ஐ.நா. மனித உரிமை சபையின் தீர்மானம் மூலம் பாதுகாப்புச் சபைக்கு அனுப்பினாலும், அங்கு சீனா, இலங்கை  விடயத்தில் அக்கறை கொள்ளுமென விவாதம் செய்பவர்கள்,சூடானுடன் மிக நட்பாக பாரிய வர்த்தகத்தில், விசேடமாக எண்ணெய் வியாபாரத்தில் ஈடுபட்ட சீனா, சூடான் ஜனாதிபதி ஒமார் எல் பாசீரை பாதுகாப்பு சபை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு சிபார்சு செய்த வேளையில், சீனா என்ன செய்துள்ளது என்பதை படித்து அறிந்துகொள்ள வேண்டும்.

எம்மைப் பொறுத்தவரையில், எமது பாரிய அனுபவங்களின் அடிப்படையில், எதிர்காலத்தில் ஜெனிவா மனித உரிமை சபையில் இலங்கை மீது கொண்டுவரப்படும் தீர்மானம், எந்தத் தடையுமின்றி நிறைவேறும்.

ஆகையால், இலங்கை மீதான எதிர்கால தீர்மானம் ஐ.நா. மனித உரிமை சபையில் வெற்றிபெறுவதற்கு – புலம்பெயர் வாழ் தமிழர், செயற்பாட்டாளர்கள், சகல அமைப்புகளின் பங்குடன், வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பாரளுமன்ற உறுப்பினர்களதும், அவ்விடத்தில் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள், காணாமல் போனோரது பெற்றோர் உறவினர்களினது பங்களிப்பு மிக மிக முக்கியம்.

  • ச.வி.கிருபாகரன், பிரான்ஸ்