இந்த ஆண்டு நடக்கும் ‘மலபார்’ கூட்டு கடற்படை பயிற்சியில் ஆஸ்திரேலியா பங்கேற்கும் என இந்தியா அறிவித்துள்ளது.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய 3 நாடுகள் இணைந்து ‘மலபார்’ கூட்டு கடற்படை பயிற்சியை ஆண்டுதோறும் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் நடத்தி வருகின்றன. முதன்முதலில் கடந்த 1992-ம் ஆண்டு இந்தியா மற்றும் அமெரிக்காவின் கடற்படைகள் இந்திய பெருங்கடலில் ‘மலபார்’ கூட்டு பயிற்சியை தொடங்கின.
அதன்பின், 2015-ம் ஆண்டில் இந்த கூட்டு கடற்படை பயிற்சியில் ஜப்பானும் நிரந்தர பங்கேற்பாளராக இணைந்தது. அப்போதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 3 நாடுகளும் கூட்டு கடற்படை பயிற்சி வெற்றிகரமாக நடத்தி வருகின்றன.
இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளாக இந்த கூட்டு கடற்படை பயிற்சியில் நிரந்தர பங்கேற்பாளராக இணைவதற்கு ஆஸ்திரேலியா விருப்பம் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு நடக்கும் ‘மலபார்’ கூட்டு கடற்படை பயிற்சியில் ஆஸ்திரேலியா பங்கேற்கும் என இந்தியா அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கடல்சார் பாதுகாப்பு களத்தில் மற்ற நாடுகளுடனான ஒத்துழைப்பை அதிகரிக்கவும், ஆஸ்திரேலியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பின் வெளிச்சத்தை இந்தியா காணவும் ‘மலபார் 2020’ கூட்டு கடற்படை பயிற்சியில் ஆஸ்திரேலிய கடற்படையின் பங்களிப்பு இருக்கும்.
இந்த கூட்டு பயிற்சி, பங்கேற்கும் நாடுகளின் கடற்படைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும்” என கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான ‘மலபார்’ கூட்டு கடற்படை பயிற்சி அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவுடனான எல்லைப் பிரச்சினை அதிகரித்து வரும் நிலையில், மலபார் பயிற்சியில் ஆஸ்திரேலியா இணைவது சீனாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.