அக்டோபர் 17ல் நடைபெற்ற நியூசிலாந்து பாராளுமன்றத் தேர்தலிலே லேபர் கட்சிக்கு மகத்தான வெற்றி கிடைத்திருக்கின்றது.
நியூசிலாந்து பாராளுமன்றத்துக்கான தேர்தல், செப்டெம்பர் 19ல் நடைபெறுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனாத் தொற்றுப் பரவல் ஏற்பட்டதனால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. தொற்றின் வீரியம் ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்பட்டது. இருந்தாலும் நிச்சயமற்ற ஒரு சூழ்நிலை நிலவியது. அதனால் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வது பொருத்தமில்லை. வாக்களிப்பதற்கான இயல்பான சூழல் மக்களுக்குக் கிடைக்காது என்னும் அபிப்பிராயம் கட்சிகளிடையே ஏற்பட்டது. அதனாலேயே தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கு முன்னரும் மூன்று தடவைகள் நியூசிலாந்தில் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. முதலாவது உலகமகாயுத்தம் காரணமாக 1917லும், உலகளாவிய பொருளாதார வீழ்ச்சி (கிரேட் டிப்ரெஷன்) காரணமாக 1934லும், இரண்டாவது உலகமகாயுத்தம் காரணமாக 1941லும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.
2020 பாராளுமன்றத் தேர்தலிலே, லேபர் கட்சி தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கின்றது. கலப்பு அங்கத்தவர் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையை நியூசிலாந்து கொண்டதாகும். அஃது அறிமுகப்படுத்தப்பட்ட கடந்த 24 ஆண்டுகளில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடனேயே ஆட்சி அமைக்க முடிந்திருக்கின்றது. அத்தகைய சூழலை, தற்போதைய தேர்தல் முடிவு மாற்றியிருக்கின்றது.
கலப்பு அங்கத்தவர் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையில், இரண்டு பிரிவுகளில் பாராளுமன்ற அங்கத்தவர் தெரிவாகின்றனர். ஒன்று, தொகுதி முறையிலான தெரிவு. மற்றையது, பட்டியல் முறையிலான தெரிவு. நியூசிலாந்து பாராளுமன்றத்தில் 120 ஆசனங்கள் காணப்படுகின்றன. அதிலே 71 ஆசனங்கள் தொகுதிவாரியான தெரிவுக்கு உரியவையாகும். மீதமுள்ள 49 ஆசனங்கள், ஐந்து சதவிகிதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெறுகின்ற கட்சிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகின்றன.
ஒரு வாக்காளருக்கு இரண்டு வாக்குகள் உள்ளன. ஒரு வாக்கு, தொகுதிக்கான அங்கத்தவரைத் தெரிவு செய்வதற்கான வாக்காகும். இரண்டாவது வாக்கு, அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கு அளிக்கப்படுகின்ற வாக்காகும்.
ஒவ்வொரு தொகுதியிலும் அதிக வாக்குகளைப் பெறுகின்றவரே, தொகுதி அங்கத்தவராகத் தெரிவாகின்றார்.
கட்சிக்கு அளிக்கப்படுகின்ற வாக்குகளில், ஐந்து சதவிகிதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெறுகின்ற கட்சிகளுக்கு, பட்டியல் வழியாக ஆசனங்கள் ஒதுக்கப்படுகின்றன. கட்சியின் கொள்கைகளுக்காக வழங்கப்படுகின்ற வாக்கு மூலமாகவே, பட்டியல் வழியான அங்கத்தவர்கள் தெரிவாகின்றனர். ஒவ்வொரு கட்சியும், பட்டியல் வழியாகத் தெரிவு செய்யப்படக்கூடிய அங்கத்தவர்களின் பட்டியலைத் தேர்தலுக்கு முன்னரே சமர்ப்பிக்கின்றன. அதனால், கட்சியின் பட்டியல் வழியாக யாரெல்லாம் தெரிவுசெய்யப்படக்கூடும் என்னும் பிரக்ஞையுடனே வாக்கு பெறப்படுகின்றது.
பொதுவாக மேற்கத்திய அரசியல்கட்சிகள் சித்தாந்த ரீதியிலே அமைந்தவையாகும். பாரம்பரியம், முதலாளித்துவம் போன்றவற்றை முதன்மைப்படுத்துகின்றவை வலதுசார் கட்சிகள் எனப்படுகின்றன. ஒடுக்கப்படுகின்ற மக்களின் குரலாகவே இடதுசார் கட்சிகள் அடையாளமாகின்றன. உலகின் பல்வேறு நாடுகளிலும் வலது மற்றும் இடதுசார் கட்சிகளும் மையவாத அரசியலிலேயே காணப்படுகின்றன. அதற்கு, நியூசிலாந்தின் இரண்டு பெரிய கட்சிகளான வலதுசார் நஷனல் கட்சியும், இடதுசார் லேபர் கட்சியும் விதிவிலக்கல்ல. பொருளாதாரக் கொள்கை, அடிப்படைக் கட்டுமான அபிவிருத்தி போன்ற விடயங்களிலே இரண்டு கட்சிகளும் ஒத்ததன்மைகளையே கொண்டிருக்கின்றன. வரிச்சுமை, வேலையற்றவர்களுக்கான உதவித்தொகை போன்ற விடயங்களிலேயே பெரிய கட்சிகளிடையே ஓரளவு வேறுபாட்டைக் காணலாம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் போன்ற விடயங்களில் இடதுசார் கிரீன் கட்சியே தீவிரமான கொள்கை நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது.
120 அங்கத்தவர்களைக் கொண்ட நியூசிலாந்து பாராளுமன்றத்திலே ஆட்சி அமைப்பதற்கு 60 அங்கத்தவர்களின் ஆதரவு தேவையாகும். 2017 பாராளுமன்றத் தேர்தலில் நஷனல் கட்சிக்கு 56 ஆசனங்களே கிடைத்தது. அதனுடைய கூட்டாளியான அக்ட் கட்சிக்கு ஒரு ஆசனமே கிடைத்தது. மறுவளத்தில், லேபர் கட்சிக்கு 46 ஆசனங்களே கிடைத்தது. அதனுடைய கூட்டாளியான கிரீன் கட்சிக்கு 8 ஆசனங்களே கிடைத்தன. அதனால் இரண்டு பெரிய கட்சிகளும் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஒன்பது ஆசனங்களைக் கொண்டிருந்த நியூசிலாந்து வெஃஸ்ட் கட்சியே ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாகியது. அதனாலேயே பாராளுமன்றப் பலத்தைக் கொண்டிராத லேபர் கட்சியினால் ஆட்சி அமைக்க முடிந்தது. ஜசிந்தா ஆர்டனால் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பிரதமராக முடிந்தது.
2020 தேர்தலிலே நிலைமை முற்றிலுமாக மாற்றமடைந்துள்ளது. லேபர் கட்சிக்கு 64 ஆசனங்கள் கிடைத்திருக்கின்றன. அதனால் தனித்து ஆட்சி அமைக்கும் பலம் கிடைத்திருக்கின்றது. ஆனாலும், கூட்டாளியான கிரீன் கட்சியை அரவணைத்த வகையிலேயே லேபர் கட்சி செயற்படுமெனக் கணிக்கப்படுகின்றது. மறுவளத்தில், நஷனல் கட்சி மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்திருக்கின்றது.
நியூசிலாந்துப் பாராளுமன்றத்தின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகளாகும். பொதுவாக ஆட்சியைப் பொறுப்பேற்கின்ற கட்சி, ஆகக் குறைந்தது இரண்டு பதவிக்காலத்துக்கேனும் தொடர்ந்து ஆட்சி செய்வதற்கான வாய்ப்பு அமைந்துவிடுகின்றது. அந்தவகையிலே 2017ல் ஆட்சிப்பீடமேறிய லேபர் கட்சி, தற்போதைய தேர்தலிலும் வெற்றிபெறுமெனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கலப்பு அங்கத்தவர் விகிதாசார தேர்தல் முறையிலே தனித்து ஆட்சியமைக்கக்கூடிய வெற்றி கிடைக்குமென எதிர்பார்க்கப்படவில்லை. கொரோனத் தொற்றை அரசு கையாள்கின்ற பாங்கே, லேபர் கட்சியின் மகத்தான வெற்றிக்குக் காரணமாகக் கருதப்படுகின்றது.
உலகளாவியரீதியில் கொரோனாத் தொற்று சவாலானதாகக் காணப்படுகின்றது. நியூசிலாந்தும் அதற்கு விதிவிலக்கல்ல. முதலாவது கொரோனாத் தொற்று நியூசிலாந்தில் பெப்ரவரியில் ஆரம்பமாகியது. கொரோனாத் தொற்றை அரசு கையாள்கின்ற பாங்கு, உள்நாட்டில் நம்பிக்கைகளை ஏற்படுத்தியது. துறைசார் வல்லுனர்களின் ஆலோசனைகளைப் பெறுவது, தீர ஆராய்ந்து துரிதமான தீர்மானங்களை மேற்கொள்வது, அவ்வாறான தீர்மானங்களை பொதுமக்களுக்கு புரியும்படி சொல்வது என்னும் மூன்று விடயப்பரப்பு வழியாகக் கொரோனாப் பேரிடரைக் கையாண்ட, ஜசிந்தா ஆர்டனின் தலைமைத்துவப் பண்பு பரவலான கவனத்தை ஈர்த்தது.
கொரோனாப் பேரிடருக்கு முன்னர் ஏற்பட்ட கிரைஸ்ட்சேர்ச் படுகொலை சம்பவமும், ஜசிந்தா ஆர்டனின் சாதுர்யமான தலைமைத்துவப் பண்புகளை வெளிப்படுத்தின.
தொடர்சியான சம்பாஷணைகள், கூட்டுத் தீர்மானங்கள், அரவணைக்கும் பாங்கு, எளிமையான உரையாடல்கள் என்பவையே ஜசிந்தா ஆர்டனின் தனித்துவமான தலைமைத்துவப் பண்புகளாகும். அதுவே, கட்சி வேறுபாடுகளைக் கடந்து நியூசிலாந்தை வழிநடத்தக்கூடிய நல்ல தலைவராக ஜசிந்தா ஆர்டனை 2020 பாராளுமன்றத் தேர்தல் முடிவு அடையாளப்படுத்தியுள்ளது.