எனது 40 ஆண்டு சினிமா வாழ்க்கையில் யாரும் என்னிடம் தவறாக நடக்கவில்லை என நடிகை ஹேமமாலினி தெரிவித்துள்ளார்.
இந்தி திரை உலகமான பாலிவுட்டில் தற்போது போதைப்பொருள் பயன் படுத்தும் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பாலிவுட்டில் நடிகர்- நடிகைகளிடையே போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தை அடுத்து பாலிவுட் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அங்குள்ள சில டிவி சேனல்கள், திரைத்துறையினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி விமர்சித்து வருகிறார்கள். இதையடுத்து இரண்டு டிவி சேனல்களுக்கு எதிராக 34 பாலிவுட் தயாரிப்பு நிறுவனங்களும், 4 சங்கங்களும் இணைந்து டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன. அதில் சில டிவி சேனல்கள் திரைப்பட துறையினருக்கு எதிராக பொறுப்பற்ற, கேவலமான மற்றும் அவதூறான கருத்துக்களை வெளியிடுவதை தடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
இந்நிலையில் பாலிவுட் திரை உலகம் மீது எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்து பிரபல நடிகை ஹேமமாலினி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: அவமானப்படுத்துவது மிகவும் அதிகமாக செல்கிறது. அனைவரும் கறைபடாதவர்கள் என்று நான் சொல்லவில்லை.
ஆனால் நம் அனைவரையும் போதைப் பொருள் பயன்படுத்துபவர்கள், தீமையானவர்கள் என்று முத்திரை குத்துவது வெட்கக்கேடானது. சகித்துக் கொள்ள முடியாதது. பாலிவுட் திரை உலகில் 40 ஆண்டுகளாக இருக்கிறேன். நான் ஒரு போதும் தவறாக நடந்து கொண்டதில்லை. யாரும் என்னிடம் தவறாகவும் நடந்து கொள்ளவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.