நியூஸிலந்தில் சமூக அளவில் ஒரு கிருமித்தொற்றுச் சம்பவம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
தென் பிசிபிக் நாடான நியூஸிலந்து கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக அந்நாட்டுப் பிரதமர் ஜசிண்டா ஆர்டன் இரண்டு வாரங்களுக்கு முன்னர் அறிவித்திருந்த நிலையில், புதிய தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் உருவாகிக்கொண்டிருக்கும் சமயத்தில் பாதிக்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டதால் எளிதில் அவரைத் தனிமைப்படுத்த முடிந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவர் இம்மாதம் 14ஆம் தேதி கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்ககூடும் என்று நம்பப்படுகிறது.
நியூஸிலந்துத் தேர்தலில் திருவாட்டி ஆர்டனின் தொழிற்கட்சி பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றிபெற்று ஒரு நாள் ஆகியுள்ள நிலையில் கிருமித்தொற்றுச் சம்பவம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கிருமிப்பரவலைத் திருவாட்டி ஆர்டனின் அரசாங்கம் திறம்படக் கையாண்டது வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது.