அவுஸ்ரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்ரேலியா வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் தென் ஆப்பிரிக்கா அணி திணறி வருகிறது.
டுபெலிசிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக அவுஸ்ரேலியா சென்றுள்ளது.
அவுஸ்ரேலியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் இன்று தொடங்கியது.
தென் ஆப்பிரிக்கா அணியில் புதுமுக வீரர் கேசவ் மகராஜ் இடம் பெற்றார். சுழற்பந்து வீரரான அவருக்கு 26 வயதாகிறது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதல் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அவுஸ்ரேலியா வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் தென் ஆப்பிரிக்கா திணறியது. தென் ஆப்பிரிக்கா அணி 32 ரன் எடுப்பதற்குள் (12.2 ஓவர்) 4 விக்கெட் இழந்தது.
ஸ்டார்க் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் தொடக்க வீரர் ஸ்டீபன் கூக் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.
ஹாசல்வுட்டின் பந்து வீச்சில் ஹசிம் அம்லா (0), மற்றொரு தொடக்க வீரர் எல்கர் (12 ரன்) வெளியேறினார்கள். டுமினியை (11 ரன்) சிடில் வெளியேற்றினார்.
5-வது விக்கெட்டான டுபெலிசிஸ்-பவுமா ஜோடி நிதானத்துடன் விளையாடி வருகிறது.
பெர்த் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா அணி கடைசியாக விளையாடிய 2 டெஸ்டிலும் வெற்றி பெற்று இருந்தது.
2008-ம் ஆண்டு 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2012-ம் ஆண்டு 309 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. தற்போது அந்த அணியின் பெர்த் மைதான ஹாட்ரிக் வெற்றியை அவுஸ்ரேலியா தடுத்து நிறுத்தும் ஆர்வத்தில் இருக்கிறது.