இலங்கைத் தீவில் சர்வாதிகார பெரும்பான்மை ஆட்சி தலையெடுக்கிறது

கஸ்ட் 5ம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல், சிங்களத் தேசியவாதம், பௌத்த அடிப்படைவாதம் மற்றும் சர்வாதிகார சக்திகளுக்குக் கிடைத்த மகத்தான வெற்றிவாகும். மகிந்த மற்றும் கோத்தபாய ராஜபக்ச சகோதரர்கள் போர்க் கதாநாயகர்களாக சிங்கள-பௌத்த பெரும்பான்மையினால் கணிக்கப்படுபவர்கள். அரசியலமைப்புச் சட்ட நெருக்கடி மற்றும் ‘ஈஸ்ரர் 2019’ தாக்குதலுக்கு இட்டுச்சென்ற பாதுகாப்பு முன்னேற்பாட்டுக் குறைபாடு என்பன அதே ஆண்டு கோத்தபாய ஜனாதிபதியாகவும் மகிந்த பிரதமராகவும் பதவியேற்பதற்குரிய வழியைத் திறந்துவிட்டிருந்தது.

2020 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னான சூழல், குடும்ப ஆட்சிக்கான அதிகாரத்தை மேலும் வலுவாக்கியுள்ளது:பொதுஜன பெரமுன – இடதுசாரிக் கவர்ச்சிவாதத்தினதும் பௌத்த தேசியவாதத்தினதும் ஒருவகைக் கலவையான இந்தக்கூட்டின் மகத்தான வெற்றியினூடாக – நாடாளுமன்றத்தில் இரண்டில் மூன்று பெரும்பான்மையை சகோதரர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். பாதுகாப்பு, ஒழுங்கு மற்றும் பொருளாதார வளர்ச்சியை இக்குடும்ப ஆட்சி உறுதிப்படுத்தும் என்ற பெருத்த நம்பிக்கை தென்னிலங்கை மக்கள் மத்தியில் நிலவுகிறது. தீவின் இன, மதச் சிறுபான்மையினர் அதிகாரமற்றவர்களாக ஓரம்கட்டப்பட்ட நிலையில் ஒரு சர்வாதிகார ஆட்சி வடிடிவடுப்பதைக் காணும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.

இது சிறுபான்மையினருக்கு எத்தகைய விளைவினை ஏற்படுத்தும் என்பதை ஒரு விரைந்த வரலாற்று மீள்பார்வை மூலம் புரிந்துகொள்ளலாம். இலங்கையின் உள்நாட்டுப்போர் இனரீதியிலான அடிப்படைகளைக் கொண்டிந்தது. தமிழ்த்தரப்பு எதிர்ப்பியக்கம் ஒரு மதச்சார்பற்ற தேசியவாத நிகழ்ச்சிநிரலைக் கொண்டிருந்த அடிப்படையில் மதம் குறைந்தளவு பங்கினையே வகித்தது. ஆனபோதும் பௌத்த தேசியவாதம் பற்றித் தனியாகப் பேசக்கூடிய வகையில், சிங்களத் தேசியவாதம் பௌத்தத்தோடு வலுவான பிணைப்பினைக் கொண்டிருக்கிறது. 2009இல் போர் முடிவுக்கு வந்ததை அடுத்து, முரண்பாட்டுக் கோடுகள் புதியதும் குறிப்பிடத்தக்கதுமான மதம் சார்ந்த திருப்பங்களை அடைந்துள்ளது.

2012 இலிருந்து தீவிர முஸ்லீம் வெறுப்பு பௌத்த அடிப்படைவாதக் குழுக்கள் வளர்ச்சி பெற்றுள்ளன. ராஜபக்ச குடும்பத்தின் பாதுகாப்பின் கீழ் இக்குழுக்கள் வளர்ந்தன. 2019இல் கோத்தபாய ஜனாதிபதியாகப் பதவியேற்றததையடுத்து, பௌத்த தேசியவாதிகள் மீண்டும் உத்வேகம் பெற்றுள்ளனர். இடம்பெற்ற பாரிய பயங்கரவாதத் தாக்குமல்களின் பீதியும், அத்தோடு கோவிட்- 19 சூழலும் அதற்கு மிகவும் உதவியது.

இலங்கையில் கோவிட்-19 பெருந்தொற்று ஜனாதிபதிக்கு தன் அதிகாரங்களை விரிவாக்குவதற்குரிய வாய்ப்பினை வழங்கியுள்ளது. நாடாளுமன்றத்தைக் கலைத்தல், நேரடியான ஆணைகள் மூலம் ஆட்சி நடத்துவதற்குரிய வாய்ப்புகள் இதில் அடங்குகின்றன. அதேநேரம் மிகமோசமான வெறுப்பினை இலங்கை முஸ்லீம் மக்கள் மீது மற்றொரு சுற்று கட்டவிழ்த்துவிடுவதற்கான சூழலையும் கோவிட்-19 சாதகமாக்கியுள்ளது. இறப்பு எண்ணிக்கை குறைவாக இருக்கின்ற போதும், முஸ்லீம் மக்கள் மத்தியில் தொற்றுப்பரம்பல் சார்ந்த அதிகப்படியான பிரதிநிதித்துவம் இல்லாதபோதும், வைரஸ் பரம்பல் முஸ்லீம்களுடனும் அவர்களின் மத நடைமுறைகளுடனும் தொடர்புபடுத்திப் பொதுவெளியில் பேசப்படுகின்றன. குறிப்பாக இறந்தவர்களைப் புதைப்பது, தகனம் செய்வதைவிட அதிக தொற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்ற கருத்துருவாக்கம் செய்யப்படுகின்றது. இதுபோன்ற தொடர்பு எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பு பலமுறை சுட்டிக்காட்டியுள்ளபோதும் இக்கருத்துருவாக்கம் மேற்கொள்ளப்படுகின்றது.

கொரோனாவுக்கு எதிரான பல நடவடிக்கைளில் ஒன்றாக இறந்தவர்களைப் புதைப்பதற்கு சுகாதார அமைமச்சகம் தடைவிதித்தது. இவ்வறிவிப்பு தமது மத நடைமுறைகள் மீதான நேரடியான தாக்குதலாகப் பல முஸ்லீம்கள் கருதுகின்றனர். இலங்கை முஸ்லீம்களைப் பொறுத்தவரை, கோவிட் -19 என்பது போர் முடிவுற்றதையடுத்து பௌத்த தேசியவாதிகள் கட்டவிழ்த்துவிட்ட பாரிய முஸ்லீம் வெறுப்பு விபரிப்புகளுக்கான மற்றொரு கருவியாக ஆகியுள்ளது. அதனைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சி எடுக்கவில்லை.

ஓகஸ்ட் தேர்தலில் வாக்களிப்பில் பங்கேற்பு மிகக் குறைவு. குறிப்பாக தமிழர் பெரும்பான்மையாகவுள்ள வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் வாக்களித்தோர் குறைவு. ஒரு சிதறிப்போன, பிளவுபட்ட, செயல்முடக்கமடைந்த எதிர்க்கட்சியினால் வாக்காளர்களைத் திரட்ட முடியவில்லை. ராஜபக்ச-குடும்பத்தின் வலுவான நாடு, பாதுகாப்பு, பௌத்த மதத்தை பாதுகாத்தல் போன்ற வாக்குறுதிகளுக்கு தெற்கின் சிங்கள-பௌத்த பெரும்பான்மை வாக்களித்தது. புதிய நாடாளுமன்றம் சிறுபான்மைப் பின்னணியிலிருந்து வெகுசில உறுப்பினர்களையே கொண்டிருக்கின்றது. சிறுபான்மைப் பிரதிநிதித்துவத்தின் பற்றாக்குறையானது எதிர்பார்க்கப்படுகின்ற அரசியலமைப்பு மாற்றங்களுடன் மேலும் நலிவடைவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கும்.

செப்டம்பர் 2 அன்று, மனித உரிமைக்குழுக்கள் மற்றும் சிறுபான்மை அரசியல்வாதிகளின் பெரும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில், அரசியலமைப்பு திருத்தத்திற்கான முன்மொழிவுத் திட்டம் வெளியிடப்பட்டது. நாடாளுமன்றத்திலிருந்து ஜனாதிபதிக்கு அதிகாரம் மாற்றப்படுதல் எதிர்ப்புகளுக்கான பின்னணியாகும். அதாவது ஒரு வருடத்தின் பின் எவ்விதக் காரணங்களுமின்றி ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும், அத்தோடு அத்துடன் உச்சநீதிமன்ற நீதிபதிகள், அரச சட்டவாளர்கள், காவல்துறை மற்றும் இலங்கையின் மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட அனைத்து பொது பதவிகளுக்குமான நியமனங்களை ஜனாதிபதி தன்னிச்சையாக வழங்க முடியும்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இந்த மாற்றங்களைக் கொண்டுவருவதற்குத் தேவையான ஆதரவினை ஜனாதிபதி கொண்டிருக்கின்றார். வாக்காளர்கள் இத்தகைய ஜனநாயகத் தேர்தல் மூலம் கிட்டத்தட்ட கட்டற்ற ஒரு ஜனாதிபதி ஆட்சிக்குரிய வாக்கினை அளித்துள்ளனர். மிகக் குறுகிய காலத்தில், சிறுபான்மையினருக்கான பாதுகாப்பு முன்னரைவிடப் பலவீனமாக்கப்பட்ட சூழலில், இலங்கை ஒரு பௌத்த சர்வாதிகார ஆட்சிபீடமாக மாறக்கூடும். போருக்குப் பின்னான நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கோ அல்லது எதிர்காலத்தில் பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளுக்கோ உகந்ததான சூழல் அங்கு தென்படவில்லை.

Iselin Frydenlund, பேராசிரியர்

இலங்கைத் தீவின் உள்நாட்டுப் போரில் பௌத்தமும் வன்முறையும்’ எனும் ஆய்வுப்பொருளில் கலாநிதிக் கற்கை ஆய்வினை 2011இல் சமர்ப்பித்தவர். இலங்கை மற்றும் மியான்மாரின் தேரவாத பௌத்தம் பற்றிய ஆய்வுகளை முதன்மையாக மேற்கொண்டுவருபவர். அதிலும் பௌத்தம் – தேசியவாதம் – அரசியல் மற்றும் வன்முறை ஆகியவற்றுக்கிடையிலான உறவு சார்ந்த ஆய்வுகளில் நிபுணத்துவ அறிதலும் ஆய்வநுபவமும் கொண்டிருக்கின்றார். போர் மற்றும் சமாதானத்தில் மதத்தின் பங்கு, தற்கொலைப் பயங்கரவாதம், மத நல்லிணக்க உரையாடல், மற்றும் மத அல்லது நம்பிக்கைச் சுதந்திரம் ஆகியவையும் இவரது ஆய்வுத்துறைக்குள் அடங்குகின்றன.

  • இக்கட்டுரை Class Struggle என்ற நோர்வேஜிய நாளிதழில் 10-09-2020 வெளிவந்தது
  • தமிழாக்கம்: ரூபன் சிவராஜா