ஆஸ்திரேலியரை திருமணம் செய்து கொள்ளும் வெளிநாட்டவர் ஆஸ்திரேலியாவில் நிரந்தர விசா பெற ஆங்கிலத் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற புதிய நடைமுறையை ஆஸ்திரேலிய ஆளும் தரப்பு கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அரசின் இந்த முடிவு பாரம்பட்சமிக்கது என விமர்சனம் எழுந்துள்ள நிலையில், இது சமூகப் பிணைப்புக்கு உதவியாக இருக்கும் எனக் கூறுகிறது ஆஸ்திரேலிய அரசு.
“விசா கோரி விண்ணப்பிப்பவரும், அவருக்கு ஸ்பான்சர் செய்பவரும் செயல்பாட்டு அளவிலான ஆங்கிலத்தை தெரிந்திருக்க வேண்டும், அல்லது குறைந்தபட்சம் ஆங்கிலம் கற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை எடுத்திருக்க வேண்டும்,” எனக் கூறியிருக்கிறார் ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் அலன் டஜ்.
ஆங்கிலம் கற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் என்பது சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் அரசின் இலவச திட்டத்தின் கீழ் 500 மணிநேர ஆங்கில வகுப்புகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.
ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் முக்கிய பணி விசா, மாணவர் விசா பெறுவதற்கு ஆங்கிலப் புலமை அவசியமானதாக இருக்கின்றது. அத்துடன், ஆஸ்திரேலிய குடியுரிமை பெற விண்ணப்பிக்கும் ஒருவர் கட்டாயம் ஆங்கிலத் தேர்வில் வெற்றியடைந்திருக்க வேண்டும்.
ஆஸ்திரேலியாவில் ஆங்கிலம் அறியாத அல்லது மோசமான ஆங்கில திறனுடன் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட குடியேறிகள் உள்ளதாகவும் அந்த நிலை அவர்களது வேலை மற்றும் சமூக திறன்களை கட்டுப்படுத்தி வைத்துள்ளதாகவும் கூறுகிறார் குடிவரவுத்துறை அமைச்சர் அலன் டஜ்.
“சில கணவர்கள் தங்களது மனைவி ஆங்கிலம் கற்பதை விரும்பவில்லை,” எனக் கூறும் அலன் டஜ், அதன் மூலம் அவர்களது மனைவியை கட்டுப்படுத்தலாம் என கணவர்கள் எண்ணுவதாக கூறுகிறார். அந்த வகையில், இந்த மாற்றம் பாதிக்கப்படக்கூடிய குடியேறிகளை பாதுகாக்க உதவும் என அவர் வாதிடுகிறார்.
அதே சமயம், இது இனவாத கண்ணோட்டத்தில் கொண்டு வர நினைக்கும் நடைமுறை என விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக மேற்குலக நாடுகளை சாராதவர்களை தவிர்க்கும் முயற்சி எனப்படுகின்றது.
கடந்த காலங்களில் ஆஸ்திரேலியாவுக்குள் ஐரோப்பியர்கள் அல்லாதவர்களை வருவதைத் தடுக்க பயன்படுத்தப்பட்ட ‘வெள்ளை ஆஸ்திரேலிய கொள்கை’ மொழித் தேர்வுகளுடன் Partner விசாவுக்கான தேர்வு முறையை விமர்சகர்கள் ஒப்பிடுகின்றனர்.
தற்போதை நிலையில், ஆஸ்திரேலியாவில் Partner விசா பெற சராசரியாக ஒருவர் இரண்டு ஆண்டு காலம் காத்திருக்க வேண்டியுள்ளது. அதற்கு விண்ணப்பத் தொகையாக 7,715 ஆஸ்திரேலிய டாலர்களை அவர்கள் செலுத்துகின்றனர்.
சமீபத்திய கணக்குகள் படி, 2017- 2018 நிதியாண்டில் ஆஸ்திரேலியாவில் 40,000+ Partner விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், நிலுவையில் அதை விட இரண்டு மடங்கு அதிகமான விசா விண்ணப்பங்கள் உள்ளதாகக் கூறப்படுகின்றது.