கொரோனா வைரசை தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமே தீர்வாகாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்தார்.
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளபோதும் கொரோனாவின் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
கொரோனாவால் இதுவரை 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசிகள் சோதனை இறுதிகட்டத்தில் உள்ளது. 9 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனை முயற்சியில் உள்ள நிலையில் சோதனை வெற்றியடையும் பட்சத்தில் இந்த தடுப்பூசிகள் வைரஸ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செலுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையிலும், மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையிலான மருந்துகளை தயாரிக்கும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த கொடிய வைரசை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் மட்டுமே அழிக்கமுடியும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா வைரசை தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமே தீர்வாகாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டெட்ரோஸ் ஆதனாம் நேற்று கூறியதாவது:-
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தடுப்பூசிகள் மூலம் வைரசை கட்டுப்படுத்துவிடலாம் என்று நினைக்கின்றனர். கொரோனா வைரசை பொதுமக்களிடம் பரவவிட்டு அதன் மூலம் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இந்த பெருந்தொற்றை தடுத்து விடலாம் என சில விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும், இது தான் கொரோனாவை தடுத்து நிறுத்த ஒரே வழி என்றும் கருத்துகின்றனர். இதற்கு அது தீர்வல்ல.
வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்வதே நோய் எதிர்ப்பு சக்தி என்பதே தவிர வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாவது அல்ல. ஒரு பெருந்தொற்றை நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டு கட்டுப்படுத்துவது என்பது வரலாற்றில் இல்லாத ஒன்று.
வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எவ்வாறு மீண்டும் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகுகின்றனர் என்பது குறித்த சிறு சிறு தகவல்கள் மட்டுமே எங்களிடம் உள்ளது. அதன் முழுமையான விவரங்கள் தெரியவில்லை. நாம் இதுவரை முமுமையாக புரிந்துகொள்ளாத ஒரு கொடிய வைரசை சுதந்திரமாக பரவ விடுவது நெறிமுறையற்றது’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.