ஆஸிபிரதமர் வாகனம் மீது போலி இரத்தம்! -பின் கதவால் தப்பிச் சென்ற பிரதமர்

வுஸ்திரேலியாவில் அகதிகளின் காலவரையறையற்ற தடுப்புக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் அமைப்பினர் இன்று காலை குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக வளாகத்திற்குள் முகக்கவசங்களுடன் சென்று அங்கு சமூகமளித்திருந்த பிரதமர் ஸ்கொட் மொறிஸனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

பிரதமரின் கார் உட்பட அவர் சமூகமளித்திருந்த மண்டபம் எனக் கருதப்படும் இடத்திற்கு தக்காளி மற்றும் இரத்தம்போன்று தயாரிக்கப்பட்ட சிவப்புச்சாயத்தையும் எறிந்து சேதம் விளைவித்துள்ளார்கள்.

இந்த சம்பவத்தினால் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக வளாகத்தில் இன்று காலை பதற்றம் நிலவியது. பல்கலைக்கழக மண்டபங்கள் இழுத்து மூடப்பட்டன. அங்கு சமூகமளித்திருந்த பிரதமர் ஸ்கொட் மொறிஸன் அவரது பாதுகாப்பு பிரிவினரால் வேறொரு பாதையினால் அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர் ஒருவர் நிறப்பூச்சு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுஸ் – நவுறு தீவுகளிலிருந்து கொண்டுவரப்பட்டு குயின்ஸ்லாந்து Kangaroo Point ஹோட்டலில் காலவரையறையற்ற தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள 120 அகதிகளின் விடுதலைக்காக அங்குள்ள அகதிகள் நல அமைப்புக்கள் பல மாதங்களாகவே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள்.

இந்த ஆர்ப்பாட்டங்களின் ஒரு பகுதியாக இன்று காலை குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் ஸ்கொட் மொறிஸன் சென்றிருந்தபோது, அகதிகளின் விடுதலையை கோரி சுமார் ஐம்பது போராட்டக்காரர்கள் அங்கு கூடியிருந்தனர். பிரதமருக்கு எதிராக பெரும் குரல் எழுப்பினர்.

இந்தக் களேபரத்தில் பிரதமரை அவரது பாதுகாப்பு அதிகாரிகள் பின் பக்க வாசலால் அழைத்துச்சென்றனர். வேறொரு வாகனத்தில் அவசரமாக ஏற்றப்பட்ட அவர் அங்கிருந்து வெளியறினார்.

பின்னர், இரத்தம்போன்று தயாரிக்கப்பட்ட நிறப்பூச்சு மற்றும் தக்காளித்தாக்குதல்களில் ஈடுபட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஒரு பெண்ணை தாங்கள் கைது செய்துள்ளதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர்.