ஹேமந்த் மதுகுமார் இயக்கத்தில் அமேசான் ப்ரைம் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியிட்ட சைலென்ஸ் படத்தின் திரைவிமர்சனம் பற்றி பார்ப்போம் .
இந்த படத்தில் அனுஷ்கா ஷெட்டி, மாதவன், அஞ்சலி, சுப்பராஜு, ஷாலினி பாண்டே, ஸ்ரீனிவாஸ் அவசராலா நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து ஹாலிவுட் சூப்பர் நடிகர் மைகேல் மாட்சென் நடித்துள்ளார். இவரை இயக்காத பெரிய இயக்குனர்களே இல்லை என்று சொல்லலாம் (ரிட்லி ஸ்காட், குவென்டின் டேரண்டினோ, ரோஜர் டொனல்டுசன், மைக் நியூவெல்).
கதைக்களம்
அமெரிக்காவில் ஸீயாட்டில் மாகாணத்தில் வுட் சைடு வில்லா என்ற பெரிய வீட்டில், ஒரு இளம் தம்பதியர் தங்கள் இரவை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். பிறகு, திகில் மூட்டும் இசையுடனும் ஒளிப்பதிவுடனும், அவர்கள் மர்ம முறையில் கொலைசெய்யப்படுகிறார்கள். கொலைக்காண காரணம் மற்றும் செய்த தடையங்கள், கொலைகாரர்கள் எதுவும் கண்டுபிடிக்க முடியாததால் அந்த பெரிய வீடு பேய் வீடாக பார்க்கப்படுகிறது. இந்த கொலையை செய்தது அந்த வீட்டின் உரிமையாளரின் இறந்துபோன மனைவி ஜோசஃபின் வுட்டின் ஆவி தான் என்று நம்பப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு, மகாலட்சுமி (மகா) என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கும் அஞ்சலி, ஸீயாட்டில் மாகாணத்தின் நட்சத்திர துப்பறிவாளர்… படத்தின் மீதிக் கதையைக் கூறுவதுபோல் அமைக்கப்படுகிறது.
அனுஷ்கா ஷெட்டி, ஒரு ஓவியர், இந்த படத்தில் ஊமை மற்றும் காது கேளாதவராக நடித்திருக்கிறார்…அவரும் அவருடைய நிச்சயிக்கப் பட்ட கணவருமான மாதவன் வுட் சைடு வில்லாவிற்கு ஒரு ஓவியத்தை வரைய செல்கிறார்கள். அங்கே பல ஆண்டுகளுக்கு முன் கொலை நடந்த அதே முறையில் மாதவன் கொல்லப்படுகிறார். அனுஷ்கா காயங்களுடன் அங்கிருந்து தப்பிக்கிறார். அஞ்சலி, மற்றும் மைகேல் மாட்சென் (ஸீயாட்டில் போலீஸ் டிபார்ட்மென்டின் கேப்டன்), மாதவனை கொன்ற கொலையாளியை கண்டுபிடிக்கிறார்களா அல்லது இந்த கொலையும் ஆவியின் வேலை என்கிறீர்களா என்பது தான் மீதிக் கதை.
சொதப்பல்கள்
ஷனில் டியோவின் ஒளிப்பதிவு, கோபி சுந்தரின் இசையில் திகிலுக்கு பஞ்சமில்லாதது போல் தொடங்கிய படம் திரைக்கதையில் சொதப்பி …படம் அதல பாதாளத்தில் விழுவதை கண்கூடாக பார்க்கமுடிகிறது. நட்சத்திர துப்பறிவாளர் அஞ்சலி ஒரு காட்சியில், ரத்தத்தைக் கண்டு வாயல் எடுக்க ஓடுவது போலீஸ் டிபார்ட்மென்ட்டை கேலி செய்வது போல் அமைந்துள்ளது. ஒரு காட்சியில், திகிலை கூட்ட (அனாதை இல்லத்தின் காப்பாளரிடம் அனுமதி பெற்று ஆவணங்கள் தேட வரும் அஞ்சலி மற்றும் அவர் கூட்டாளி) மின்விளக்கு ஏதும் போடாமல் டார்ச் லைட் வைத்து தேடுவது இயக்குனரின் த்ரில்லுக்கான மோகத்தையே காண்பிக்கிறது. படத்தில், “here it comes, there you go ” போன்ற தமிழ் வசனங்களுக்கு பஞ்சமே இல்லை.
படம் பார்க்கையில் எழுந்த ஒரு வேடிக்கை கதை ….அமெரிக்கா முதல் முதலில் விண்வெளிக்கு செல்லும்போது அங்கே எழுத பேணா ஒன்று கண்டுபிடித்தார்களாம்…அந்த ஆராய்ச்சியில் அமெரிக்கா பல மில்லியன் டாலர் செலவு செய்தது என்ற ஒரு கதை உண்டு….அதற்கு மாறாக ரஷ்யா விண்வெளியில் எழுத பென்சில் போதும் என்றனர். இந்த கதை எதற்கு நினைவிற்கு வந்தது? ஒரு பேய் வீட்டில் உள்ள படத்தை வரைய, நீங்கள் அங்கே செல்வீர்களா? இல்லை, படத்தை மட்டும் அனுப்பி வைக்க சொல்வீர்களா?