கூட்டமைப்பின் பேச்சாளரை ரெலோ, புளொட் தனியாக அறிவிக்கப்போகின்றனவா?

மிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியை ‘ரெலோ’வுக்கு தரப்போவதில்லை என்பதில் தமிழரசுக் கட்சி பிடிவாதமாக நின்றால், ‘புளொட்’ மற்றும் இணைந்து செயற்படக்கூடிய வேறு கட்சிகளுடன் சேர்ந்து கூட்டமைப்பாக புதிய பேச்சாளர் ஒருவரைத் தெரிவு செய்து நாம் தொடர்ந்து கூட்டமைப்பாகப் பயணிப்போம்” என ரெலோ உறுதியாகத் தெரிவித்திருக்கின்றது.

அதற்குத் தேவையான பாராளுமன்றப் பலமும், ஒருங்கிணைப் புகுக்குழுவின் ஆதரவும் தமக்கு இருப்பதாகவும் ரெரோ கூறுகின்றது.

கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியில் தொடரும், இழுபறிநிலை மற்றும் பாராளுமன்றக்குழுக் கூட்டத்தில் நடைபெற்றது என்ன? இது தொடர்பில் ரெலோவின் அணுகுமுறை என்ன என்பது தொடர்பில் ரெலோவின் உயர் குழுவின் முக்கிய உறுப்பினர் ஒருவரிடம் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்ட போது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பேச்சாளர் யாரும் இல்லை. கடந்த புதன்கிழமை இடம்பெற்ற பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில்? எம்.ஏ.சுமந்திரன் தான் பேச்சாளர் பதவியிலிருந்து விலகுவாதாக அறிவித்துவிட்டுத்தான், எஸ்.சிறிதரனுடைய பெயரைப் பேச்சாளர் பதவிக்குப் பிரேரித்தார். அப்போது செல்வம் அடைக்கலநாதனின் பெயரை நாம் பிரேரித்தோம். ஆனால், முரண்பாடு மேலோங்கியதால் தெரிவு இடம்பெறவில்லை. அதனால், பேச்சாளர் பதவி இப்போது வெற்றிடமாகவே உள்ளது. புதிய பேச்சாளர் தெரிவு செய்யப்படும் வரையில் அந்தப் பதவி வெற்றிடமாகவே இருக்கும். அதேபோல கூட்டமைப்புக்கு இப்போது கொரடாவும் இல்லை” என்பதைச் சுட்டிக்காட்டினார்.

 

கடந்த 7 ஆம் திகதி புதன்கிழமை காலை கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு கூடியது. அதில் தீர்மானம் எடுக்க முடியாத நிலையில், அன்று மாலை 7.00 மணிக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூடியது. அதன்போதும் பேச்சாளர் பதவி தொடர்பாக ஆராயப்பட்டது. ஆனால், அங்கும் உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை.

அங்கு கருத்து தெரிவித்த ஜனா கருணாகரம் முக்கியமான ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டினார். “இறுதியாக நடைபெற்ற கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில் – கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டிருந்த அந்தக் கூட்டத்தில் செல்வம் அடைக்கலநாதனை பேச்சாளராக நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது. ஒருங்கிணைப்புக் குழுவில் – கட்சித் தலைவர்கள் எடுக்கும் முடிவை பாராளுமன்றக்குழு மாற்றி அமைக்கும் வழமை இருப்பதில்லை. சம்பந்தன் ஐயா தலைவராக இருப்பார் என அந்தக் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி அவரையே பாராளுமன்றக் குழு தலைவராக நியமித்துள்ளோம். அதேபோன்ற நடைமுறைதான் பேச்சாளர் விடயத்திலும் கையாளப்பட்டிருக்க வேண்டும்” எனச் சுட்டிக்காட்டியிருந்தார்.

“இந்த நிலையில் பேச்சாளர் பதவி குறித்து ஆராயப்பட்டபோது சிறிதரனின் பெயரை சுமந்திரன் அறிவித்தது தவறு” என்பதைச் சுட்டிக்காட்டிய ரெலோவின் முக்கியஸ்த்தர், “செல்வம்தான் பேச்சாளராக இருக்க வேண்டும் என சம்பந்தன் அறிவித்த போது அதனையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றீர்கள்” தமிழரசுக் கட்சிக்குச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

செல்வம்தான் பேச்சாளராக நியமிக்கப்பட வேண்டும் என்பதைத்தான் பாராளுமன்றக் குழுவின் கூட்டத்தில் சம்பந்தன் வலியுறுத்தினார். ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மாற்றியமைக்க முடியாது எனவும் அவர் உறுதியாகக் கூறியிருந்தார். அதனைவிட மற்றொரு விடயத்தையும் சம்பந்தன் சொல்லியிருக்கின்றார். “இந்த விடயத்தை வாக்கெடுப்புக்கு விட முடியாது. அது கட்சி நாகரீகம் அல்ல” என உறுதியாகக் கூறியதாகவும் தெரிகின்றது. அந்த நிலையில்தான் பேச்சாளர் தெரிவை காலவரையறையின்றி சம்பந்தன் ஒத்திவைத்திருக்கின்றார். ஆனால், “வாக்களிப்பு என வந்தால் எனது வாக்கை செல்வம் அடைக்கலநாதனுக்கே அளிப்பேன்” என சம்பந்தன் கூறியதாகவும் தெரிவிக்கப்படகின்றது.

சம்பந்தன்

“கூட்டமைப்பின் அதி உயர் பீடமாக இருப்பது ஒருங்கிணைப்புக் குழுதான். அங்கு எடுக்கப்படும் முடிவைத்தான் பாராளுமன்றக் குழு நடைமுறைப்படுத்த வேண்டும். அதனால் ஒருங்கிணைப்புக் குழுவில்தான் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்” என ரெலோ வலியுறுத்தியிருக்கின்றது.

ஆனால், தமிழரசுக் கட்சியினர் – முக்கியமாக சுமந்திரன், சிறிதரன் தரப்பினர் பேச்சாளர் பதவியை ரெலோவிற்குக் கொடுப்பதில்லை என்பதில் பிடிவாதமாக இருப்பது கூட்டமைப்புக்குள் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கின்றது. அதேவேளையில் புதிய தெரிவு இடம்பெறும்வரையில் சுமந்திரன்தான் பேச்சாளராக இருப்பார் என்ற கருத்தையும் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். இது தொடர்பாக கருத்து வெளியிட்ட ரெலோவின் உயர் பீட உறுப்பினர் பின்வருமாறு கூறினார்;

“இந்தப் பிரச்சினைக்கு ஜனநாயக முறையில் தீர்வைக்காண்பதற்கு இப்போதும் முயற்சி செய்துகொண்டிருக்கின்றோம். சுமந்திரன் பதவி விலகுவாத அறிவித்தே சிறிதரனின் பெயரை முன்மொழிந்திருந்தார். அதனால் பேச்சாளர் பதவி இப்போது வெற்றிடமாகவே உள்ளது. தான்தான் பேச்சாளர் என சுமந்திரன் கூறினால், கூட்டமைப்பின் தலைவர்களை உள்ளடக்கிய ஒருங்கிணைப்புக்குழு எடுத்த முடிவுக்கு அமைய செல்வம் அடைக்கலநாதனே கூட்டமைப்பின் பேச்சாளர் என அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் எமக்கு ஏற்படும்” என குறிப்பிட்ட ரெலோ பிரமுகர் குறிப்பிட்டார்.

செல்வம் அடைக்கலநாதன்

“அதேவேளையில் பாராளுமன்றக்குழுவில் வாக்களிப்பு என்ற நிலை ஏற்பட்டால், செல்வத்துக்கு வாக்களிப்பது என்ற நிலைப்பாட்டை சம்பந்தன் உறுதியாகக் கூறிவிட்டார். அதேவேளையில் தேசியப் பட்டியில் மூலமாகத் தெரிவான கலையரசன் வாக்களிப்பில் பங்கேற்ற முடியாது. அதனால், அவ்வாறான நிலை ஏற்பட்டாலும் சுமந்திரன் – சிறிதரன் தரப்புக்கு நெருக்கடிதான் ஏற்படும்” என ரெலோ பிரமுகர் குறிப்பிடுகின்றார்.

அதனால்தான், “2018 இல் பாராளுமன்றப் பெரும்பான்மை இல்லாமல் மகிந்த ராஜபக்‌ஷ தரப்பினர் வலுக்கட்டாயமாக – அரசியலமைப்புக்கு முரணாக ஆட்சியைக் கைப்பற்ற முற்பட்டதைப்போலத்தான் இப்போது சுமந்திரன் – சிறிதரன் தரப்பு பேச்சாளர் பதவியைக் கைப்பற்ற முற்படுகின்றது” எனவும் ரெலோ பிரமுகர் குற்றஞ்சாட்டுகின்றார்.

“பேச்சாளர் பதவியை விட்டுக்கொடுப்பதில்லை என்பதில் சுமந்திரன் – சிறிதரன் தரப்பு விடாப்பிடியாக நின்றால், புளொட் அமைப்புடன் இணைந்து இது தொடர்பில் முடிவு ஒன்றை எடுத்து, கூட்டமைப்பின் பேச்சாளர் யார் என்பதை நாம் அறிவிப்போம்”  எனவும் குறிப்பிடுகின்றார் குறிப்பிட்ட ரெலோ பிரமுகர். இரு தரப்பினருமே விட்டுக்கொடுப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள்.

கூட்டமைப்புக்குள் பேச்சாளர் பதவியை மையப்படுத்திய இந்தப் பலப்பரீட்சை கடுமையாகியிருக்கின்றது. சம்பந்தனின் முடிவுக்குக் கட்டுப்படும் நிலையில் சுமந்திரன் – சிறீதரன் தரப்பு இல்லை என்பதும் தெரிகின்றது. இதற்கு என்ன முடிவு வரப்போகின்றது?