எஸ்.பி.பி.யின் நினைவாக பாடல்கள் பாடி தீபம் ஏற்றிய பாடகர்கள்

மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் நினைவாக அருணாசலேஸ்வரர் கோவிலில் பின்னணி பாடகர்கள் மோட்ச தீபம் ஏற்றி பக்திப்பாடல்கள் பாடினர்.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த சில தினங்களுக்கு முன் இறந்து விட்டார். அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்த பின்னணி பாடகர்கள் அவரது நினைவாக மோட்ச தீபம் ஏற்றினர்.

நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்பிரமணியின் சகோதரியும், பின்னணி பாடகியுமான எஸ்.பி.சைலஜா, அவரது கணவர் சுபலேகா சுதாகர், பின்னணி பாடகர்கள் மனோ, அனுராதாஸ்ரீராம், நகைச்சுவை நடிகர் மயில்சாமி, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் பின்னணி பாடகர்கள், உள்ளூர் இசை கலைஞர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 தொடர்ந்து பாடகர்கள் எஸ்.பி.சைலஜா, மனோ, அனுராதாஸ்ரீராம் ஆகியோர் பக்தி பாடல்கள் பாடினர். பின்னர் அவர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.