அவுஸ்திரேலிய காட்டில் விடப்பட்ட ‘டாஸ்மானியாவின் பேய்’

பாலூட்டி விலங்கினமான டாஸ்மானியாவின் பேய்(Tasmanian devil) 3,000 ஆண்டுகளுக்குப் பிறகு அவுஸ்திரேலிய பெருநிலப் பரப்பில் மீண்டும் விடப்பட்டுள்ளது.

இயற்கை பாதுகாப்புக் குழுக்கள் சிட்னியின் வடக்குப் பகுதியிலுள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் 26 பாலூட்டிகளை விடுவித்துள்ளனர்.

டாஸ்மானியாவின் பேய் என்று அழைக்கப்படும் இந்த விலங்குகள் அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு விலங்கினம்.
இது எழுப்பும் அதீத ஒலிதான் இந்த விலங்கிற்கு இந்தப் பெயர் வரக் காரணம்.

மேலும் இந்த விலங்கு, விலங்குகளின் சடலங்களை வெறித்தனமாக தேடிச் சென்று, கடித்து நொறுக்கிவிடும். தனது தாடைகளின் சக்தியைக் கொண்டு எலும்புகளை தூள்தூளாக நொறுக்கும் வல்லமை கொண்டது.

முதன்முதலில் மார்ச் மாதம் சுமார் 15 விலங்குகள் இந்த பூங்காவுக்குள் விடப்பட்டன. அவை தற்போது சூழலோடு ஒத்துப்போவதைக் கண்ட வன உயிர் பாதுகாப்பு குழுக்கள், தற்போது மேலும் 11 விலங்குகளை பூங்காவுக்கு கொண்டு வந்துள்ளன.

அடுத்த இரு வருடங்களில் மேலும் 40 விலங்குகளை பூங்காவுக்குள் விடத் திட்டமிட்டுள்ளனர்.

இந்த விலங்குகள் கண்காணிக்கப்படும் என்றும், ஆனால் தொடர்ந்து எண்ணிக்கையை பெருக்குவது அந்த விலங்கை பொருத்தது எனவும் விலங்கை பூங்காவில் விடும் பணியை மேற்கொண்ட ஆசி ஆர்க் குழுவின் தலைவர் தெரிவிக்கிறார்.
இந்த பூங்கா சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த விலங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இங்கு விடப்பட்டுள்ளன.

தற்போது டாஸ்மானியாவின் காடுகளில் சுமார் 25,000 வரையான விலங்குகள் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளனர். ஆனால் 1990ஆம் ஆண்டுகளில் சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் விலங்குகள் வரை வாழ்ந்தன. இந்த விலங்குகளைத் தாக்கிய கொடிய வாய் புற்றுநோயால் இவை பெருமளவில் அழிந்து விட்டன.

இருப்பினும் இந்த விலங்கு மனிதகுலத்துக்கோ அல்லது விவசாயத்திற்கோ எந்த ஒரு தீங்கையும் ஏற்படுத்துவதில்லை என வன உயிர் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அழிவின் விளிம்பில் இருக்கும் இந்த விலங்குகள் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு வடக்கில் இருக்கும் பாரிங்டன் டாப்ஸ் தேசிய பூங்காவில் விலங்குகள் நல பாதுகாப்பு குழுக்களால் விடப்பட்டுள்ளன.