மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டு செயற்திட்டம்

2014 செப்டெம்பரில் சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கும் அன்றைய இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் கொழும்பு துறைமுக நகரத்திட்டத்தை கூட்டாக ஆரம்பித்துவைத்தார்கள்.கடலில் இருந்து 269 ஹெக்டேயர் நிலத்தை மீட்டு, இலங்கையின் தலைநகர் கொழும்புக்கான நிதித்துறை, சுற்றுலாத்துறை, விநியோகங்கள் ஒழுங்கமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைகளை ஒருங்கிணைக்கும் புத்தம் புதிய மத்திய வர்த்தக மாவட்டமொன்றை நிர்மாணிப்பதே இந்த திட்டமாகும்.

ஆரம்பித்தவைக்கப்பட்டு 6 வருடங்கள் கடந்த நிலையில், இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீடாக இப்போது விளங்கும் கொழும்பு துறைமுகநகரத்திட்டம் உள்நாட்டு மற்றும் பிராந்திய பொருளாதாரத்தை மீளவடிவமைப்பதற்கான எதிர்கால நகரமாக மேலெழுந்துகொண்டிருக்கிறது.

படகுத்துறையும் பாலமும்

இப்போது இலங்கையின் பிரதமராக இருக்கும் ராஜபக்ச செப்டெம்பர் 17 ஆம் திகதி இத்திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்ட ஆறாவது வருடாந்த நிறைவு கொண்டாட்டங்களில் இணைந்துகொண்டார். கொழும்பு துறைமுக நகரத்திடடத்தை ஒரு திருப்புமுனையான திட்டம் என்று வர்ணித்தார்.

இலங்கையர்களுக்கு 83 ஆயிரம் நேரடி தொழில் வாய்ப்புகளையும் மேலும் பெருமளவான மறைமுக தொழில் வாய்ப்புகளையும் உருவாக்கப்போகின்ற இத்திட்டம் எதிர்காலத்தில் இலங்கையின் பிரதான வருமான பெருக்கும் வளமாக இருக்கப்போகிறது என்றும் அவர் கூறினார்.இதில் முதலீடு செய்தமைக்காக சீனாவுக்கு விசேட நன்றியைத் தெரிவித்த ராஜபக்ச , ” இலங்கை அதன நிலத்தை கடலரிப்புக்கு இழந்துவருகிறது என்று பல தடவைகள் ளே்விப்பட்டிருக்கிறோம்.ஆனால், கொழும்பு துறைமுக நகரத்திட்டத்தினால் எமது வரலாற்றில் முதற்தடவையாக இலங்கையின் நிலப்பரப்பு விரிவடைந்திருப்பதைக் காண்கிறோம். புதிதாக கடலில் இருந்து மீட்கப்பட்ட துறைமுக நகர நிலம் இப்போது இலங்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது” என்றும் சுட்டிக்காட்டினார்.

சீன ஜனாதிபதி சி ஜின்பிங் பேரார்வத்துக்குரிய ‘ மண்டலமும் பாதையும்’ செயற்திட்டத்தின் கட்டமைப்புக்குள் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒரு முன்னோடி கூட்டு செயற்திட்டமான கொழும்பு துறைமுக நகரத்திட்டம் சுற்றுலாத்துறையை பெரிதும் பாதித்த 2019 ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் மற்றும் ஒரு வருடத்துக்கும் குறைவான காலமாக நாட்டை பாதித்திருக்கும் கொவிட் — 19 கொரோனாவைரஸ் தொற்றுநோய் உட்பட பெருவாரியான சவால்களை 6 வருடங்களூடாக எதிர்கொண்டு முன்னேறியிருக்கிறது.அந்த குண்டுத்தாக்குதல்களின்போது துறைமுக நகரத்திட்டத்தக்கு அரகாமையில் அமைந்திருக்கும் மூன்று முக்கியமான ஆடம்பர ஹோட்டல்கள் பாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

நிர்மாணப்பணிகளில் தொழிலாளர்கள்

“கடலில் இருந்து நிலத்தை மீட்கும் தொடக்க கட்டம் திட்டமிடப்பட்ட காலத்துக்கு இரு மாதங்கள் முன்னதாகவே 2019 ஆண்டில் பூர்த்திசெய்யப்பட்டது ” என்று சீன ஹாபர் என்ஜினியரிங் கம்பனி கொழும்பு போர்ட சிற்றி பிரைவேட் லிமிட்டெட்டின் உதவி பொதுமுகாமையாளர் யூயி யெகிங் சின்ஹுவா செய்தி சேவையிடம் கூறினார்.

இந்த கம்பனி துறைமுக நகரத்திடடத்தை நிர்மாணிக்கும் சீன ஹாபர் என்ஜினியரிங் கம்பனியின் ஒர் கிளையாகும்.

அதற்கு பிறகு வீதிகள், பாலங்கள், குழாய்கட்டமைப்புகள் மற்றும் பசுமைப்பூங்காக்கள் நிர்மாணிக்கும் பணிகள் படிப்படியாக முன்னெடுக்கப்படடன என்று சீன ஹாபர் என்ஜினியரிங் கம்பனியின் பொறியியல்துறை முகாமையாளரான லீ சென்குய் தெரிவித்தார்.

மாநகர பொறியியல் நிர்மாணப்பணிகள் சகலதும் 2021 ஆண்டில் நிறைவுசெய்யப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறிய லீ செயற்கை கடற்கரை ஏற்கெனவே பூர்த்தி செய்யப்பட்டுவிட்டது. அது விரைவில் பொதுமக்களுக்காக திறந்துவிடப்படும்.திட்டமிடப்பட்ட பூங்கா ஒன்றுக்காக மண்ணைப் பரிசோதித்துப் பார்ப்பதற்காக மரக்கன்றுகள் நடப்பட்டிருக்கின்றன. துறைமுக நகரத்திட்டத்துக்கான கடற்கரைப் பிரிவில் படகு அணைக்கரை ஏற்கெனவே இயங்கத் தொடங்கிவிட்டது என்றும் குறிப்பிட்டார்.

கொவிட் — 19 தொற்றுநோய்க்கு மத்தியில் நகரத்திட்ட நிர்மாணம் ஒழுங்காக தடைபெறுவதை உறுதிசெய்வதற்காக கண்டிப்பான சுகாதார நடைமுறைகளை யூயியின் கம்பனி அறிமுகப்படுத்தியிருக்கிறது.

“இந்த நிலப்பகுதி கொழும்பு வர்த்தக மாவட்டத்துக்கு நெருக்கமாக இருக்கின்ற காரணத்தால் இலங்கைக்காக எம்மால் புதியதொரு கொழும்பு வர்த்தக மாவட்டத்தை உருவாக்கமுடியும் என்று நம்பிக்கை கொண்டிருக்கின்றோம்.இலங்கையின் எதிர்காலத்துக்கு துறைமுக நகரம் மிகப்பெரிய அளவில் பங்களிப்பு செய்யக்கடியதாக உலகம் பூராவுமிருந்து முதலீட்டாளர்களுடன் சேர்ந்து இந்த திட்டத்தை நிர்மாணித்து அபிவிருத்தி செய்வதற்கு நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம் ” என்று யூயி குறினார்.

பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தல்

அரசாங்க அதிகாரிகள், வர்த்தகத்துறையினர் மற்றும் நிபுணர்களின் பார்வையில் கொழும்பு துமைுக நகரம் இலங்கையின் பெரும்பாக பொருளாதார அடிப்படைகளை மேம்படுத்துவதற்கும் தொழில்வாய்ப்புகளை வழங்குவதற்கான மாபெரும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது.

கொழும்பு துறைமுக நகரத்திட்டம் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கான பாரிய ஆற்றலைக் கொண்டிருக்கிறது என்று நிதி , மூலதனச்சந்தை மற்றும் அரச நிறுவனங்கள் இராஜாங்க அமைச்சரான அஜித் நிவார்ட் கப்ரால் சின்ஹுவாவிடம் தெரிவித்தார்.

“துறைமுக நகரத்தினால் கவர்ந்திழுக்கக்கூடிய முதலீடுகள் எமது பொருளாதார அடிப்படை ஆதாரத்தின் மீது பெரும் தாக்கத்தைக் கொண்டிருக்கும்.இந்த திட்டத்தினால் பெருகவைக்கக்கூடிய பொருளாதார செயற்பாடுகள் எமது வளர்ச்சிக்கும் தொழில்வாய்புகளுக்கும் நேரடியான விளைபயன்களைத் தரும் “எனறும் அவர் கூறினார்.

“இந்த வகையான திட்டம் எம்மிடம் இருக்குமபோது வெளியுலகம் இலங்கையை பெருமளவு அக்கறையுடன் நோக்கும் என்று நம்பிக்கை வெளியிட்ட கப்ரால் பெருமளவு வெளிநாட்டு நிறுவனங்கள் துறைமுக நகரத்தில் அவற்றின் செயற்பாடுகளை ஆரம்பித்து மூலதனச்சந்தை ஊடாக முதலீடுகளை செய்யும்போது கொழும்பு பங்குப் பரிவர்த்தனையும் ஊக்கத்தைப் பெறும் என்றும் குறிப்பிட்டார்.

பசுமைப்பூங்கா பகுதிகள் நிர்மாணம்

துறைமுக நகரத்திட்டம் ஒரு பிராந்திய நிதியியல் மையமாக தன்னை நிறுவுவதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கும் இலங்கைக்கு முக்கியமான ஒன்றாகும் என்று கொழும்பை தளமாகக்கொண்ட ‘ இன்வெஸ்ட்மென்ற் பாங்க் ஃபெஸ்ற் கப்பிடெல் ஹோலடிங் பி.எல்.சி. நிறுவனத்தின் ஆராய்ச்சி தலைவரான திமந்த மத்தியூ கூறினார்.

“முக்கியமான முதலீட்டு வங்கிகளும் நிதிச்சேவைகளும் துறைமுக நகரில் முதலில் நிறுவப்படும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.அவை ஏனைய வர்த்தக நிறுவனங்களைக் கவரும் என்பதுடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்களுக்கும் முதலீடுகளுக்கும் வசதிசெய்யும்.கொழும்பு பங்குப் பரிவர்த்தனைக்கு இதனால் பெரியளவில் பயன் ஏற்படும்.துறைமுக நகரத்தை வெற்றிகரமானதாக்கி தேவையான வெளிநாட்டு முதலீடுகளை எம்மால் கவர முடியுமாக இருந்தால், அது பெரும்பாலும் எமது வெளிநாட்டு நாணய கையிருப்பிலும் சென்மதி நிலுவையிலும் முக்கிய நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் மத்தியூ தெரிவித்தார்.

துறைமுக நகரத்திட்டம் 210,355 தொழில் வாய்ப்புகளையும் நேரடி வெளிநாட்டு முதலீடாக 70 கோடி அமெரிக்க டொலர்களையும் நிகர உள்நாட்டு உற்பத்திக்கு 1180 கோடி டொலர்களையும் அரசாங்கத்துக்கு வருமானமாக வருடாந்தம் 80 கோடி டொலர்களையும் கொண்டுவரும் என்பதால் அது தேசிய பெராருளாதாரம் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தைக் கொண்டிருக்கும் எனறு ‘ பிறைஸ் வாட்டர் கூப்பர்ஸ் (பி.டபிள்யூ.சி.) நிறுவனத்தினால் கடந்த வருடம் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

ஒப்பற்ற பெராருளாதார வலயம்

இலங்கை அரசாங்கம் இப்போது கொழும்பு துறைமுக நகரத்தை நாட்டில் சேவைகளுக்கான முதலாவது விசேட பொருளாதார வலயமாக கட்டியெழுப்புவதற்கு திட்டமிடுகின்றது. சைனீஸ் ஹார்பர் என்ஜினியரிங் கம்பனி போர்ட்சிற்றி கொழும்பு பிரைவேட் லிமிட்டெட்டில் மூலோபாய மற்றும் வர்த்தக அபிவிருத்தி பிரிவின் தலைவராக இருக்கும் துசி அலுவிகார அத்தகைய ஒரு திட்டம் குறித்து பெரும் நம்பிக்கை வெளியிட்டார்.

“பொருளாதார வளர்ச்சிக்கான பெருமளவு வாய்ப்புக்களைக் கொண்ட ஒரு சந்தையாக இலங்கை வெளிக்கிளம்பிவருவதன் காரணமாக உலகில் மிகவும் முன்னேறிய சந்தைகள் மற்றும் பொருளாதாரங்களுடன் போட்டிபோடக்கூடிய நிலையில் துறைமுக நகரம் இருக்கும் என்று நாம் நம்புகிறோம்” என்று அலுவிகார தெரிவித்தார்.

உலகில் பல நிதிச்சேவை மையங்கள் இருக்கின்ற அதேவேளை, தெற்காசியாவினதும் தென்கிழக்காசியாவினதும் முக்கிய நகரங்களில் இருந்து நான்கு மணி நேரத்திற்குள் வந்துவிடக்கூடிய தொலைவு வட்டத்தில் அமைந்திருக்கும் அனுகூலத்தை இலங்கை கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.

தவிரவும், தெற்காசியாவில் மிகவும் திருப்தியான வாழ்க்கை வாழக்கூடிய நகரங்களில் ஒன்றாக கொழும்பு பல வருடங்களாக விளங்கிவருகின்றது.அத்துடன் கட்டுப்படியாகக்கூடிய ஆற்றல் வளத்தையும் அது கொண்டிருக்கிறது. னால்,சிறப்பான தொழில்வாய்ப்புக்களுக்காக வருடாந்தம் வெளிநாடுகளுக்கு சுமார் 10,000 பயிற்சித்திறன் கொண்ட தொழிலாளர்களும் துறைசார் நிபுணத்துவம் கொண்டவர்களும் இலங்கையிலிருந்து சென்றுகொண்டிருக்கிறார்கள்.

அவ்வாறான திறமைசாலிகள் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தக்கூடியதாக உயர்தர தொழில்வாய்ப்புகளை துறைமுக நகரத்திட்டம் உருவாக்கும் என்று குறிப்பிட்ட அலுவிகார, இலங்கையிலும் தெற்காசியாவிலும் திட்டமிட்டு நிர்மாணிக்கப்படுகின்ற முதலாவது நகரமாக விங்கம் கொழும்பு துறைமுக நகரம் குறைந்தபட்ச வளங்கள் பயன்பாட்டுடன் நிலைபேறான அபிவிருத்தியை காண்பதில் கவனத்தைக் குவிக்கும்; முதலீட்டாளர்களும் கட்டிட நிர்மாண நிறுவனங்களும் கடைப்பிடிப்பிடிப்பதற்கு சர்வதேச தராதரங்களை வழங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

நிலைபேறான தன்மையையும் பயன்படுத்தக்கூடிய வாய்ப்புகளையும் பொறுத்தவரை, கொழம்பு துறைமுக நகரம் அதே போன்ற விசேட பொருளாதார வலயங்களுடன் ஒப்பிடத்தக்கதாகும் என்று கொழும்பில் இயங்குகின்ற ஆய்வு மையமான லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனம் அண்மையில் மேற்கொண்ட ஆய்வின் பிறகு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருக்கிறது.

“மின்சாரம் வழங்கல் போன்ற விநியோக வசதிகளைப் பொறுத்தவரை இலங்கை சிறப்பாக செயற்படுகின்ற ஒரு நாடாகும்.பயிற்சித் திறனுடைய பட்டதாரிகளைப் பொறுத்தவரையிலும் கூட உறுதியான ஒரு நிலையில் நாடு இருக்கிறது.துறைமுகநகரத்திட்டத்தின் வெற்றிக்கு இது முக்கிய பங்களிப்பை வழங்கும் என்றும் அந்த ஆய்வில் கறைப்பட்டு்ள்ளது.

இலங்கைக்கும் தெற்காசியாவுக்குமான பிரதான நிதித்துறை மற்றும் பொருளாதார மையமாக கொழும்பு துறைமுக நகரம் விளங்கும் என்று பிரதமர் ராஜபக்ச எதிர்பார்க்கிறார். ” இந்த திடடம் சமகாலத்துக்குரியது என்பதிலும் பார்க்க பிறக்கவிருக்கும் எதிர்காலச் சந்ததிக்கே உரியதாகும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

  • ஷிரான் இலன்பெருமா