ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கொரோனா வைரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகி யெனீவாவில் இடம்பெற்று வருகிறது . ஒக்டோபர் 07ம் திகதிவரை இடம்பெற இருக்கும் இக்கூட்டத்தொடரில் வழமைபோன்று இம்முறையும் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் கலந்து கொண்டுள்ள தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் தமிழர்களுக்கு இடம்பெற்ற இன அழிப்பு மற்றும் தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு ஆகியவற்றிற்கான நீதியினை கோரி குரல் கொடுத்து வருகின்றனர்
அந்தவகையில் மூன்றாவது வாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் சபையின் பிரதான அவையில் இடம்பெற்ற பிரிவு 6 : உலகளாவிய கால மீளாய்வு( Item 6 : Universal Periodic Review – General Debate) தொடர்பான பொது விவாதத்தில் தமிழ் உலகம் என்ற அமைப்பு சார்பாக உரையாற்றிய அருட்தந்தை ஆ. குழந்தைசாமி அவர்கள் தனது உரையில்;
கெய்ட்டியின் பிரநிதி உலகளாவிய கால மீளாய்வில் சிறீலங்கா அரசுக்கு பின்வரும் வேண்டுகோளை வைத்தார்: புதிய அரசியல் அமைப்பு அதிகார பகிர்வின் அடிப்படைக் கொள்கைகளை தெளிவாக, வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளவேண்டும். நடுவர்மன்றம், நீதித்துறை ஆகியவற்றின் சுதந்திரத்தை உருவாக்கி, நிலைநிறுத்தி, உறுதிசெய்து, நடுநிலைமையில் வைத்து பாதுகாக்கவேண்டுமென்று கூறினார். அப்போது புதிய அரசமைப்பை உருவாக்கும்போது உருவாக்க உரிமையுள்ளவர்களுக்கு உரிய இடத்தை வழங்கவேண்டும்.
20வது அரசமைப்பு திருத்தச் சட்டம் ஜனாதிபதிக்கு தனது ஆட்சிகாலத்தில் சட்டரீதியான நடவடிக்கைகளிலிருந்து விடுவிக்கிறது. சனாதிபதி தனக்கு எத்தனை அமைச்சுகளையும் வைத்துகொள்ளலாம். பாராளுமன்ற பேரவை பாராளுமன்ற உறுப்பினர்களால் மட்டும் உருவாக்கப்படுகிறது. இதனால் பிற பாராளுமன்ற கட்சிகளிருந்து உறுப்பினர்களையும் திறமைவாய்ந்த, ஒழுக்கமுள்ள நபர்களையும் சேர்க்காமல், இலங்கையின் பன்மைத்தன்மையை அழிக்கிறது.
ஜனாதிபதி பாராளுமன்றத்தை ஓராண்டுக்குபிறகு எப்பொழுது வேண்டுமானாலும் தலைமை அமைச்சரை கலந்து ஆலோசிக்காமல் கலைக்க அதிகாரம் உண்டு. அதுபோல தலைமை அமைச்சர், அவரால் பரிந்துரைசெய்யப்பட்ட இருவர், எதிர்கட்சி தலைவர், அமைச்சர், இரசாங்க அமைச்சர், இணை அமைச்சர் ஆகியோரை எப்பொழுது வேண்டுமானாலும் சனாதிபதி நீக்கலாம், எவரைவேண்டுமானாலும் நியமிக்கலாம். இதனால் நடாளுமன்ற பேரவை அரசியலமைப்பு பேரவையைவிட பலவீனமாகக்கப்பட்டுள்ளது.
தேசிய உருவாக்க அமைப்பையும், சேவையை தணிக்கை செய்யும் அமைப்பையும் கலைத்துவிட்டார். எத்தனை அமைச்சர்கள், இணைஅமைச்சர்கள். இராசாங்க அமைச்சர்கள் வேண்டுமானாலும் நியமிக்கலாம்.
ஜனாதிபதியின் சர்வாதிகாரம் இலங்கையில் மக்களாட்சியை அகற்றியது. மக்களாட்சி அழிப்பு சர்வாதிகாரத்தை பெற்றெடுக்கும். அது தமிழ் மக்களை அழித்தொழிக்கும். எனவே இந்த பேரவை தமிழ் மக்களின் உரிமையைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என்று கூறி தனது உரையைப் பதிவுசெய்தார்.