ஒன்று பட்டால் உண்டு வாழ்வு?

டந்து முடிந்த தேர்தலில் மாவை சேனாதிராஜா தோல்வியுற்று இருந்திருந்தால் இன்று இந்த கடையடைப்பு வெற்றி பெற்றிருக்குமா?என்று மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்த் தேசிய வாழ்வுரிமை அமைப்பின் தலைவரான சிவகரன் கேட்டார். அவர் ஏன் அப்படி கேட்டார்? ஏனெனில் நடந்த முடிந்த கடையடைப்பில் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டது மாவை சேனாதிராஜாதான்.

மாவை அடுத்த மாகாணசபைத் தேர்தலை இலக்கு வைக்கிறார் என்றும் எனவே தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்கு இது போன்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்துகிறார் என்றும் பொதுவாக ஒரு கணிப்பு உண்டு. அவர் உண்மையாகவே அப்படி தன்னுடைய அடுத்த கட்டப் பதவி குறித்து சிந்திக்கிறாரா? அல்லது தோல்விகளில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில்; தனது மூப்பு முதிர்ச்சி போன்றவற்றின் அடிப்படையில் தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு அதைச் செய்கின்றாரா? என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

இங்கு “உயர்ந்த நோக்கம்” என்ற சொல்லை நான் மிகவும் கவனமாகவே பாவிக்கின்றேன். ஏனெனில் இந்த தோல்விகள் அனைத்துக்கும் பொறுப்பானவர்கள் அவர்கள்தான். கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக அவர்களே காட்சியளித்தார்கள். அதில் அவர்கள் அடைந்த தோல்வி தான் நடந்து முடிந்த தேர்தலில் கிடைத்த மக்கள் ஆணை ஆகும். இந்தத் தோல்விகளில் இருந்து கற்றுக் கொள்வது என்பது மறுபடியும் ஒரு பொய்யான பதவி மோகம் கொண்ட சந்தர்ப்பவாத கூட்டுக்கு போவது அல்ல. மாறாக தங்கள் விட்ட தவறுகளில் இருந்து கற்றுக் கொண்டு அதன் அடிப்படையில் தமிழ் அரசியலில் பொருத்தமான ஒரு இறுதி இலக்குக்குரிய வழிவரை படத்தை உருவாக்குவதும் ; அந்த வழி வரைபடத்தை நோக்கி அர்ப்பணிப்போடு ரிஸ்க் எடுத்து செயல்படுவதும்தான்.

அதாவது இன்னும் கூராகச் சொன்னால் மாகாண சபைத் தேர்தலை நோக்கி தமிழரசுக் கட்சிக்குள்ள்ளும் கட்சிக்கு வெளியிலும் தனது நிலையை மேலும் உறுதிப்படுத்தி பலப்படுத்துவதற்காக மாவை இது போன்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தவில்லை என்பதனை அவர் நிரூபித்துக் காட்ட வேண்டும். அவர் மட்டுமல்ல ஏனைய கட்சிகளின் நிலைமையும் கிட்டத்தட்ட அப்படித்தான். இதில் ஒன்றிணைந்த கட்சிகள் தங்களுக்கு இடையே கொள்கை ரீதியாக ஒன்றிணையவில்லை. தேவை கருதியே ஒன்றிணைந்தன. அது நினைவு கூர்தலுக்கான உரிமையை மீட்டெடுப்பதற்கான ஒரு தேவை தான். ஆனால் அது ஒரு நீண்ட கால இலக்கின் ஒரு பகுதிதான். எப்படி என்றால் நினைவு கூர்தலுக்கான உரிமை எனப்படுவது ஒரு கூட்டுரிமை. எனவே அது கூட்டு உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டம்தான். தமிழ் மக்களுடைய கூட்டு உரிமைகளை பாதுகாக்கும் ஒரு தீர்வுதான் தமிழ் மக்களின் இறுதி இலக்கு. அதற்குரிய வழி வரைபடம் என்ன என்பது தான் இங்கே உள்ள பிரச்சினை. அரங்கில் உள்ள எல்லா கட்சிகளிடமும் அந்த வழி வரைபடம் தொடர்பாக  இலட்சியங்கள் உண்டு. சுலோகங்கள் உண்டு. ஆனால் பொருத்தமான பொறி முறை உண்டா? என்ற கேள்விக்கு அவர்கள் பதில் கூற வேண்டும்.

இவ்வாறு குறைத்தபட்சம் ஒரு தேவை கருதிய தந்திரோபாயக் கூட்டையாவது தேர்தல் காலத்தில் கட்டி எழுப்ப வேண்டும் என்று கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு தரப்புக்களும் முயற்சித்தன. ஆனால் அது கைகூடவில்லை. குறைந்த பட்சம் ஒரு தந்திரோபாய ஐக்கியத்தையாவது கட்டி எழுப்பத் தவறியதன் விளைவே நடந்து முடிந்த தேர்தலில் தென்னிலங்கை மையக் கட்சிகளும் அவற்றின் நண்பர்களும் பெற்ற வெற்றிகள் ஆகும்.

மேற்படி தரப்புக்களைத் தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரு பொது நோக்கிலாவது தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து இருந்திருக்கலாம். ஆனால் அதையும் அவர்கள் செய்யவில்லை. சில வாரங்களுக்கு முன்னும்கூட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பேரால் ஓர் ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப முடியவில்லை. அதுமட்டுமல்ல நாடாளுமன்றத்தில் மாற்று அணியைச் சேர்ந்த விக்னேஸ்வரனுக்கும் இரண்டு கஜன்களுக்கும் இடையில் குறைந்தபட்சம் விவகார அடிப்படையிலாவது ஓர் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முடியவில்லை.

தமிழ் கருத்துருவாக்கிகளும் புத்திஜீவிகளும் செயற்பாட்டாளர்களும் நலன் விரும்பிகளும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு கால கட்டங்களில் முயன்று முடியாமல் போன ஒரு விடயத்தை திலீபனும் ராஜபக்சக்களும் சாத்தியமாக்கி இருக்கிறார்கள். “தமிழ் தேசியத்தின் பலமே எதிரிதான்” என்று பேராசிரியர் சிவத்தம்பியும் மு.திருநாவுக்கரசுவும் அடிக்கடி கூறுவார்கள். இந்த ஐக்கியமும் அதைத்தான் நிரூபித்திருக்கிறது. ராஜபக்சக்கள் தான் இந்த கட்சிகளை ஒருங்கிணைத்திருக்கிறார்கள்.

ராஜபக்சக்களுக்கு எதிராகத் தமிழ் மக்கள் ஒன்றுபடுவார்கள் என்பதைக் கடந்த திங்கட் கிழமை நடந்த கடையடைப்பு ஓரளவுக்கு நிரூபித்திருக்கிறது. கிட்டத்தட்ட கடந்த ஆண்டின் இறுதியில் நடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் அது வெளிக்காட்டப்பட்டது. அந்த தேர்தலில் தமிழ் மக்கள் திரண்டு சென்று வாக்களித்து ராஜபக்சக்களுக்கு எதிராக தமது மக்கள் ஆணையை வழங்கினார்கள். இம்முறையும் அப்படித்தான். சரியாக ஒன்பது மாதங்களின் பின் மறுபடியும் தமிழ் மக்கள் ஒப்பீட்டளவில் மிகக் கூர்மையான ஆணையை ராஜபக்சக்களுக்கு எதிராக வழங்கியிருக்கிறார்கள். தமிழ் மக்கள் மட்டுமல்ல முஸ்லிம் மக்களும் சேர்ந்து தான். வடக்கில் தமிழ் பகுதிகளில் உள்ள முஸ்லிம் வர்த்தகர்கள் இது விடயத்தில் தமிழ்க் கட்சிகளுடன் தமது சகோதரத்துவத்தை நிரூபித்துக் காட்டிய ஒரு கடையடைப்பு இது.

கடையடைப்பை ஒழுங்குபடுத்திய கட்சிகள் யாவும் யாழ்ப்பாண மையத்தில் இருந்தே சிந்திக்கின்றன என்றும் அவை மன்னார், வவுனியா, கிழக்கு போன்ற பகுதிகளில் போதிய அளவுக்கு கடையடைப்பை ஒருங்கிணைத்திருக்கவில்லை என்றும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. குறிப்பாக வவுனியாவில் மன்னாரில் தனியார் போக்குவரத்து சேவைகள் வழமை போல நடைபெறும் என்று அப்பகுதிக்கான தனியார் போக்குவரத்துக் கழகங்கள் அறிவித்திருந்தன. சம்பந்தரின் சொந்தத் தொகுதியான திருகோணமலையில் கடையடைப்பு வெற்றி பெறவில்லை.

அதே போன்று முழுத் தமிழ்ப் பகுதிகளிலும் பாடசாலைகளை மூடுவதா? இல்லையா? என்பதில் கல்விசார் அதிகாரிகள் மத்தியிலும் தடுமாற்றம் இருந்தது. வடக்கில் க.பொ.தா.சாதாரண தர மாணவர்களுக்கும் உயர்தர மாணவர்களுக்கும் மாகாண மட்ட பரிட்சை அன்று நடக்கவிருந்தது. அது தொடர்பாக முடிவெடுக்கக் கூடிய துணிவு எந்த ஒரு கல்வி அதிகாரயிடமும் இருக்கவில்லை.

அதேசமயம் இலங்கை ஆசிரியர் சங்கம் கடையடைப்பை ஆதரித்து அறிக்கை விட்டது. ஆனால் தமிழர் ஆசிரியர் சங்கம் வாயைத் திறக்கவில்லை. இத்தனைக்கும் அந்தச் சங்கத்தின் செயலாளர் 2015 இல் கூட்டமைப்பின் வேட்பாளராகத் தேர்தல் கேட்டவர். இவ்வாறானதொரு பின்னணியில் கடையடைப்பை ஆதரித்து பரீட்சையை ஒத்திவைப்பதன் மூலம் தங்கள் பதவிகளை இழக்க அல்லது இடம் மாற்றப்பட கல்விச் சமூகத்தை சேர்ந்தவர்கள் தயாராக இருக்கவில்லை. ராஜபக்சகளின் மீதான பயம் அப்படி.

அரச அதிகாரிகளுக்கு மட்டுமில்லை மக்களுக்கும் அந்த பயம் உண்டு. அந்தப் பயம்தான் வெறுப்பாக மாறி  கடையடைப்பில்  வெளிக் காட்டப்பட்டிருக்கிறது. ஒருங்கிணைத்த கட்சிகள் கடையடைபைப் போதிய அளவும் பரவலாக ஒழுங்கு படுத்தியிருக்கவில்லை. எனினும் தமிழ் மக்கள் இயல்பாக அதைக் கடைபிடித்தார்கள். நடந்து முடிந்த தேர்தலில் சிதறிப் போய் வாக்களித்த மக்கள் ராஜபக்சக்களுக்கு எதிராக இப்படி ஒப்பீடளவில் திரண்டு எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்கள். இது ராஜபக்சக்களுக்கு எதிராக தமிழ் மக்கள் ஒன்பது மாதங்களுக்குப் பின் மறுபடியும் காட்டிய ஓர் எதிர்ப்பு.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதில் இருந்து இன்று வரையிலும் முன்னெடுக்கும் எல்லா நடவடிக்கைகளும் ஓரினச் சாய்வுடையவைகளாக; ஏனைய சிறிய தேசிய இனங்களைப் புறக்கணிப்பவைகளாக; அவமதிப்பவைகளாகக் காணப்படும் ஒரு பின்னணியில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்து கூர்மையான விதத்தில் தமது எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்கள்.

இதில் பின்வரும் பாடங்களைத் தமிழ் அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டும்.

முதலாவது- ஒரு பொது ஒடுக்குமுறைக்கு எதிராக தமிழ் மக்கள் எப்பொழுதும் இனமாகத் திரள்வார்கள். தேர்தல்களில் கட்சிகளாலும் தனி நபர்களாலும் சிதறடிக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டமானது இனம் என்று வரும் பொழுது ஒன்றாகத் திரளும் என்பதனை மறுபடியும் நிரூபித்த ஒரு கடை அடைப்பு இது.

இரண்டாவது- கடந்த பத்தாண்டு கால அனுபவங்களின் அடிப்படையில் முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களோடு இணைந்து செயற்படக் கூடிய அரசியல் வெளிகளைப் பலப்படுத்த வேண்டும்.

மூன்றாவது- தமிழ்க் கட்சிகள் ஓரணியில் நின்று ஒரு பெரும் ஐக்கியத்தைக் கட்டியெழுப்பி விட்டு வந்து கேட்டால் தமிழ் மக்கள் ஓரினமாகத் திரண்டு அவர்கள் பின் வருவார்கள். அதாவது ஒற்றுமையாக முன்வைக்கப்பட்ட ஒரு கோரிக்கைக்கு தமிழ் மக்கள் ஒன்று திரண்டு வழங்கிய மக்கள் ஆணை இது.

எனவே இனரீதியாக ஒன்று திரளக் கூடிய மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதற்கு கட்சிகளுக்கிடையே ஒரு பெரிய ஐக்கிய முன்னணி கட்டியெழு ப்பப்பட வேண்டும். அவ்வாறு ஒரு பெரிய ஐக்கிய முன்னணியை குறைந்தபட்சம் தந்திரோபாயமாக ஆவது கட்டியெழுப்புவதற்குப் பொருத்தமான தலைமைகள் இல்லை என்பதுதான் இப்போதுள்ள பிரச்சினை. ஒப்பீட்டளவில் ஒரு பெரிய ஐக்கியத்தைக் கட்டியெழுப்பினால் தமிழ் மக்களை ஓரினமாகத் திரட்ட முடியும் என்ற நம்பிக்கையை மீளப் பலப்படுத்திய ஒரு கடையடைப்பு இது.

  • நிலாந்தன்