“ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கான சிறப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இன அழிப்பிலிருந்து ஈழத் தமிழர்களின் தாயகத்தை பாதூக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இன அழிப்பை பற்றி பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும். சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ள பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும்” என ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் வலியுறுத்தப்பட்டது.
ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கொரோனா வைரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகி யெனீவாவில் இடம்பெற்று வருகிறது. ஒக்டோபர் 07ம் திகதிவரை இடம்பெற இருக்கும் இக்கூட்டத் தொடரில் வழமை போன்று இம்முறையும் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் கலந்து கொண்டுள்ள தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் தமிழர்களுக்கு இடம்பெற்ற இன அழிப்பு மற்றும் தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு ஆகியவற்றிற்கான நீதியினை கோரி குரல் கொடுத்து வருகின்றனர்.
அந்தவகையில் மூன்றாவது வாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் சபையின் பிரதான அவையில் இடம்பெற்ற பிரிவு 5 – மனித உரிமைகளின் கூறுகள் மற்றும் பொறிமுறைகள் (Item 5 : Human rights bodies and mechanism – General Debate) தொடர்பான பொது விவாதத்தில் தென்றல் அமைப்பின் சார்பாக உரையாற்றிய இரமேசு கோவிந்தசாமி தனது உரையில் தெரிவித்தவை வருமாறு;
“இலங்கை தீர்மானத்திற்கான முக்கிய குழு நாடுகளையும் உடன்படிக்கை அமைப்புகளையும் ஈழத்தமிழ் இன அழிப்பு என்று ஏற்றுக்கொள்ளவும், உலக நடுவர் மன்றத்தில் ஈழத் தமிழர்கள் வாதிட ஆதரவு தரவும், இலங்கையில் பாதிக்கப்பட்டவர்கள் ஈழத் தமிழர்கள் என்று ஏற்கவும், இனப்படுகொலை குற்றச் செயல்பாடுகள் மீதும் மனித உரிமை மீறல்கள்மீதும் சிறப்பு அமர்வுகள் நடத்தவும் சிறப்புக் கவனம் எடுக்கவும் அழைக்கின்றோம்.
இங்கிலாந்தும் அதன் உறுப்பு நாடுகளும் தங்களது அறிக்கையில் பாதிக்கப்பட்டவர்கள் எவர் என்பதை முழுமையாக மறைத்து ஈழமண்ணில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய நீதியை முழுமையாக மறுக்கின்றன. ஐக்கிய நாடுகளது சார்லசு பியேட்றி அறிக்கை இலங்கையில் இன அழிப்பில் போர் இடம்பெற்ற இறுதி காலப்பகுதியில் 70, 000 ஈழத்தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கு பகுதியில் கொலைசெய்யப்பட்டனர் என்று கூறுகிறது.
தங்களது உறவுகளை இழந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பு வழியாக இன்னும் தங்களது உறவுகளைத் தேடிக்கொண்டிருக்கும் குடும்பங்கள் மிகவும் துன்பப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29 ஆம் நாள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை நடத்த கூடாதென நடுவர் மன்ற கடித்தை கொடுத்து, திருமிகு அமலநாயகியிடம் விசாரணை நடத்தினர். அவரை கடுமையாக மிரட்டி துன்புறுத்தினர்.
2020 ஆம் ஆண்டு ஆகத்து 30 ஆம் நாள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தன்று 8 மாவட்டங்களிலிருந்து வந்த பெண்களை இராணுவமும் காவல் துறையும் தாக்கின. மட்டக்களப்பில் 200க்கு மேற்பட்ட பெண்கள் காயமடைந்தனர். உண்ணாவிரத போராட்டத்தால் தனது இன்னுயிரை ஈகம் செய்த ஈகி திலீபன் நினைவை நினைவுகூற கூடாதென நடுவர்மன்ற ஆணையை அரசியல்வாதிகளுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் 50க்கு மேற்பட்ட மனித உரிமை போராளிகளுக்கும் சிறீலங்கா காவல் துறை நீதிமன்ற ஆணையினை கொடுத்தது.
எனவே இலங்கைக்கான சிறப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இன அழிப்பிலிருந்து ஈழத்தமிழர்களின் தாயகத்தை பாதூக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இன அழிப்பை பற்றி பன்னாட்டு விசாரணை நடத்தவேண்டும். சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ள பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும்” என்று தனது உரையில் அவர் கேட்டுக்கொண்டார்.