சங்கர்: சிறுவர்களின் ஓவிய அரசர்

ஒரு தலைமுறையின் இளவயதுக் கொண்டாட்ட இதழான ‘அம்புலிமாமா’வின் பாத்திரங்களுக்குத் தன் தூரிகையால் உயிர் கொடுத்தவரான ஓவியர் சங்கர் விடைபெற்றுக்கொண்டார். காலத்தில் அவரும் ஒரு கதையாகிவிட்டார். இன்னும் மூன்றாண்டுகளில் நூற்றாண்டைத் தொடவிருந்த சங்கர் தொண்ணூறுகளிலும் தூரிகையுடன் இயங்கிவந்தவர்.

ஓவியப் பள்ளியின் உருவாக்கம்

1924 ஜூலை 19-ல் ஈரோடு அருகில் உள்ள கிராமம் ஒன்றில் பிறந்தவர் சங்கர். இயற்பெயர் கே.சி.சிவசங்கரன். தனது 10-வது வயதில் தாய், தம்பியுடன் சென்னைக்கு வந்தவர். பிராட்வே கார்ப்பரேஷன் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார். பள்ளிக் காலத்திலேயே தனது ஓவியத் திறமையால் சக மாணவர்களை மட்டுமல்லாது, ஆசிரியர்களையும் ஆச்சரியப்பட வைத்தார். பின்னர், முத்தையால்பேட்டை பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார். அங்குதான் ஓவிய உலகின் நிரந்தரப் பிரஜையாக அவர் உருவாவதற்கான தொடக்கப்புள்ளி வைக்கப்பட்டது. அப்பள்ளியின் ஓவிய ஆசிரியர் தந்த ஊக்கம்தான் பின்னாளில் ஓவியப் பள்ளியில் சேர்வதற்கான உந்துதலைத் தந்தது.

புகழ்பெற்ற சிற்பக் கலைஞர் ராய் சவுத்ரி முதல்வராக இருந்த சென்னை ஓவியப் பள்ளியில் (தற்போது அரசு கவின்கலைக் கல்லூரி) சேர்ந்த பின்னர், சங்கரின் ஓவியத் திறமை பட்டை தீட்டப்பட்டது. பின்னர் தொழில்முறை ஓவியரான சங்கர், ‘கலைமகள்’ பத்திரிகையில் தனது முதல் பணியைத் தொடங்கினார். ‘கண்ணன்’, ‘மஞ்சரி’ போன்ற இதழ்களிலும் அவரது ஓவியங்கள் இடம்பெற்றன.

புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர்களான பி.நாகிரெட்டியும், அலூரி சக்கரபாணியும் தொடங்கிய ‘சந்தமாமா’ இதழில் 1951-ல் சேர்ந்தார் சங்கர். நாகிரெட்டியின் விஜயா வாஹினி ஸ்டுடியோவின் வளாகத்திலேயே தொடங்கிய அந்த இதழ்தான் தமிழில் ‘அம்புலிமாமா’ எனத் தடம் பதித்தது. இந்தி, கன்னடம், ஆங்கிலம் என 14 மொழிகளில் வெளியான அந்த இதழில் சங்கர் வரைந்த ஓவியங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளம் மனங்களை வசீகரித்துக் கொள்ளை கொண்டன.

முன்னதாக, விக்கிரமாதித்தன் – வேதாளம் முகப்பு ஓவியத்தை மூத்த ஓவியர் சித்ரா வரைந்துவந்த நிலையில், அந்தப் பணி சங்கரிடம் ஒப்படைக்கப்பட்ட பின், சங்கர் வரைந்த விக்கிரமாதித்தன் – வேதாளம் ஓவியங்கள் பிற்காலத்தில் அவருடைய அடையாளங்களில் ஒன்றாகவே ஆகிப்போயின.

அர்ப்பணிப்பாளர்

ஒருபோதும் தனது பணியில் சமரசம் செய்துகொள்ளாதவர் சங்கர். கதாபாத்திரத்தின் முகத்தை மட்டும் சிரத்தை எடுத்து வரைவது; ஆடைகள், உடல்மொழி, பாவனைகள், பின்னணியில் இருக்கும் இடங்கள் போன்றவற்றை மேலோட்டமாக வரைவது என்பதையெல்லாம் அவரிடம் பார்க்கவே முடியாது. கதாபாத்திரம் தனியாக நின்றாலும் சரி, கூட்டத்துக்கு நடுவே நின்றாலும் சரி, முழு உருவத்தையும் வரைந்தாக வேண்டும்; ஒவ்வொரு உருவத்துக்குள்ளும் உயிரோட்டம் இருக்க வேண்டும்; முக்கியமாக உணர்வைத் ததும்பச் செய்யும் பின்னணி வேண்டும் என்றெல்லாம் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டவர் சங்கர்.

குதிரை, புலி, சிங்கம் உள்ளிட்ட விலங்குகள், கட்டிடங்கள் என ஒரு சில விஷயங்களுக்குத்தான் முன்மாதிரிகளை (reference) அவர் பயன்படுத்திக்கொண்டார். மற்றவை அனைத்தும் அவரது கற்பனையில் உதித்தவைதான். கதாபாத்திரங்களை, பொருட்களை, கட்டிடங்களை எல்லாக் கோணங்களிலும் வரையும் ஆற்றல் அவரது படைப்பாற்றலின் ஊற்றாக இருந்தது.

ஒருபோதும் அவர் கணினியைப் பயன்படுத்தியதில்லை. இறுதிவரை தூரிகையின் துணையுடன்தான் படைப்புலகில் இயங்கிவந்தார். தொழில்நுட்ப வசதிக்காக அவரது ஓவியங்களைக் கணினி உதவியுடன் இளைய ஓவியர்கள் மேம்படுத்த வேண்டிய சூழலும் இருக்கத்தான் செய்தது என்றாலும், கணினிக்கு அவர் தன்னை ஒப்பளித்துவிடவில்லை.

எளிமையானவர்

‘சந்தமாமா’ அலுவலகம் விஜயா வாஹினி ஸ்டூடியோவில் இருந்தது என்பதால், திரையுலகினருடனும் சங்கருக்கு நல்ல நட்பு இருந்தது. சிவாஜி, சாவித்திரி, ஜெமினி கணேசன் போன்றோருடன் எல்லாம் நட்பு கொண்டிருந்த சங்கர் இப்படியானவர்களைப் புகைப்படம் எடுத்து, அவர்களுக்கே பரிசளிக்கும் ஒரு வழக்கத்தைக் கொண்டிருந்தார். கிருஷ்ணர் உள்ளிட்ட புராண வேடங்களுக்காகவே புகழ்பெற்ற என்டிஆர், திரைப்படங்களில் கடவுளர் வேடங்கள் போடும்போது, சங்கரின் ஓவியங்களை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டார். கிரீடம், ஆபரணங்கள், ஆடை மடிப்புகள் என அனைத்தையும் தத்ரூபமாக வரைந்த சங்கரின் ஓவியங்கள் அவ்வாறு பயன்படுத்தப்பட்டிருப்பதில் வியப்பேதும் இல்லை.

வேலை பார்க்கும் நிறுவனம் என்பதாக மட்டும் அவர் ‘சந்தமாமா’வைக் கருதியதில்லை. தன் ஓவியக் கலையின் வெளிப்பாட்டுக்கான களமாகவே அந்நிறுவனத்தை மனதார நேசித்தார். ‘சந்தமாமா’வில் வேலை பார்த்த காலத்திலேயே, ‘ராமகிருஷ்ண விஜயம்’ இதழில் ஓவியம் வரைவதற்கான அழைப்பு வந்தது. அப்போது, “நாகிரெட்டி ஒப்புக்கொண்டால்தான் ஒரே சமயத்தில் இரு இதழ்களுக்கும் வரைவேன்” என்று உறுதியாக நின்றவர் அவர். நாகிரெட்டி சம்மதம் தெரிவித்த பின்னரே, ‘ராமகிருஷ்ண விஜயம்’ இதழுக்கு வரையத் தொடங்கினார். ‘கல்கண்டு’, ‘குமுதம்’ போன்ற இதழ்களிலும் வரைந்திருக்கிறார். அசாத்திய படைப்பாற்றல், வேகம், காலக்கெடுவுக்குள் வரைந்து தரும் அர்ப்பணிப்பு போன்றவற்றால் பத்திரிகையாசிரியர்களின் பேரன்புக்கும் பாத்திரமானார். தன்னுடன் பணிபுரிந்த சக ஓவியர்களுடன் வயது, பணி மூப்பு வித்தியாசம் எல்லாம் பார்க்காமல் பாசத்துடன் பழகினார்.

ஓய்வறியாத தூரிகை

இறுதிக் காலத்தில் சென்னையில் தனது மகள் ராதாவின் வீட்டில் வசித்துவந்தார். இந்த வயோதிகக் காலத்திலும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட ‘ராமகிருஷ்ண விஜயம்’ இதழில் அவரது ஓவியங்கள் பிரசுரமாகிவந்தன. “தூரிகை பிடித்து வரைவதால் அவரது விரல்கள் வீங்கத் தொடங்கின. எனவே, ஓவியம் வரைவதைத் தவிர்க்க வேண்டும் என்று நாங்கள் வற்புறுத்தினோம். வேறு வழியில்லாமல் ஓய்வெடுக்கத் தொடங்கினார். எனினும், ஓவியம் வரையவிடாமல் தடுத்துவிட்டதாக என் மேல் அவருக்கு வருத்தம் இருந்தது” என்று அழுகையினூடே சொல்கிறார் அவரது மகள் ராதா.

ஓவியக்கூடம் என்றெல்லாம் பிரத்யேக ஏற்பாடுகள் அவரிடம் இருக்கவில்லை. டைனிங் ஹாலில் உணவு மேஜை மீது கேன்வாஸ், தூரிகைகள், வண்ணங்களை வைத்தே நம்மை அசரடிக்கும் ஓவியங்களை வரைந்தார் சங்கர். காலம், சூழல், சாதனங்கள் என எல்லா வரையறைகளையும் கடந்து தனக்கான ஓவிய உலகை சிருஷ்டிக்கும் ஆற்றலை அவர் கைக்கொண்டிருந்தவர். இறுதியாகக் கண்ணை மூடிய பின்னரும் செறிவான கோடுகளும், உறுத்தாத வண்ணங்களும் கலந்த ஓவிய உலகம் அவரது கண்களுக்குள் மிதந்துகொண்டிருந்திருக்கும்!

வெ.சந்திரமோகன்,
தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in