வெளிவிவகாரத்தைக் கையாள்வதற்கான குழு ஒன்றை தமிழ்க் கட்சிகள் இணைந்து அமைக்க வேண்டும்

“தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் சார்பில் வெளிவிவகாரத்தைக் கையாள்வதற்கான குழு ஒன்றை அமைக்க வேண்டும். குறிப்பாக இந்தியாவையும், ஐ.நா. வையும் கையாளக் கூடிய குழு அவசியம். பிரத்தியேகமாக இந்தியாவைக் கையாள்வதற்கான தனியான குழு ஒன்றை அமைப்பது கூட பயனுள்ளதாக இருக்கும்” என ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்திருக்கின்றார்.

அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் குறித்து தற்போது இடம்பெறும் சர்ச்சை மற்றும், தமிழ்க் கட்சிகளிடையேயான இணக்கப்பாடு – எதிர்கால வேலைத் திட்டம் என்பன தொடர்பில் ‘தினக்குரல்‘ இணையத் தளத்துக்குக் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு;

“இலங்கை அரசாங்கம் என்னத்தைச் சொன்னாலும், இலங்கை தொடர்பில் இந்தியா நம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரியவில்லை. 13 ஆவது திருத்தம் தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை அரசு மீறியிருக்கின்றது. 13 ‘பிளஸ்’ என மஹிந்த ராஜபக்‌ஷ இந்தியாவுக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். இதனால்தான் இலங்கை என்னத்தைச் சொன்னாலும், அதன் மீது இந்தியா நம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரியவில்லை.

இப்போது 20 ஆவது திருத்தச் சட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இந்தத் திருத்தத்தின் மூலமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைப் பலப்படுத்தும் செயற்பாடுகள்தான் முன்னெடுக்கப்படுகின்றன. இது தொடர்பில் இந்தியா அவதானமாகவே இருக்கும். ஏனெனில் இது சீனாவுக்கு சாதகமான ஒரு செயற்பாடாக இந்தியா கருதுவதற்கு இடமுள்ளது.

இந்தப் பின்புலத்தில், 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் என மோடி சொல்லியிருப்பது, இலங்கை மீதான தமது பிடியை தொடர்ந்தும் வைத்திருப்பதற்கான இந்தியாவின் ஒரு உபாயமாக இருக்கலாம். அதாவது, இலங்கை – இந்திய உடன்படிக்கையின் கீழ் உருவாக்கப்பட்ட 13 ஐ நடைமுறைப்படுத்துங்கள் எனக் கூறிக்கொண்டிருப்பதன் மூலம், இலங்கையை ஏதோ ஒரு வகையில் தமது கிடுங்குப் பிடிக்குள் வைத்திருக்க முடியும் என இந்தியா கருதிச் செயற்படலாம்.

அதேவேளையில், 13 ஐ முழுமையான ஒரு தீர்வாக எந்தவொரு தமிழ்க் கட்சியும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனை ஒரு ஆரம்பமாக ஏற்றுக்கொண்டாலும், 13 ற்கும் மேலாகச் சென்று தீர்வைத் தர வேண்டும் என்பதுதான் தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாடு. அதனைத்தான் அவை வலியுறுத்தி வந்திருக்கின்றன.

ஆனால், இப்போது 13 ஐ இல்லாமலாக்க வேண்டும் என முன்வைக்கப்படும் கருத்துக்கள் ஒரு புதிய சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. 13 ஐ பாதுகாக்க வேண்டும் என்ற குரல்கள் தமிழர் தரப்பிலிருந்து முன்வைக்கப்படுகின்றது. அதாவது, சமஷ்டி போன்றவற்றை மறந்து 13 என்பதற்குள்ளேயே எல்லோரும் வந்திருக்கின்றார்கள். உண்மையில், இது சாண் ஏற முழம் சறுக்கும் நிலைதான். இவ்வாறான ஒரு நிலையை அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்த நிலையில், தமிழ்க் கட்சிகளின் வகிபாகம் முக்கியமானது. அவை அனைத்தும் ஒன்றிணைந்து வெளிவிவகாரத்தைக் கையாள்வதற்கான குழு ஒன்றை அமைக்க வேண்டும். குறிப்பாக இந்தியாவையும், ஐ.நா. வையும் கையாளக் கூடிய குழு அவசியம். பிரத்தியேகமாக இந்தியாவைக் கையாள்வதற்கான தனியான குழு ஒன்றை அமைப்பது கூட பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இந்த நாடுகளைக் கையாள்வது தமிழர்களைப் பொறுத்தவரையில் முக்கியமானது.

அவ்வாறு அனைத்துத் தமிழ்க் கட்சிகளையும் உள்ளடக்கிய குழுவை அமைக்கும் போது இந்தியாவும் அதற்கு மதிப்பளிக்கும். ஏனைய நாடுகளும் – ஐ.நா. மனித உரிமைகள் பேரவை போன்றனவும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். இவ்வாறான குழுவுடன் மறுதலிக்க முடியாமல் பேசவேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவுக்கும் ஏனைய சர்வதேச தரப்பினருக்கும் ஏற்படும்.

அவ்வாறான குழு முன்வைக்கும் விடயங்களை ஆராய வேண்டிய நிர்ப்பந்தம் அந்த நாடுகளுக்கு ஏற்படும். தனிநபர்கள் இந்த விடயங்களைக் கையாளாமல், அதற்கென அனைத்துத் தமிழ்க் கட்சிகளாலும் உருவாக்கப்படும் குழு இந்த விடயங்களைக் கையாள்வது மிகவும் பயனுள்ளதாகவும் – பெறுமதியானதாகவும் இருக்கும்.

தமிழ் மக்களுடைய விடயங்கள் எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பதையிட்டு கூட்டாக சில விடயங்களை இதன் மூலம் நாம் முன்வைக்க முடியும். அவ்வான குழு ஒன்றினால் முன்வைக்கக்கூடிய கருத்துக்கள் நிச்சயமாக இராஜதந்திர வட்டாரங்களால் கவனத்திற்கொள்ளப்படும். அதாவது, அதற்கு ஒரு “வெயிட்” இருக்கும். அதனால், அதனையிட்டு உடனடியாக ஆராயவேண்டிய தேவை ஒன்றுள்ளது” என்றும் குறிப்பிடுகின்றார் சுரேஷ் பிறேமச்சந்தினர்.