“இலங்கை அரசாங்கம் அரசு நல்லிணக்கம், பதிலிறுப்பு, மனிதஉரிமைகள் ஆகியவற்றிற்கு எதிராக செயல்பாடுகளை எடுக்கப்படுகின்றது. இந்த மனித உரிமை பேரவை இலங்கையில் பன்னாட்டு பொறுப்புக்கூறல் (பதிலிறுப்பு) அமைப்பை நிறுவவேண்டும்” என ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கொரோனா வைரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகி யெனீவாவில் இடம்பெற்று வருகிறது . இதில் இரண்டாவது வாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் சபையின் பிரதான அவையில் இடம்பெற்ற பிரிவு 3 – அனைத்து மனித உரிமைகள் உட்பட சிவில், அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் அபிவிருத்திக்கான உரிமை தொடர்பான பொது விவாதத்தில் வளர்ச்சிக்கும்,குழு ஆற்றல்படுத்துவதற்கான சமுகம் (Society for Development and Community Empowerment) அமைப்பு சார்பாக உரையாற்றி கெவின் கணபதிபிள்ளை தனது உரையில் இதனை வலியுறுத்தினார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது;
ஈழத்தமிழர்கள் தங்களது அரசியல் பண்பாட்டு உரிமைகளை நிலைநிறுத்த அரசு தடைவிதிப்பது மனித உரிமை மீறல் என்று இந்த அவையின் கவனத்திற்கு கொண்டுவருகின்றேன். இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மக்களாட்சி நடைமுறைகள் இடம்பெறவில்லை. இலங்கை பொதுத்தேர்தலில் போட்டியிட்ட கிழக்கு வடக்கு மாகாண வேட்பாளர்களை, குறிப்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இயங்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி வேட்பாளர்களையும், சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் இயங்கும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வேட்பாளர்களையும் இராணுவமும் காவல்துறையும் கொடுமைபடுத்தின.
தேர்தல் பரப்புரையின்போது கண்காணிப்பு குழுவையும், இருசக்கர வாகன குழுவையும் இராணுவம் பயன்படுத்தியது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர் தேர்தல் போட்டியிலிருந்து விலகிக்கொள்ள கட்டாயப்படுத்தல், வேட்பாளர்களை மிரட்டுதல் போன்ற செயல்களை இராணுவத்தின் புலனாய்வு பிரிவு தொடர்ந்து செய்ததென குற்றம் வழக்கு பதிவுசெய்தது. குருநகருக்கு பரப்புரைக்காக சென்ற விக்கினேஸ்வரனை இருசக்கர வாகன குழு இடையூறு செய்தது.
அரசு நல்லிணக்கம், பதிலிறுப்பு, மனிதஉரிமைகள் ஆகியவற்றிற்கு எதிராக செயல்பாடுகளை எடுக்கப்படுகின்றது. இந்த மனித உரிமை பேரவை இலங்கையில் பன்னாட்டு பொறுப்புக்கூறல்(பதிலிறுப்பு) அமைப்பை நிறுவவேண்டும்” என தனது உரையில் அவர் வலியுறுத்தினார்.