கையில் ஸ்மார்ட்போன் இருந்தால் செய்திகளைத் தெரிந்துகொள்ளக் கஷ்டப்பட வேண்டாம். செய்தித் திரட்டிகள் முதல் செய்திகளைச் சுருக்கமாக வழங்கும் செயலிகள் வரை பல விதமான செய்திச் செயலிகள் இருக்கின்றன. இந்த வரிசையில் மைக்ரோசாஃப்ட்டின் ‘நியூஸ் புரோ’ செயலியும் இணைந்துள்ளது.
சோதனை முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டுவரும் ‘மைக்ரோசாஃப்ட் கேரெஜ்’ திட்டத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்தச் செய்திச் செயலி வழக்கமான செய்திச் செயலிகளிலிருந்து மாறுபட்டது. எப்படி எனில், இந்தச் செயலி பயனாளிகளிக்கு அவர்கள் பணியாற்றும் துறை தொடர்பான செய்திகளை முன்னிறுத்துகிறது.
ஆக, ஒரு பயனாளி ஐ.டி. துறையில் பணியாற்றுபவர் என்றால் அதே துறை தொடர்பான செய்திகளை இந்தச் செயலி மூலம் வாசிக்கலாம்.
ஃபேஸ்புக், லிங்க்ட்இன் அல்லது ட்விட்டர் பயனர் கணக்கு மூலம் இந்தச் செயலியில் உறுப்பினராக நுழையலாம். அதன் பிறகு, உறுப்பினரின் ஆர்வம் மற்றும் அவர் பணியாற்றும் துறை சார்ந்த செய்திகள் பரிந்துரைக்கப்படும். குறிப்பிட்ட தலைப்பு சார்ந்த தகவல்களையும் எளிதாகத் தேடலாம். அது தொடர்பாக விவாதிக்கலாம். செய்திகளை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். உறுப்பினர்களுக்கான செய்தி உதவியாளர் போலவே இந்தச் செயலி அமையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு: https://newspro.microsoft.com