மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என்று நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நகைச்சுவை நடிகர் விவேக், மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “கடந்த 50 ஆண்டுகளாக இந்திய திரை மொழிகள் பலவற்றில் 42 ஆயிரம் பாடல்களுக்கும் மேலாக பாடி, ‘கின்னஸ்’ சாதனை செய்திருக்கிறார், மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இதுதவிர, பல ஆயிரம் பக்தி பாடல்களை பாடி ஆன்மிகத்துக்கும் சேவை செய்து இருக்கிறார்.
72 படங்களில் நடித்து இருக்கிறார். 46 படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். சிறந்த இந்திய குடிமகனாக திகழ்ந்து இருக்கிறார். இத்தனை சிறந்த இசை கலைஞருக்கு இந்திய சினிமாவின் மிக உயர்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என்று தமிழ் திரையுலகம் சார்பாகவும், கோடிக்கணக்கான ரசிகர்கள் சார்பாகவும் வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு விவேக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.