சவுதி அரேபியா வழியில் ஆஸ்திரேலியா: அகதிகள் விவகாரத்தில் எழுந்துள்ள விமர்சனம்

ஆஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பு முகாம்களில் சோதனை நடத்தவும் அலைப்பேசிகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்வதற்கான கூடுதல் அதிகாரத்தை ஆஸ்திரேலிய எல்லைப்படைக்கு வழங்கும் விதமாகவும் புதிய மசோதாவை ஆஸ்திரேலிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பு முகாம்களில் அலைப்பேசிகளை தடைச் செய்ய அனுமதிக்கும் இந்த மசோதாவுக்கு ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ள சவுதி அரேபியா பத்திரிக்கையாளர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் தற்காலிக பாதுகாப்பு விசா பெற்று வசிக்கும் சுல்தான் எனும் சவுதி அரேபியர், ஆஸ்திரேலியாவில் இந்த முயற்சி சவுதி அரேபியா போன்றே உள்ளதாகக் கவலைத் தெரிவித்துள்ளார். சவுதியில் ஓரினிச்சேர்க்கை குற்றமாகக் கருதப்படும் நிலையில், ஓரினச்சேர்க்கை உறவினைக் கொண்டுள்ள இவர் சவுதியிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருக்கிறார்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள குடிவரவு தடுப்பு முகாமில் 75 நாட்கள் கழித்த நாளில்,இவருக்கும் இவரது இணையருக்கும் ஆஸ்திரேலிய சமூகத்தில் வாழ்வதற்கான தற்காலிக விசா வழங்கப்பட்டிருக்கின்றது.

ஒருவேளை, குடிவரவுத் தடுப்பில் தங்களுக்கு அலைப்பேசிகள் வைத்திருக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தால் தஞ்சம் கோரும் முயற்சியை தொடர்ந்திருக்க முடியாது என சுல்தான கூறியுள்ளார்.

“அலைப்பேசியே எங்கள் உயிர்நாடியாக இருந்தது,” என அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். தனது அலைப்பேசி உதவி உடனேயே தனது பத்திரிகையாளர் நண்பரின் உதவியுடன் மனித உரிமை வழக்கறிஞரை தொடர்பு கொள்ள முடிந்ததாக சுல்தான் குறிப்பிடுகிறார்.

புலம்பெயர்வு திருத்த மசோதா 2020 (Migration Amendment (Prohibiting Items in Immigration Detention Facilities) Bill) எனும் இம்மசோதா ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் கீழவையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி நிறைவேறியுள்ள நிலையில், வரும் அக்டோபர் மாதம் மேலவையில் இது தொடர்பான வாக்கெடுப்பு நடக்க உள்ளது.

இம்மசோதா போதைப்பொருட்கள், ஆயுதங்களை தடைச்செய்ய வழிவகை செய்வதுடன் அலைப்பேசிகள், சிம் கார்டுகள், இணையத் தொடர்புள்ள சாதனங்களை தடைச் செய்யும் உதாரண பொருட்களை சுட்டுக்காட்டுகின்றது.

இம்மசோதா சட்டமாகும் பட்சத்தில், எவ்வித முன்னறிவிப்புமின்றி தடுப்பில் உள்ளவர்களை சோதிப்பதற்கான அதிகாரத்தை ஆஸ்திரேலிய எல்லைப்படை அதிகாரிகளுக்கு வழங்கின்றது.

அதே சமயம், அலைப்பேசிகள் மீது பொத்தம் பொதுவான தடையாக இது இருக்காது என ஆஸ்திரேலிய குடிவரவு துறை அமைச்சர் அலன் டஜ் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் குறித்து தவறான காட்சிகள், தீவிரவாத தரவுகள், அலைப்பேசிகளைக் கொண்ட குற்றக் கும்பல்களை தடுப்பில் உள்ளவர்கள் வழிநடத்தும் பட்சத்திலேயே அவர்களது அலைப்பேசிகள் பறிமுதல் செய்யப்படும் எனக் கூறுகிறார் குடிவரவுத் துறை அமைச்சர் அலன் டஜ்.

ஆனால், இவ்வாறானவர்கள் ஏற்கனவே ஆஸ்திரேலிய குற்றச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளார்கள் எனக் கூறுகிறார் வழக்கறிஞரும் அகதிகள் சட்டம் தொடர்பான கல்வி மையத்தில் பணியாற்றும் ரெஜினா ஜெபீரியஸ்.

அலைப்பேசிகல் தொடர்பான தடை தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கும் பொருந்தும் என முன்பு அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையர், ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம், ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணையம், ஆம்னெஸ்டி இண்டர்நேசனல் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் கவலைத் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

“தடுப்பில் உள்ள மக்களுக்கு அலைப்பேசிகள் என்பது உயிர் காக்கக்கூடியவை. தங்கள் வழக்கறிஞர்களை, மருத்துவர்களை அதன் வழியாகவே தொடர்புக் கொள்வார்கள். முக்கியமாக அவரவர் குடும்பத்துடன், நண்பர்களுடன், சமூகத்தில் உள்ள தனது ஆதரவாளர்களுடன் தொடர்பில் இருக்க அலைப்பேசிகள் அவசியமானவை,” எனத் தெரிவித்திருக்கிறார் தஞ்சக்கோரிக்கையாளர் வள மையத்தின் நினா பீல்ட்.