திலீபனை முன்னிறுத்தி சில கேள்விகள்

திலீபனின் ஏன் உண்ணாவிரதம் இருந்தார்? யாருக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார்?

அவர் இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார். இரண்டு அரசுகளிடமும் நீதிகேட்டு உண்ணாவிரதம் இருந்தார். அதாவது திலீபனின் உண்ணாவிரதம் எனப்படுவது நாட்டுக்கு உட்பட்டது அல்ல.  அதற்கு ஒரு பிராந்திய பரிமாணம் உண்டு.

ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் பிராந்திய பரிமாணத்தை அடைந்ததன் விளைவாக எழுதப்பட்டதே இந்திய – இலங்கை உடன்படிக்கை. அந்த உடன்படிக்கையின் போதாமைகளையும் இயலாமைகளையும் உணர்த்துவதற்காகவே திலீபனும் பூபதியும் உண்ணாவிரதம் இருந்தார்கள். அதாவது மறு வளமாகச் சொன்னால் இந்தியத் தலையீட்டின் விளைவாக ஏற்பட்ட இனப்பிரச்சினைக்கான தீர்வை புலிகள் இயக்கம் ஏற்றுக் கொள்ளவில்லை என்று பொருள்.

இந்தியத் தலையீடு எனப்படுவது 83 கறுப்பு ஜூலையில் இருந்து தொடங்குகிறது. இலங்கை அரசாங்கத்தின் மீது இந்தியா வெளிப்படையாக ராஜீய அழுத்தங்களைப் பிரயோகித்த அதேசமயம் தமிழ் இயக்கங்களுக்கு பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கியது. தமிழகம் ஈழப் போராட்டத்தின் பின்தளமாக மாற இந்திய நடுவண் அரசு அனுமதித்தது. அதன் விளைவாக போராடம் அதனியல்பான வளர்ச்சிப் போக்கில் வளராமல் திடீரென்று வீங்கியது. அது ஒரு குறை அடர்த்தி யுத்தமாக மாறியது. அந்த யுத்தத்தில் ஒரு கட்டத்தில் இந்தியா தலையிட்டது அதன் விளைவே இந்திய-இலங்கை உடன்படிக்கை.

அதாவது ஈழத் தமிழ் அரசியல் பிராந்திய மயப்பட்டதன் ஒரு கட்ட உச்சம் அது. அவ்வாறு பிராந்திய மயப்பட்டதன் விளைவாக உருவாகிய தீர்வை புலிகள் இயக்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் அத்தீர்வு இந்தியாவின் பிராந்திய நலன்களை பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒன்றே தவிர அது தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவில்லை என்று அந்த இயக்கம் குற்றஞ் சாட்டியது.

அது கெடுபிடிப் போர்க்காலம் அமெரிக்க விசுவாசியான ஜெயவர்த்தனா வை வழிக்குக் கொண்டுவர வேண்டிய தேவை ரஷ்யாவுக்கு நெருக்கமான இந்தியாவுக்கு இருந்தது. எனவே அமெரிக்க விசுவாசியை வழிக்குக் கொண்டு வருவதற்கு ஒரு கருவியாக இனப்பிரச்சினையை இந்தியா கையாண்டது. அதன் விளைவாக தமிழகம் ஈழ இயக்கங்களுக்குப் பின் தளமாக மாறியது. இவ்வாறு ஈழப் போராட்டம் பிராந்திய மயப்பட்டதன் ஒரு கட்ட விளைவே இந்திய இலங்கை உடன்படிக்கை ஆகும். அந்த உடன்படிக்கையானது இந்தியப் பேரரசு தனது பிராந்திய நலன்களை வென்றெடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது என்றும் அதில் தமிழ் மக்கள் கறிவேப்பிலை போல பயன்படுத்தப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் இயக்கம் குற்றஞ் சாட்டியது. அதன் விளைவே திலீபனின் உண்ணாவிரதம்.
அதாவது தமிழ் மக்களின் போராட்டம் பிராந்திய மயப்பட்டதன் விளைவு ஒரு யுத்தத்தில் முடிந்தது.

அதன் அடுத்த கட்டம் ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்வதில் முடிந்தது. அதன் விளைவாக இந்தியாவுக்கும் ஈழத் தமிழ் அரசியலுக்கும் இடையில் ஒரு சட்டப் பூட்டு விழுந்தது.

இது முதலாவது கட்டம். இரண்டாவது கட்டம் நோர்வேயின் அனுசரணையோடு கூடிய சமாதானம். இது ஈழப் போராட்டம் மேற்கு மயப்பட்டதைக் குறிக்கிறது. கவர்ச்சி மிக்க தமிழ் புலம்பெயர் சமூகம் நிதிப் பலம் மிக்கதாக எழுச்சி பெற்ற ஒரு சூழலில் ஈழப் போராட்டம் அதிகமதிகம் மேற்கு மயப்படலாயிற்று. இந்தியாவோடு ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக போராட்டம் அதிகரித்த அளவில் மேற்கை நோக்கிச் சென்றது. அது ஒரு நிறை அடர்த்தி யுத்தமாக மாறியது. அதன் விளைவே நோர்வேயின் அனுசரனையுடனான ரணில்-பிரபாகரன்  உடன்படிக்கையாகும்.

இந்த உடன்படிக்கையும் ஒரு கட்டத்தில் முறிக்கபட்டு யுத்தத்தில் முடிவடைந்தது. அந்த யுத்தமே ஈழப்போரின் இறுதிக் கட்டமாக அமைந்தது. இதில் நோர்வேயின் சமாதான அனுசரணை தொடர்பில் தமிழ் தரப்பில் ஒரு பகுதியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். குறிப்பாக 2009 இற்குப் பின் சோல் ஹெய்ம் தெரிவித்து வரும் கருத்துக்களுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த விமர்சனங்கள் ஏன் வருகின்றன?

ஏனென்றால் நோர்வேயின் அனுசனையுடனான சமாதான முன்னெடுப்புக்கள் தமிழர்களின் போராட்டத்துக்கு வைக்கப்பட்ட ஒரு பொறி என்றும் அந்தப் பொறியை உடைத்துக் கொண்டு வெளியேறிய விடுதலைப் புலிகளை முழு உலகமும் திரண்டு தோற்கடித்து விட்டது என்றும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். 2009 இற்குப் பின் சோல் ஹெய்ம் தெரிவித்து வரும் கருத்துக்கள் அவர்களை ஆத்திரப்படுத்துகின்றன.

அதாவது ஈழப்போர் பிராந்திய எல்லைகளைக் கடந்து ஐரோப்பிய மயப் பட்டதன் விளைவாக உருவாகிய ஒரு சமாதான முன்னெடுப்பு புலிகள் இயக்கத்தை தோற்கடிப்பதில் முடிவடைந்தது. அது காரணமாக இப்பொழுது நோர்வேயின் சமாதானத் தூதுவர் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். இது இரண்டாவது கட்டம்.

மூன்றாவது கட்டம் ஐ.நாவின் ஜெனிவா மைய அரசியல். ஜெனிவா மைய அரசியல் எனப்படுவது இனப்படுகொலைக்கு எதிரான நீதியைத் தேடும் அரசியலாகும். 2009-ல் இருந்து தொடங்கி புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகமே அதை நோக்கி அதிகமாக உழைத்தது. அதன் விளைவாக 2013 இல் இருந்து தொடங்கி ஐ.நா தீர்மானங்கள் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக வெளி வரத் தொடங்கின.

அதேசமயம் சீன சார்பு ராஜபக்சவை வழிக்குக் கொண்டு வருவதற்காக மேற்கு நாடுகள் தமிழ்ப் புலம் பெயர்ந்த சமூகத்தைக் கையாண்டு அரசாங்கத்துக்கு எதிரான உணர்வுகளை ஜெனிவாவை நோக்கி குவிமையப் படுத்தின.

இவ்வாறு மேற்கு நாடுகளின் தலையீட்டின் இரண்டாவது கட்டம் எனப்படுவது 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐநாவில் நிறைவேற்றப்பட்ட முப்பதின் கீழ் ஒன்று தீர்மானத்தோடு அதன் ஒரு கட்ட உச்சத்தை அடைந்தது. 30/1 தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை தீவுக்கு ஐ.நா நிலைமாறு கால நீதியை முன்மொழிந்தது.
எப்படி இந்தியா தனது பிராந்திய நலன்களை முன்னிறுத்தி இந்திய-இலங்கை உடன்படிக்கையைச் செய்ததோ அப்படித்தான் மேற்கு நாடுகளும் சீன சார்பு ராஜபக்சக்களை தோற்கடிக்க அல்லது சுற்றி வளைக்க தமிழ் மக்களின் இழப்புக்களை ஒரு கருவியாகக் கையாண்டு முடிவில் ஒரு ஆட்சி மாற்றத்தையும் கொண்டு வந்தன. தமிழ் மக்களில் பெரும் பகுதியினர் கேட்டது இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியை. ஆனால் மேற்கு நாடுகளும் ஐ.நாவும் பரிந்துரைத்ததோ நிலைமாறு கால நீதியை.

ஆனால் கடந்த ஐந்து ஆண்டு காலம் நிலைமாறு கால நீதியை ஓரழகிய பொய்யாக்கி விட்டது. இப்பொழுது யுத்த வெற்றி வாதம் மறுபடியும் அசுர வெற்றி பெற்று மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்குக் கிட்டவாக வந்து நிற்கிறது. அது நிலைமாறுகால நீதியின் அனைத்து அம்சங்களையும் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது. ஐநா தீர்மானத்துக்கான இணை அனுசரணைப் பொறுப்பில் இருந்து விலகப் போவதாக அச்சுறுத்துகிறது. திலீபனை நினைவு கூர்வதை தடை செய்கிறது. அதாவது இனப்பிரச்சினை மேற்கு மயப்பட்டதின் இரண்டாவது கட்டம் இப்பொழுது ஒரு முட்டுச் சந்தில் வந்து நிற்கின்றது. நிலைமாறுகால நீதியானது இலங்கைத் தீவை பொறுத்தவரை அனாதையாகி விட்டது.

மேற்கண்ட மூன்று கட்டங்களையும் நாம் தொகுத்து பார்ப்போம்.

கடந்த 42 ஆண்டுகளுக்கு மேலாக இனப்பிரச்சினை பிராந்திய மயப்பட்டதன் விளைவாகவும் மேற்கு மயப்பட்டதன் விளைவாகவும் உருவாக்கப்பட்ட மூன்று உடன்படிக்கைகள் தொடர்பாகவும் தமிழ் மக்கள் திருப்தியோடு இல்லை. இந்த மூன்று உடன்படிக்கைகளும் தங்களை ஏமாற்றி விட்டதாக அல்லது தோற்கடித்து விட்டதாக அல்லது தம்மை கறிவேப்பிலை போல அல்லது ஒரு மூத்த இலக்கியவாதியின் வார்த்தைகளிற் கூறின் “ஆணுறை” போல பயன்படுத்தி விட்டு தூக்கியெறிந்து விட்டதாக ஈழத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் நம்புகிறார்கள்.

இத்தோல்விகரமான  நான்கு தசாப்த காலத்துக்கும் மேலான வரலாற்றிலிருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த நான்கு தசாப்த கால வரலாற்றையும் காய்தல் உவத்தல் இன்றி வெட்டித் திறந்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அப்பொழுதுதான் தோல்விகளுக்கான காரணங்களைக் கண்டு பிடிக்கலாம். ஏமாற்றப்பட்டத்திற்கான காரணங்களைக் கண்டு பிடிக்கலாம். வெளித் தரப்புக்களை தமிழர்கள் என் வெற்றிகரமாகக் கையாள முடியவில்லை என்பதற்கான காரணங்களைக் கண்டு பிடிக்கலாம். இல்லையென்றால் மீண்டும் ஒரு தடவை வெளித் தரப்புக்கள் ஈழத் தமிழர்களை தங்களுடைய பிராந்திய மற்றும் பூகோள நோக்கு நிலைகளில் இருந்து கையாள முற்படுவார்கள்.

கடந்த  42 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு சிறிய இனம் கறிவேப்பிலையாக பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்டு வருகிறது. கடந்த 42 ஆண்டுகளாக வெளித் தரப்புக்கள் ஈழத் தமிழர்களை வெற்றிகரமாக கையாண்டு வந்துள்ளன. மாறாக ஈழத் தமிழர்களால் வெளித் தரப்புக்களை வெற்றிகரமாகக் கையாள முடியவில்லை. என்பதனால்தான் ஒவ்வொரு கட்டத்திலும் ஈழத்தமிழர்கள் வெளித் தரப்புக்கள் முன்வைக்கும் தீர்வுகளை எதிர்க்கிறார்கள். அல்லது சமாதானத்தின் அனுசரணையாளர்களைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

இந்த வரலாற்றைக் கற்றுக்கொண்டு வெளித் தரப்புக்களை வெற்றிகரமாக கையாளும் ஒரு வழி வரைபடத்தை ஈழத்தமிழர்கள் எப்பொழுது வரையப் போகிறார்கள்?

  • நிலாந்தன்