“தமிழ்த் தேசியத்திலும் தமிழர் நலனிலும் அக்கறை கொண்டு செயற்படுபவர்கள் கட்சி அரசியலுக்கு அப்பால் காலத்தின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் கருதி மக்கள் நலன் சார்ந்து சிந்தித்து ஓரணியில் திரளவேண்டியது அவசியம். இல்லையேல் நாம் தொடர்ந்தும் இவ்வாறு புலம்பிக்கொண்டிருக்கும் நிலை ஏற்படும்” என, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் உப தலைவரும் இணை பேச்சாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அளித்த விசேட செவ்வியில் தெரிவித்திருக்கின்றார்.
அவரது செவ்வியின் முழு விவரம் வருமாறு,
கேள்வி :- இந்தியாவை மீறி 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை ஒழிக்க முடியாது என்று கூறப்படுகிறதே ?
பதில் :- 1987 ஜுலை 29 ஆம் திகதி இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அப்போதைய ஜனாதிபதி ஜெ.ஆர். ஜெயவர்த்தன இலங்கைத் தமிழ் மக்கள் சார்பாக இந்திய பிரதமராக இருந்த ஸ்ரீ.ராஜிவ் காந்தியும் இவ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்கள். இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அரசியல் சாசனத்தில் 13 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த 13 ஆவதுதிருத்தம் போதுமானதல்ல என்பதை பல்வேறுபட்ட தமிழ் கட்சிகளும் இந்திய அரசாங்கத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் சுட்டிக்காட்டி இருந்தன.
இதில் பேச்சுவார்த்தை மூலம் பேசித் தீர்த்துவைக்கக்கூடிய பல்வேறுபட்ட விடயங்கள் பேசித் தீர்க்கப்படும் என்று கூறியபொழுதும் கூட பின்னர் அவ்வாறான பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை. எனவே, தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் 13 ஆவது திருத்தம் தமிழ் மக்களினுடைய அபிலாசைகளைப் பூர்த்திசெய்யக் கூடியவகையில் ஓர் முழுமை பெற்ற திருத்தமல்ல.
இவை ஒருபுறமிருக்க, 13 ஆவது திருத்தத்தில் மாகாண சபைகளுக்கென விதந்துரைக்கப்பட்ட பொலிஸ், காணி அதிகாரங்களும் இன்னும் பல்வேறுபட்ட அதிகாரங்களும் இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படாமலேயே இருக்கின்றது. அது மாத்திரமல்லாமல் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பலவிடயங்களை மத்திய அரசாங்கம் மீளப்பெற்றுக் கொண்டுள்ளது.
அதேபோல் வடக்கு-கிழக்கு இணைக்கப்பட்டு ஒரு மாகாணமாக்கப்பட்டது என்ற விடயம் மறுதலிக்கப்பட்டு வடக்கு, கிழக்காக பிரிக்கப்பட்டு இரண்டு மாகாணங்களாகவே இருந்து வருகின்றது. இவ்வாறான ஓர் சூழ்நிலையில் 13 ஆவது திருத்தத்தையே இல்லாமல் செய்வதற்கு அரசாங்கத்தின் ஒரு பகுதியினர் முயற்சி செய்து வருவதையும் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.
தென்னிலங்கை அரசியல் வாதிகளைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான அதிகாரங்களும் கிடைக்ககூடாது என்பதில் மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கின்றார்கள். மகிந்த ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதியாக இருந்தபொழுதும் ஐ.நா செயலாளர் நாயகத்துக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் 13 ஆவது திருத்தத்துக்கு மேலதிகமாகச் சென்று உரிமைகளை வழங்குவேன் என உறுதிமொழிகளை வழங்கியிருந்தார். ஆனால் அவையனைத்தும் வெறும் உறுதிமொழிகளாக இருந்ததே தவிர அவற்றை நடைமுறைப்படுத்த எந்தவொரு காலகட்டத்திலும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்திய – இலங்கை ஒப்பந்தமென்பது இந்தியா – இலங்கை என்ற இரண்டு நாடுகளுக்கிடையில் ஏற்படுத்தப்பட்ட ஓர் சர்வதேச ஒப்பந்தமாகும். அந்த ஒப்பந்தத்தின் ஒரு பிரிவான வடக்கு–கிழக்கு இணைப்பு என்பது இரு தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும் கூட பின்னர் ஒரு தலைப்பட்சமாக வடக்கும் கிழக்கும் இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. இருதரப்பு ஒப்பந்தமொன்றை ஒருதரப்பினர் எந்த விதமான பேச்சுவார்த்தைகளோ ஒப்புதல்களோ இல்லாமல் அதில் ஒரு பிரிவையோ ஒப்பந்தத்தையோ முழுமையாக விலக்குவது சர்வதேச சட்டங்களுக்கு ஏற்புடையதல்ல. இதனைப் போன்றே 13 ஆவது திருத்தமென்பதும் இந்தியாவினுடைய ஒப்புதலின்றி முழுமையாக அகற்றப்படுமாக இருந்தால் அது இரு தரப்பு ஒப்பந்தத்தை மீறுகின்ற செயற்பாடாகவே இருக்கும். ஆகவே அவ்வாறான ஒரு முயற்சியில் இலங்கை அரசாங்கம் ஈடுபடுமா என்ற ஒரு கேள்வி எழுகின்றது.
ஆனால், சிங்கள–பௌத்த தேசியவாதிகளினுடைய கைகளுக்குள் அகப்பட்டிருக்கும் பொதுஜன பெரமுன அரசாங்கம் முழு இலங்கையிலும் சிங்கள–பௌத்த மேலாதிக்கத்தை நிறுவ வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றது. தமக்கு கிடைத்த மூன்றில் இரண்டு பாராளுமன்ற பெரும்பான்மையுடன் சாதிப்பதற்கு முயற்சி செய்து வருகின்றது. ஜனாதிபதி உட்பட பல்வேறுபட்ட அமைச்சர்களும் சிங்கள பௌத்த மேலாதிக்க எண்ணங்களுக்கு ஆட்பட்டவர்களாகவே இருக்கின்றார்கள்.
இந்த நிலையில் 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக நீக்கப்படாவிட்டாலும் அதில் இருக்கக்கூடிய முக்கியமான விடயதானங்கள் நீக்கப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் நிறையவே உண்டு. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் தமிழ்மக்கள் சார்பாக இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி கையெழுத்திட்டிருந்தார். தமிழ் மக்கள் சார்பாக தமிழ் அரசியல் கட்சிகளோ ஆயுதப் போராட்ட களத்தில் இருந்த இயக்கங்கள் எதுவுமோ கையெழுத்திடவில்லை.
இந்தச்சூழ்நிலையில் இலங்கை தமிழ்மக்கள் சார்பாக கையெழுத்திட்ட இந்திய அரசிற்கு இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் ஒவ்வொரு ஷரத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் அவர்களுக்கு இருக்கிறதென்று நாம் கருதுகிறோம். 13 ஆவது திருத்தத்தைப் பாதிக்கக்கூடிய வகையில், இலங்கையரசாங்கம் மாற்றங்களைக் கொண்டுவர முயற்சிப்பின் இந்தியரசு தமது கடமையை உணர்ந்து செயற்படும் என்று எதிர்பார்க்கின்றோம்.
கேள்வி :- பெரும்பான்மை ஆதரவு கிடைக்கப் பெற்றமைக்காக மக்களின் உரிமைகளை நீக்க முயற்சிப்பது ஜனநாயக கொள்கை மிக்க செயற்பாடாகுமா?
பதில் :- நிச்சயமாக இல்லை. ஆனாலும் நீங்கள் கூறியவாறு பெரும்பான்மை ஆதரவைக் கொண்டிருக்கின்றார்கள். மக்களிடமும் ஆணை பெற்றிருக்கின்றார்கள். ஆகவே, இந்த திருத்தத்தைக் கொண்டு வருவதை சரி என்றே வாதிடுவார்கள். வாதிட்டும் வருகின்றார்கள். ஆளும் கட்சிக்குள் உள்ளவர்கள் ஜனநாயகத்தை விரும்புபவர்களாக இருந்தால் இதனை மாற்றியமைக்க முடியும். ஆனால் ஆட்சியில் அமர வேண்டும் அமைச்சுப் பதவி வேண்டும் என்று இருக்கக்கூடிய ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 ஆவது திருத்தத்துக்கு ஒத்துப்பாடுவார்களே தவிர அதில்; இருக்கக்கூடிய ஜனநாயக விரோத கருத்துக்களை அறிந்து அவற்றை மாற்றியமைக்க முயற்சி செய்யமாட்டார்கள். இவ்வாறான ஒரு சூழ்நிலையில் ஆளும் கட்சியிடமிருந்து நாங்கள் ஜனநாயகத்தை எதிர்பார்ப்பது என்பது ஒரு பகல்கனவாகும்.
கேள்வி :- நாடாளுமன்றத்தை அடிப்படையாக கொண்ட ஆட்சிமுறை ஏற்படுத்தப்படுவதென்பது சாத்தியமானதா ?
பதில் :- ஜெ.ஆர். ஜெயவர்த்தனா நிறைவேற்று அதிகாரமுள்ள ஆட்சிமுறையையும் விகிதாசார தேர்தல் முறையையும் 1978 ஆம் ஆண்டு புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக உருவாக்கியிருந்தார். ஆரம்பத்தில் இந்த முறை சிறுபான்மை தேசிய இனங்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என்று கூறப்பட்டபொழுதும் கூட இன்று அது சிறுபான்மை தேசியஇனங்களை அடிமைப்படுத்தக்கூடிய வகையில் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இதன் காரணமாகவே பதவிக்கு வந்த ஒவ்வொரு ஜனாதிபதியும் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழிப்போம் என்ற உறுதியைக் கொடுத்தே பதவிக்கு வந்தார்கள். வந்தபின்னர் அதிகாரத்தை விட்டுக்கொடுக்க யாருமே தயாராக இருக்கவில்லை. மைத்திரிபால சிறிசேனா மாத்திரம் ஒருபடி இறங்கிவந்து சில அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு விட்டுக்கொடுத்தார். ஆனால் இன்று அவற்றை மீண்டும் இல்லாமல் செய்து அந்த அதிகாரங்களை ஜனாதிபதிக்கு கையளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.
இந்த ஜனாதிபதி ஆட்சிமுறை சர்வாதிகாரத்தை, குடும்ப ஆட்சியை நிலை நிறுத்துவதாகவும் இருந்து வருகின்றது. ஆகவே, அந்த வகையில் தனிமனிதனின் மேல் அதிகாரங்களைக் குவித்து சர்வாதிகாரத்தை நோக்கி செல்வதையும் விட முழுமையான பாராளுமன்ற ஆட்சிமுறை ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் மக்களாட்சியை உருவாக்கவும் முக்கியமானது. அதேபோல், இப்போது இருக்கும் விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் மாவட்ட ரீதியிலான வேட்பாளர்களை நியமிப்பதும் அவர்களது விருப்பு வாக்குகளுக்காக போட்டி போடுவதும் மிகமோசமான ஒருமுறையாக இருந்துவருகின்றது. எனவே சிறுபான்மை இனங்களின் பிரதிநிதித்துவத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்றக்கூடிய வகையில் இலகுவான தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
கேள்வி :- வடகிழக்கில் தமிழ்தேசிய அரசியல் தளம் பலவீனப்பட்டுள்ளதென கருதுகின்றீர்களா ?
பதில் :- தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கடந்தகால நடவடிக்கைகள் குறிப்பாக மைத்திரி–ரணில் கூட்டு அரசாங்கத்துடன் பங்காளிகளாக செயற்பட்டமை அதேசமயம் ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்குக் கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுத்ததன் ஊடாக சர்வதேச விசாரணை போன்றவற்றை ஏற்படுத்தாமல் இலங்கை அரசாங்கத்தைப் பிணை எடுத்தமை, அதுபோல் புதிய அரசியல் சாசனம் தொடர்பான பிரேரணையை கடந்த அரசாங்கம் நான்கரை வருட காலம் இழுத்தடிப்பு செய்வதற்கு ஒத்துழைத்தமை, யுத்தத்துக்குப் பின்னர் தமிழ் மக்கள் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் காணிப் பிரச்சினை, அரசியல் கைதிகளின் பிரச்சினை, காணாமலாக்கப்பட்டோரது பிரச்சினைகள் போன்றவற்றுக்கு தீர்வுகளை எட்டத் தவறியமை போன்ற காரணங்களால் தமிழ் மக்களுக்கு தங்களை பிரதிநிதித்துவப்படுத்திய கட்சியினர் மீது வெறுப்பும் விரக்தியும் கோபமும் ஏற்பட்டது என்பது வெளிப்படையான உண்மை. அதேசமயம் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்மக்களினுடைய தேசிய இனப்பிரச்சினைகளை கரிசனையுடன் முன்னெடுக்கக்கூடிய சக்திகள் பிரிந்து நின்றமையும் இதனால் அரசு சார்பு கட்சிகள் கூடுதலான வாக்குகளைப் பெற்றுக்கொள்ள பாலம் அமைத்துக் கொடுத்தமையும் மக்களுக்கு மேலும் அவநம்பிக்கைகள் தோன்றுவதற்கு காரணமாக அமைந்திருக்கும்.
யுத்தம் முடிந்து பத்து வருடங்களாகியும் தேசிய இனப்பிரச்சினைக்கோ அன்றாடப் பிரச்சினைக்கோ தீர்வு காணப்படாமல் காலம் தாழ்த்தி செல்லப்படுவதும் மக்கள் அரசியல் கட்சிகள் மேல் நம்பிக்கையிழக்கவும் காரணமாகியிருக்கலாம். அந்த வகையில், வடகிழக்கில் தமிழ்த் தேசியத்தளம் ஓர் பின்னடைவை சந்தித்திருக்கின்றது. இது ஒரு தற்காலிகமான விடயமே. தமிழ்த் தேசியப் பரப்புக்குள் இருக்கக்கூடிய கட்சிகள் தம்மை சுய விமர்சனம் செய்து பரந்துபட்ட அளவில் ஓர் கூட்டு முன்னணிக்குள் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது. அவ்வாறு செய்வதனூடாகவே தமிழ்த்தேசிய சக்திகள் பலம் பெறுவதுடன் மீண்டும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கான காத்திரமான பங்களிப்பை செய்யமுடியும்.
கேள்வி :- தமிழ்தேசிய கொள்கைகளை பின்பற்றுகின்ற கட்சிகள் மாகாணசபை தேர்தலில் ஓரணியில் இணைந்து போட்டியிடுமா ?
பதில் :- தமிழ் மக்களினுடைய நலன்களில் இருந்து தமிழ் மக்களுடைய எதிர்காலத்தை அவர்களது பொருளாதாரத்தை திட்டமிட்டு முன்னெடுத்து செல்லவேண்டுமாகவிருந்தால் தமிழ்த் தேசியக் கொள்கைகளைப் பின்பற்றுகின்ற கட்சிகள் ஒன்றுபடவேண்டும் என்பது மிகமிக அவசியமானது. அந்த வகையில் வருகின்ற மாகாணசபைத் தேர்தலில் அனைவரும் இணைந்து போட்டியிடுவதன் ஊடாகவே மாகாண சபைகளை தமிழ் பேசும் மக்கள் தம்வசம் வைத்திருக்கமுடியும்.
கேள்வி :- வடகிழக்கில் அரசாங்கத்திற்கு ஆதரவான தமிழ்க் கட்சிகளின் செல்வாக்கு அதிகரித்துள்ள நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபைகளை அரசாங்கத்தரப்பு கைப்பற்றும் சூழல் உள்ளதாக கூறப்படுகிறதே?
பதில் :- கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெருந்தொகையான பணம் செலவுசெய்யப்பட்டு தேர்தல் நடைமுறைகளுக்கு விரோதமான பல்வேறுபட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு அரச வேலை வாய்ப்புக்கள் பெற்றுத்தருவதாக உறுதிமொழி அளிக்கப்பட்டு தமிழ்மக்களின் வாக்குகள் கபடத்தனமான முறையில் ஆளும் தரப்பினராலும் அவர்களது நட்புசக்திகளாலும் கவர்ந்தெடுக்கப்பட்டது. அரசாங்கம் மூலோபாயத்தை வகுத்து செயற்பட்டதாகவும் அதன் பிரகாரமே தமிழர்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுவதும் மேலுள்ள அடிப்படையில்தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே, வடக்கு கிழக்கில் செல்வாக்கு அதிகரித்தது என்று கூறுவது செயற்கை தன்மையானதே தவிர வேறெதுவும் இல்லை.
பொருளாதாரத்தில் , ஏற்றுமதியில் வீழ்ச்சி போன்ற காரணிகளால் அடுத்துவரும் மாதங்களுக்குள்
அரசாங்கம் பல்வேறுபட்ட சவால்களை, மக்கள் மத்தியில் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டி ஏற்படும். இவர்களுடைய உள்நாட்டு வெளிநாட்டு கொள்கைகள் இவர்கள் விரும்பியவாறு சர்வதேச ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள தடையாகவும் இருக்கும். இவ்வாறான சூழ்நிலையில் மக்களுக்கு இவர்கள் கொடுத்த உறுதிமொழிகள் எவ்வளவு தூரம் இவர்களால் பின்பற்றப்படும் என்ற கேள்வியும் எழுகின்றது. ஆகவே, வடக்கு கிழக்கில் அரச ஆதரவு கட்சிகளின் தற்காலிக செல்வாக்கு என்பதை தமிழ்தேசிய கட்சிகள் ஒன்றிணைவதன் மூலம் முறியடிக்க முடியும். அப்படி தமிழ்த்தேசிய சக்திகள் ஒன்றுபடுமாக இருந்தால் வடகிழக்கு மாகாணங்களை தமிழ்ப் பெரும்பான்மை கட்சிகள் ஆட்சிபுரிவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். குறிப்பாக கிழக்கை பொறுத்தவரையில் தமிழ் – முஸ்லிம் ஒற்றுமை மிகமிக அவசியமானது. இல்லாத பட்சத்தில் அது சிங்கள கட்சிகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும் என்பதும் மறுப்பதற்கில்லை.
தமிழ்த்தேசியத்திலும் தமிழர் நலனிலும் அக்கறை கொண்டு செயற்படுபவர்கள் கட்சி அரசியலுக்கு அப்பால் காலத்தின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் கருதி மக்கள் நலன் சார்ந்து சிந்தித்து ஓரணியில் திரளவேண்டியது அவசியம். இல்லையேல் நாம் தொடர்ந்தும் இவ்வாறு புலம்பிக்கொண்டிருக்கும் நிலை ஏற்படும்.
நேர்காணல் :- பாக்கியராஜா மோகனதாஸ்