என்னுடய ஆடைகள் வேண்டும்: அலெக்ஸி நவால்னி

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி, தான் மயக்கமடைந்தபோது அணிந்திருந்த ஆடைகளை அதிகாரிகளிடம் கேட்டுள்ளார்.

இதுகுறித்து ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி கூறுகையில், “ நான் ஒன்றில் மட்டும்தான் ஆர்வமாக இருக்கிறேன். என்னுடைய ஆடைகள். நான் மயக்கமடைந்திருந்தபோது அணிந்திருந்த ஆடைகள் எனக்கு வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

‘ஆகஸ்ட் 20 ஆம் தேதி அலெக்ஸி தங்கியிருந்த ஓட்டல் அறையில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் காலி பிளாஸ்டிக் மினரல் வாட்டர் பாட்டில்கள் கிடைத்தன. அதனை நாங்கள் ஜெர்மன் ஆய்வகத்துக்கு அனுப்பினோம். அதன் முடிவில் அலெக்ஸி நவால்னிக்கு விமானத்தில் விஷம் வைக்கப்படவில்லை என்று எங்களுக்குத் தெரிந்தது. வாட்டர் பாட்டிலில்தான் விஷம் வைக்கப்பட்டுள்ளது என்று புரிந்துகொண்டோம்” என்று அலெக்ஸியின் குழுவினர் சமீபத்தில் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தான் அணிந்திருந்த ஆடைகள் வேண்டும் என்று அலெக்ஸி, ரஷ்யாவிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டதை ஜெர்மனி அரசு சமீபத்தில் உறுதிப்படுத்தியது. ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் ஜெர்மனி தெரிவித்தது.

மேலும், அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக தங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதாக ஜெர்மனி தெரிவித்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா முற்றிலுமாக மறுத்துள்ளது. இந்த நிலையில் அலெக்ஸி நவால்னியிடம் விசாரணை நடத்த ரஷ்யா முயன்று வருகிறது.