பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கும் விஷ்ணு விஷால், ஏற்றுக்கொள்ளுங்கள், கற்றுக் கொள்ளுங்கள், வளருங்கள் என்று கூறியிருக்கிறார்.
வெண்ணிலா கபடிகுழு படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். இப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த நீர்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
தான் திரையுலகில் நுழைந்த 11 ஆண்டுகளில் திரையுலகில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பாக கடிதமொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “நான் சினிமாவுக்குள் நுழைந்த 11 ஆண்டுகளில் பல விஷயங்கள் மாறிவிட்டன. பிலிம் ரீலிலிருந்து டிஜிட்டல் சினிமாவுக்கும், இணை இயக்குநர்களிலிருந்து குறும்பட இயக்குநர்கள் வரை அறிமுகமாகி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு திரைத்துறையில் ஆதிக்க செலுத்துவதாகட்டும், கமர்சியல் படங்களில் இருந்து கதைகளுக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களுக்கு மாறியுள்ளது.
பெரிய திரையிலிருந்து மொபைல் திரைகளுக்கு மாறியதாகட்டும், இயக்குநர் நடிகர்களாகவும், இசையமைப்பாளர்கள் ஹீரோக்களாக மாறியிருக்கிறார். கொரோனா காரணமாக ஓடிடி தளத்தால் உலக சினிமா பரவலாக்கப்பட்டு விட்டது. வேறு எந்த பத்தாண்டுகளும் இந்த அளவு மிகப்பெரிய மாற்றங்களைப் பார்த்திருக்காது. இறுதியாக, மாற்றம் ஒன்றே மாறாதது. ஏற்றுக்கொள்ளுங்கள், கற்றுக் கொள்ளுங்கள், வளருங்கள். அது மட்டுமே ஒரே வழி” இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.