கண்டி பூவெலிக்கட பகுதியில் ஐந்து மாடிக் கட்டடம் சரிந்து விழுந்து மூன்று உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளது. அந்த உயிர்களின் பெறுமதி குறித்த கேள்வியே எம் முன் நிற்கும் கேள்வி. அவர்கள் பாதுகாப்பான ஒரு இல்லத்தில்தான் வாழ்ந்தார்கள். ஆனால் அவர்கள் அருகாமை வீடு பாதுகாப்பு இல்லாத வகையில் அமைக்கப்பட்டதனால் அம்மாவும் அப்பாவும் குழந்தையும் என ஓர் அழகிய குடும்பம் இந்தமண்ணில் இருந்து பிரிந்து இலங்கை நாட்டுக்கு ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுத்துச் செல்கிறது.
அந்தப் பாடம்தான் மதிப்பாய்வு. கடந்த பாராளுமன்ற காலத்தில் (2015 -2020) ஓர் இனத்தின் / சமூகத்தின் பிரதிநிதியாக ‘மலையகம்’ என்ற சொல்லை எந்தளவுக்கு உச்சரித்து இருக்கிறேனோ அதே அளவுக்கு நாட்டிற்காக ‘மதிப்பாய்வு’ என்ற சொல்லையும் உச்சரித்து வந்துள்ளேன். இந்த மலையகம், மதிப்பாய்வு இரண்டையும் சுமந்து கொண்டே சர்வதேச மாநாடிகளிலும் திரிந்தேன். இப்போது மலையகத்தை அவரை புறம் வைத்துவிட்டு மதிப்பாய்வு பற்றி தெரிந்து கொள்ளுத் தேவையை இறந்து போன இந்த அழகிய குடும்பத்தின் பெயரில் அஞ்சலி செலுத்தி அறிந்து கொள்வோம்.
மதிப்பாய்வு (Evaluation) என்பது ஒன்றும் உலகத்தில் இல்லாத ஒரு பூதம் கிடையாது. குறிப்பாக மேற்கு நாடுகளில் எல்லாம் சரியாக இருக்கிறது என்கிற மனநிலை இந்த மதிப்பாய்வு கலாசாரந்தான். அதனைஇலகுவாக புரிந்து கொள்ள இந்த பூவெலிக்கட சம்பவத்தை எடுத்துக்கொள்வோம்.
ஒரு வீடு கட்டுவது என்றால் அதில் பங்கு கொள்ளும் நிறுவனங்கள் என நாம் அவதானத்தில் கொள்ள வேண்டியநிறுவனங்களைப் பார்ப்போம். காணி (காணித் திணைக்களம் – land department), அந்த மண் அதில் அமையவேண்டிய கட்டடம் (தேசிய கட்டட ஆராயச்சி நிறுவனம் – National Building Reserch organization – NBRO) அதற்கு அடிப்படை உட்கட்டுமான வசதிகள் வழங்கும் நிறுவனங்கள் (Local Government – for infrastructure உள்ளூராட்சி மன்றங்கள்) போன்றவற்றுடன் குறித்த பகுதியின் சூழல் பிரச்சினைகளை கவனிக்க மத்தியசுற்றாடல் அதிகார சபை (Central Environmental Authority ) பாதைகள், பாலங்கள், மதகுகள், போன்றவற்றைஅமைப்பதன் பொறுப்பு நிறுவன (RDA, PRDA, Local Government , DS), நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு (Drinking Water & Drainage) தொடர்புடைய தேசிய மற்றும் உள்ளூர் நிறுவனங்கள், (National Water supply & Drainage board) (இதில் கழிவகற்றலில் அசுத்த நீர் மலசல கூட கழிவுகள் என இரண்டு அகவை உண்டுஎன்பதும் கவனிக்கத்தக்கது.) தொலைத்தொடர்பு நிறுவனங்கள் (Tele Communication) மின்சார விநியோக நிறுவனம் (electricity board) இப்படி பல அமைப்புகள் சம்பந்தப்படுகின்றன.
ஆனால் இந்த நினுவனங்கள் இடையே இலங்கையில் ஒரு ஒருங்கிணைப்போ கூட்டுணைந்த செயற்பாடுகளோ இல்லை. காணி திணைக்களத்தை உறுதி வாங்க மட்டுமே பயன்படுத்துகிறோம். மலைப் பிரதேசங்கள் அதுவும்குறிப்பாக தோட்டப் பகுதிகளுக்கே விசேடமாக கட்டட ஆய்வு நிறுவனமும், எப்போதாவது சூழல் பாதுகாப்பு நிறுவனம் எதேட்சையகவும் பயன்பாட்டுக்கு வரும். மற்றப்படி ஏனைய நிறுவனங்கள் அவரவர் இஷ்டத்தைக்கு அனுமதியைக் கொடுக்கிறார்கள். அதற்குள் ஊழல் உச்ச அளவிலும் நடக்கிறது. வீதி யை காப்பட் இட்டபிறகுதான் குடிநீர் வழங்கும் நிறுவனம் தடதடவென இயந்திரம் போட்டு உடைப்பார்கள். அவர்களது வேலைமுடிந்ததும் அள்ளிப்போட்டு மூடிவிட்டு போவார்கள். அடுத்து தொலைபேசி, மின்சாரக்கார்கள் வந்து தனித்தனியாக குழிதோண்டி மூடிவிட்டு போவார்கள். காப்பட் இட்ட வீதி மீண்டும் குண்டும் குழியுமாக இருக்கும். ஒரு ஒழங்கையில் இரண்டு மாடி கட்டடம் தான் அமைக்கலாம் என்ற விதி இருந்தால் அதில் ஒரு வசதிகாரர் ஐந்து மாடி கட்டுவார். ஏன் ‘அப்பார்ட் மண்ட்’ கூட கட்டுவார்கள். அதற்கு அனுமதி எடுத்துக் கொள்ளும் “நுட்பங்கள்” தெரியும்.
ஒரு ஒழங்கைக்குள் திடீரென ஒரு ‘ அப்பார்ட்மண்ட்’ வந்தால் வீதிப் பாவனை (மக்கள் – வாகனம்), நீர்ப்பாவனை (குடிநீர் – கழிவு நீர்), என பலவிடயங்கள் விரிவுபடுத்தல் வேண்டும். அதற்கான வாய்ப்பும் வேண்டும். ஒரு வீட்டுக்கு வந்த ஒரு அங்குல அகல குடிநீர்க் குழாய் வழிவந்த குடிநீரை ஒரு பத்து மாடி “அப்பார்ட்மென்டுக்கு” எடுக்க பயன்படுத்துவார்கள். அதற்காக நிலக்கீழ் தாங்கி அமைத்து ‘மோட்டார்’ போட்டு மேலே தாங்கிக்கு ஏற்றி ‘அப்பாட்மென்டின் கம்பொட்டபல்’ ஐ உறுதி செய்வார்கள். சுற்றியுள்ள மக்களின் வீடுகளுக்கு தண்ணீர் போகாமல் ‘அன்கொம்பட்டபல்’ ஆவது பற்றி இவர்களுக்கு அஅக்கறை இருக்காது.
இதுபோல நேரெதிர் பக்கங்களைப் பேசிக் கொண்டே போகலாம். சரி, மீண்டும் பூவெலிக்கட சம்பவத்துக்கு வருவோம். இப்போது உணரப்பட்ட புவி நடுக்கம், மாடி வீட்டுக்கார்ரகள் தெரிந்து கொண்டே ஓடிவிட்டார்கள், அருகில் உள்ள வடிகால் அல்லது கழிவுக் கால்வாய் அமைததவர்கள் காரணம் என்றெல்லாம் கதை வருகிறது. ஆனால், மேலே கூறிய எல்லா நிறுவனங்பளும் இந்த விடயங்களுக்கு பொறுப்பு என்பதுதான் ‘மதிப்பாய்வு’. அதாவது நடைபெற்ற தவறுக்கு பொறுப்பு எனக் கொள்ளக்கூடாது. இத்தகைய தவறு நடக்காமல்இருப்பதற்கான பொறுப்பு.
இவற்றை ஒன்றிணைத்து செயற்பட இலங்கை நாட்டில் ஒரு தேசிய கொள்கையே இருக்கவில்லை. 2002 / 2004 ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு பின்னர் ஆட்சி மாற்றத்தால் கைவிடப்பட்டு 2013 ல் எதிர்கட்சியில் இருந்தபோது கபீர் ஹாசிம் (பாராளுமன்ற உறுப்பினர்) தூசுதட்டப்பட்டு 2016 அவரது வழிகாட்டலில் நாங்கள் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு உயிர்கொடுத்து 2018 செப்டெம்பர் 14 பிரதமர் ரணில் விக்கிரமசாங்க தலைமையில் “தேசிய மதிப்பாய்வு கொள்கை”யை அமைச்சரவை அங்கீகாரத்துடன் கொண்டுவந்தோம். அது தொடர்பான (இந்த கட்டட அமைப்பு மட்டுமல்ல அதற்குள பலபாரிய தேசிய திட்டங்கள் முதல் சட்ட விடயங்கள்வரை அடக்கம்) சர்வதேச மாநாட்டினை மூன்று நாட்கள்கொழும்பில் நடாத்தினோம். ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், பிரதி சபாநாயகர் (ஆனந்த குமாரசிரி – இலங்கை பாராளுமன்ற அமைப்பு தலைவர்), கபீர் ஹாசிம் (சர்வதேச பாராளுமன்ற அமைப்பு தலைவர்) மயந்த திசாநாயக்க , நான் (கட்டுரையாளர்) பொருளாளர் என செயற்பட்டோம். வெற்றிகரமான மாநாட்டின்விளைவாக 75 நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 200 க்கு மேல் வருகை தந்திருந்தார்கள். கொள்கைவடிவமைப்பு விடயத்தை அறிந்து கொள்ள மயந்த திசாநாயக்கவை சிறப்பு அதிதியாகவும் மதிப்பாய்வுக்கான பாராளுமன்றகுழு வை அமைத்தல் வேண்டும் என்ற எனது யோசனைக்காகவும் கிரிகிஸ்தான் நாட்டு பாராளுமன்றத்துக்கு நாங்களை அழைக்கப்பட்டு உரையாற்றச் செய்யப்பட்டோம்.
கிரிகிஸ்தான் (முன்னைய சோவியத் நாடு) நாட்டில் எங்கள் இருவரையும் சபாநாயகரின் இரண்டு பக்கங்களிலும் அமரச் செய்துகௌரவம் செய்தார்கள். எங்கள் இருவரோடு கபீர் ஹாசிம் அமைச்சரையும் அமரவைத்து பாராளுமன்ற ஊடக அறையில் பேட்டி எடுத்து அவர்கள் மொழியில் வெளியிட்டார்கள். கிரிகிஸ்தானில் மதிப்பாய்வு சட்டம் கொண்டுவந்தார்கள். பிலிப்பைன்சில் கொள்கை கொண்டு வந்தார்கள். அதற்கு உந்துதல் இலங்கையில் நடந்த மாநாடுஎன்று எங்களைப் பாராட்டினார்கள். கிரிகிஸ்தான் என்னை இரண்டு தடவை அந்த நாட்டுக்கு அழைத்தது.
இந்ந விடயத்தில் சட்டத்தை கண்காணிக்கும் அம்சமும் அடங்கும். அதாவது நாங்கள் உருவாக்கிக் கொள்கிறசட்டத்தை காலத்திற்கு காலம் மதிப்பாய்வு செய்து மறுசீரமைத்தல் வேண்டும் என்பது. சட்ட உருவாக்கத்தின்முன்னரும் பின்னரும் கூட இது நடக்கவேண்டும். இதனை கண்காணிப்பு (scrutinizing) எனலாம். இதுவும்மதிப்பாய்வு கோட்பாட்டு அடிப்படையில் நான் முன்வைக்க, அந்த முன்மொழிவை சமர்ப்பிக்க ஜனநாயகத்துக்கான வெஸ்ட் மினிஸ்ட்டர பவுன்டேசன் என்னை இங்கிலாந்துக்கு அழைத்து கருத்து பகிரச் சொன்னது. அதனை உயர்மட்ட அரசியல் உரையாடல் என்பார்கள் (high level political forum). அதில் அதிகபட்சம் 15 பேர்தான். இங்கிலாந்து பிரபுக்கள் சபை உறுப்பினர்கள் முதல் ஹல் பல்கலைக்கலகபேராசிரியர்கள் அவரை அதில் அடக்கம். ஈஸ்ட்டர் தாக்குதல் நடந்த இரண்டு நாளில் நான் இங்கிலாந்தில் நின்றது இதற்குத்தான். என்கூட பாராளுமன்ற ஆய்வாளர் அஜிவாடீனும் கலந்துகொண்டார். எனதுகருத்துக்களை ஏற்றுக்கொண்டு உடனடுத்து இடம்பெற்ற கிழக்காசிய மாநாடு ஒன்றில் உரையாற்ற வருமாறு அழைத்தார்கள். அவர்களே அனுசரணையும் வழங்கினார்கள். மியன்மார் நாட்டில் சுமார் 1500 பேராளர்கள்மத்தியில் இந்த Pre & Post Legislative Scrutinization சம்பந்தமாக உரையாற்றினேன். அவுஸ்திரேலிய, இந்தோனேசிய, இங்கிலாந்து அரசியல்வாதிகள் அறிஞர்களுடன் அமர்ந்து சரமாறியான கேள்விகளுக்கும் பதிலும் அளித்தேன். இதே மாநாட்டில் இலங்கைப் பாராளுமன்றத்தில் இப்போதைய அனுபவங்களைப் பகிர பாராளுமன்ற உதவி செயலாளர் நாயகம் டிக்கிரி தென்னக்கோன் மற்றும் பாராளுமன்ற அலுவலர் நிப்புனிக்கா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். “நீங்கள் எமது நாட்டிற்கு பெருமை சேர்க்கிறீர்கள்” என்று அந்தநிகழ்வு முடிய என்னை வாழ்த்தினார்கள்.
இலங்கையில் அப்படி பெருமைப்படும்படியாக ஒன்றும் நடந்துவிடவில்லை. ஆனால் ஒன்று, பாராளுமன்றத்தினுள் மதிப்பாய்வுக்கான செயன்முறைக்கு ஒரு நிலையான குழு வேண்டும் என அதனைத் தீர்மானிக்கவும் மதிப்பாய்வு சட்டம் இயற்றவும் ஒரு தெரிவுக்குழு வேண்டும் என்ற எனது முன்பொழிவை ஏற்று சபாநாயகர் கரு ஜயசூரிய அனுமதி அளித்தார். எனது வேண்டுகோளை ஏற்று அந்த முன்மொழிவுக்கு மக்கள் விடுதலை முன்னணியும் ஒப்புதல் அளித்து கைச்சாத்து இட்டது. அந்தக் குழுவுக்கு பிரதி சபாநாயகர் தலைமைவகித்தார். இப்படியான ஒரு குழு அமைந்தது இலங்கைப் பாராளுமன்றத்தில்தான் என்பது உலகப்பாராளுமன்றத்திற்கே முதன்முறை என்ற பெருமை உண்டு. அதனை முன்மொழிந்தவன் என்ற பெருமைவேண்டுமானால் எனக்கு வரும்.
அப்படி ஒரு நிலையியற் குழு அமைந்தால் (Standing Committee) அமைந்தால் அதன் பெயர் CODE (Committee on Development Evaluation) என பெயர் வைக்கலாம் என்றும் முன்மொழிவு செய்துள்ளேன். இது COPE போன்றது (Committee on Public Enterprises). COPE க்கும் CODE க்கும் என்ன வித்தியாசம் என்றால் COPE தவறுகள் நடந்த பின்னர் அதனை விசாரிக்கும். மரண விசாரணை மாதிரி. CODE மரணம் நடக்கும் முன்பே உரிய தற்காப்பு வேலையைச் செய்யும். அது எப்படி என்பதை விரிவாக உரை வழங்குவதே எனது சிந்தனையும் பணியுமாக இருந்தது. இதுதான் மதிப்பாய்வில் எனது வகிபாகம்.
இந்த விடயங்களை எல்லாம் முன்னிலைப்படுத்தி அமைக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு மதிப்பாய்வுச் சட்ட மூலத்தை தயாரித்து, நிலையியில் குழு மாத்திரமல்லாது சுயாதீன ஆணைக்குழு அமைக்கவும் பரிந்துரைத்தது. ஆனால் உத்தியோகபூர்வ சமர்பபிக்கு முன்பதாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டுவிட்டது.
இப்போது பூவெலிக்கடை சம்பவத்துக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு வேண்டுமாம் ஹெம்மாத்தகமவில் விழப்போகும் கட்டடத்தை இப்போதே அடையாளம் கண்டு விட்டார்கள். அதற்காக அமையப்போகும் குழு அதனை வீடியோ ஆதாரங்களுடன் இப்படித்தான் விழுந்தது என அறிக்கையிடலாம்.
இப்படியான விபத்துக்களைத் தவிர்க்க அப்பாவி மரணங்களைத் தடுக்க நாட்டை நிலைபேறான அபிவிருத்தி நோக்கி இட்டுச் செல்ல ஜனாதிபதி விசாரணைக் குழுக்களால் மட்டும் முடியாது. ஊழல் அற்ற மக்கள் மனநிலை, ஊழல் செய்யா அதிகாரிகள் அவசியம். அதற்கேற்ப கொள்கை உருவாக்கம், சட்ட ஏற்பாடுகள், கண்காணிப்பு ஏற்பாடுகள் அவசியம். அதுவே பாராளுமனத்தின்/ உறுப்பினர்களின் பணிகளாக இருத்தல் வேண்டும். மதிப்பீடுகளில் (Estimation) (நிதிப் பெறுமானத்தில்) இருந்து ஆரம்பமாகும் கட்டுமானங்கள் (construction) (மதிப்பாய்வு – மதி (அறிவுப்) ப்பெறுமானத்தில் Evaluation) இருந்து ஆரம்பிக்கப்படல் வேண்டும். இது அரசியல்/ கட்சி கட்டுமானத்துக்கும் பொருந்தும்.
இப்போதைய 20 வது திருத்த முன்மொழிவில் அரச நிறுவனங்களுக்கு கணக்காய்வே ( Auditing ) வேண்டாம் என்கிறார்கள். சுயாதீன ஆணைக்குழு (Independent Commission) வேண்டாம் என்கிறார்கள். ஏற்கனவே COPE ஐ முறையாக செய்த சுனில் ஹந்துனெத்தியை மக்கள் வேண்டாம் என்றும், CODE ஐ முன்மொழிந்த மயில்வாகனம் திலகராஜை தலைவர்கள் வேண்டாம் என்றும் தீர்மானித்து விட்டார்கள். வாழ்க ஜனநாயகம்!
பூவெலிக்கட வீடு விபத்தில் பலியான அந்த பிஞ்சுக் குழந்தையின் கால்களில் விழுந்து இந்தத் தேசமே மன்னிப்புக் கோரினாலும் அந்த மூவரையும் நாம் எல்லோரும் கொலை செய்த குற்றம் கழுவப்படாது.
என்னை மன்னித்தருள்வாய் என் குழந்தையைப் போன்ற பிஞ்சுக் குழந்தாயே !
மயில்வாகனம் திலகராஜா