“தமிழினத்தை ஒற்றுமைப்படுத்துவதற்கு எதிரிகளால்தான் முடியும்” என்ற கருத்து மீண்டும் உண்மையாகியிருக்கின்றது. திலீபனின் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நவக்கிரகங்கள் போல, ஒவ்வொரு திசையில் முரண்பட்டுக்கொண்டிருந்த தமிழ்க் கட்சிகளை ஒற்றுமைப்படுத்தியிருக்கின்றது. குறைந்தபட்சம், திலீபன் நினைவேந்தலிலாவது தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட்டிருப்பது தமிழ் மக்களுக்கு கொஞ்சம் நம்பிக்கையைக் கொடுத்திருக்கின்றது.
பலமான ஒரு அரசாங்கம் தென்னிலங்கையில் பதவியேற்றிருக்கின்றது. கடும் சிங்கள – பௌத்த தேசியவாதத்தை தமது கொள்கையாகக் கொண்டுள்ள அந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் எவ்வாறானதாக இருக்கும் என்பது புரிந்துகொள்ள முடியாத ஒன்றல்ல. சிறுபான்மையின மக்கள் அனைவரும் தமது எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. தனிப்பட்ட காரணங்களுக்காக பிளவுபட்டு நிற்காமல், ஒன்றுபட்டு வரப்போகும் நெருக்கடிகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பதையிட்டு சிந்திக்க வேண்டிய காலகட்டம் இது.
திலீபன் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை அரசாங்கம் எவ்வாறான பாதையில் செல்லப்போகின்றது என்பதற்கான ஒரு அடையாளம் மட்டும்தான். இது ஆரம்பமாகவும் இருக்கலாம்.
இலங்கை அரசாங்கத்தினால் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டிருந்த ஒரு காலகட்டத்தில் அஹிம்சைப் போராட்டம் ஒன்றில் தன்னை ஈடுபடுத்தி மரணத்தைத் தழுவியவர்தான் திலீபன். அரசாங்கத்தின் கொள்கையின் அடிப்படையில் காவல்துறையினரின் மனுவை அடிப்படையாகக் கொண்டுதான் நினைவேந்தல்களுக்கு நீதிமன்றம் தடை விதித்திருக்கின்றது. இந்தத் தடை இப்போது நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது.
மறுபுறத்தில் இந்தத் தடையை நீக்கக்கோரி தமிழ்க் கட்சிகள் பல ஒன்றிணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளன. இந்தக் கோரிக்கையை ஜனாதிபதி ஏற்கவில்லை என்றால், அறவளிப் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுப்பதற்கு தமிழ்க் கட்சிகள் தயாராகவுள்ளன. தமிழ்க் கட்சிகளின் கோரிக்கைகளுக்கு இதுவரையில் ஜனாதிபதி பதிலளிக்காவிட்டாலும், அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல வெளியிட்டிருக்கும் தகவல் அரசாங்கத்தின் கருத்தாகவே உள்ளது. “நினைவேந்தலை அனுமதிக்க முடியாது” என்பதுதான் அவரது செய்தி. ஆக, அடுத்த கட்டப் போராட்டத்தை நோக்கிச் செல்வது தமிழ்க் கட்சிகளுக்குத் தவிர்க்க முடியாததாகிவிட்டது.
தமிழ்க் கட்சிகள் ஓரணியில் முன்வைத்துள்ள கோரிக்கைகளை கட்சிகள் பலவும் வரவேற்று அதற்கு ஆதரவைத் தெரியப்படுத்தியிருக்கின்றன. ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அஸாத் சாலி தலைமையிலான தேசிய ஐக்கிய முன்னணி உள்ளிட்ட முஸ்லிம் கட்சிகள், மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி, சிறிதுங்க ஜயசூரிய தலைமையிலான ஐக்கிய சோசலிசக் கட்சி, விக்கிரமபாகு கருணாரத்ன தலைமையிலான நவசமசமாஜக் கட்சி உள்ளிட்ட முற்போக்கு கட்சிகள் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவைத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
“எமது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிடின் நாம் முன்னெடுக்கவுள்ள சாத்வீகப் போராட்டங்களுக்கும் மேற்படி கட்சிகள் ஆதரவு வழங்க முன்வந்துள்ளமையையிட்டு நாம் பெருமகிழ்வு அடைகின்றோம். நாட்டிலுள்ள ஏனைய ஜனநாயகக் கட்சிகள், முற்போக்கு சக்திகள், புத்திஜீவிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் ஆதரவையும் நாம் எதிர்பார்த்திருக்கின்றோம்” என இது தொடர்பாக தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது.
ஆக, தமிழ்க் கட்சிகள் முன்வைத்துள்ள இந்தக் கோரிக்கையின் நியாயத்தை சிங்களக் கட்சிகள் சில உட்பட பெரும்பாலான கட்சிகள் ஏற்றுக்கொண்டிருப்பது முக்கியமானதாகும். சிறுபான்மையினர் மீது கட்டவிழ்த்துவிடப்படும் இந்த அடக்குமுறை நாளை அனைத்து மக்கள் மீதும் தொடரும் அபாயம் உள்ளதையும் கவனத்திற்கொள்ள வேண்டும்.
அரசுக்கு எதிராக இரண்டு ஆயுதப் போராட்டங்களை முன்னெடுத்து பல ஆயிரக்கணக்கான உயிர்ப் பலிகளுக்குக் காரணமாக இருந்த ஜே.வி.பி.யின் தலைவர்களை நினைவுகூர்வதற்கான உரிமையை அரசாங்கம் ஒருபோதும் மறுத்ததில்லை. அதனை மறுக்கப்போவதுமில்லை. அதற்கான காரணம் அனைவருக்கும் தெரியும்.
நினைவுகூருவதற்கான உரிமையில் கூட இனவாதம்தான் மேலோங்கியிருக்கின்றது!
இந்த இடத்திலாவது தமிழ்க் கட்சிகளிடையே ஒருமைப்பாடு – ஒற்றுமை ஏற்பட்டிருப்பது முக்கியமானதாகும். திலீபனின் நினைவேந்தலுக்காக இன்று ஓரணியில் வந்திருக்கும் தமிழ்க் கட்சிகளிடையே கொள்கை ரீதியில் பாரிய முரண்பாடுகள் இல்லை. முரண்படுவதற்கு ஒரு சில தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம். ஆனால், ஒன்றாக நிற்க வேண்டும் என்பதற்கு பல காரணங்கள் – பலமான காரணங்கள் உள்ளன.
இந்த ஒற்றுமை தொடரவேண்டும். பொதுவான விடயங்களில் ஒன்றுபட்டுச் செயற்படுவதன் மூலமாக மட்டுமே மக்களுக்கும் நம்பிக்கையைக் கொடுக்க முடியும். முரண்பாடுகளுக்கான தனிப்பட்ட காரணங்களைக் களைந்து – ஒன்றாக நின்று செயற்பட வேண்டிய காலத்தின் கட்டாயத்தை தமிழ்க் கட்சிகள் உணர்ந்துகொள்வார்கள் என நம்புகின்றோம்.
நன்றி – தினக்குரல்